Thursday, September 22, 2005

அரசு ஊழியர்கள் - பகுதி - 1

என் தந்தை ஒரு அரசு அலுவலராக பணி வாழ்வு துவங்கி, அரசு அதிகாரியாக உயர்ந்து ஓய்வு பெற்றவர். நம் சமுதாயத்தில் அரசு பணி புரிபவர்கள் அனைவரையும் 'எதிரி'யாகப் பாவிக்கும் மனநிலை பெரும்பாலும் உள்ளது. திரைப் படமாகட்டும்., வேறு ஊடகங்களாகட்டும் அரசு ஊழியர்கள் என்றாலே "எமனை"ச் சித்தரிப்பது போலத்தான் சித்தரிக்கின்றன.

லஞ்சம் அதிகாரிகளால்தான் தலைவிரித்தாடுகிறது., 'அரசியல்வாதி 5 வருடம் இருந்துட்டுப் போயிருவான்., நீ ஆயுசு முழுவதும் வாங்குற' போன்ற வசனங்கள்... 5 வருடம் கழித்து அடுத்த ஆட்சி வந்தா ஊழல் தொடரத்தானே செய்யுது., வங்குற ஆளுகதான் வேற. இதுல ஏன் அரசு ஊழியர்கள் மேல மட்டும் இம்புட்டு கோபம்?. "மெல்ல உள்ள நுழைஞ்சர்றது., அப்புறம் மெதுவா சொந்தம், பந்தம், புள்ள, குட்டி மொத்தக் குடும்பத்தையும் உள்ள இழுத்திர்றது" - இப்படி ஒரு வசனம்., ஒளி ஓவியர் இயக்கிய ஒரு படத்தில். அரசு அலுவலர்கள் 4 பேர் சேர்ந்து மொத்த ஊரையும் தூக்கிட்டாங்க.... ஊரு பேரு அத்திப்பட்டி... படம் பேரு உங்களுக்குத் தெரியும். அது மட்டுமா?., அந்த ஊர தமிழ்நாட்டு வரை படத்துல இருந்தே தெலைச்சுட்டாங்க... இப்படிப் பட்ட படங்களுக்கு நம் மக்களிடையே பெரும் வரவேற்பு.

உண்மையில் அரசு அலுவளர்கள் அவ்வளவு கொடுமை புரியும் வில்லன்களா?. நல்லவர்கள் இல்லையா? என்ன நடக்கின்றது அங்கு? இதைப் பற்றி ஒரு தொடரைப் போட்டுறலாமா நம்மளும்? என்று பலத்த சிந்தனை. நிறைய விஷயங்களை மனம் திறந்து எழுத வேண்டும் என்பதற்காகவே என் பெயரை மறைத்தேன். அவை இங்கு எவ்வளவு தூரம் வரவேற்பு பெறும்?., மற்றவர் மனம் கோணாமல் கருத்துக்களை எடுத்து வைக்க இயலுமா என்னால்?., இப்படி பல குழப்பங்கள் இருந்தாலும், நான் அறிந்த நேர்மையானவர்களைப் பற்றி., விவேக் சொல்ற மாதிரி, "இப்பிடி அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியேய்யா?"... என என் மனதில் வியந்தவர்களைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும் என்ற உந்துதலால் துவங்குகின்றேன் என் தந்தையிலிருந்து.

எங்க அப்பாவிற்கு முதல் குடும்பம் அவரது அலுவலகம்., இரண்டாவது குடும்பமே எங்கள் வீடு. ஒரு அரசு ஊழியரை., தாய், தந்தை போல் இருந்து அரசு வேலை பார்த்துக் கொள்கிறது. விடுமுறை சென்றால் பயணப்படி., அவர் வீடு கட்டினால் கடன், PF என்று அவருக்கு ஒரு சேமிப்பை உருவாக்கிக் கொடுகின்றது, அவர் பணியிலிருக்கும் போது இறந்து விட்டால், வாரிசுகளுக்கு வேலை, வேலை பார்க்கும் வயதில்லா வாரிசாக இருப்பின் அப்பிள்ளையின் பள்ளி இறுதியண்டு வரை பணம் செலுத்தி படிக்க வைக்கின்றது, பணியில் சேரும் வயதான பின் பணியில் சேர்த்துக் கொள்கிறது, அரசு ஊழியர் பணி ஓய்வு பெற்றவுடன் கூட ஓய்வூதியம், ஓய்வு பெற்ற பிறகு மறைந்தால் அவரது மனைவிக்கு அவரது ஓய்வூதியம் மாதம் தோறும் வழங்குகின்றது. இப்படிப் பட்ட ஒரு வேலையை செய்ய நேரம் காலமெல்லாம் கிடையாது. 24 மணி நேரமும் பணி நேரமே என்பார் அப்பா. (இந்த சலுகைகளிலெல்லாம் எனக்கு நிறைய முரண்பட்ட கருத்துக்கள் உண்டு., அவருடன் பலத்த வாக்குவாதங்கள் கூட நடக்கும்.)

கடைசியாக அவர் வகித்த பதவி, புதுக் கோட்டையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (PA to collector )., ஒரு உதவி ஆட்சித்தலைவரைப் போன்ற ஒரு பொறுப்பு. இவர்களது கருத்துக்கு ஒப்புதல் அளிப்பது ஆட்சித்தலைவர். எந்த ஒரு திட்டத்தையும் அம்மாவட்டத்திற்கு பரிந்துரைப்பது இவர்கள்தான்., இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒரு உதவியாளர் இருப்பார். உதாரணத்துக்கு, சத்துணவு PA (Noon Meal PA) என்று ஒருவர்., இவர் அம் மாவட்டம் முழுவதுமுள்ள சத்துணவு திட்டப் பொறுப்பாளராக இருப்பார்., அந்த மாவட்டத்தில் 100 அரசுப் பள்ளிகள் இருக்கிறதென்றால் அத்தனை பள்ளிகளிலும் அத்திட்டத்தை நல்ல முறையில் செயல் படுத்துவது., சத்துணவு அமைப்பாளர்களை நியமிப்பது, மாற்றுவது போன்றது PA வின் வேலை. ஒரு அரசு சத்துணவில் 'முட்டை' சேர்க்க வேண்டும் என கூறுகின்றது எனக் கொள்வோம், அவ்வரசாணையை ஆட்சியாளரின் ஒப்புதல் பெற்று செயல்படுத்துவது இவர்கள் வேலை. [ஒரு முறை சத்துருக்கனன் சின்ஹாவிற்கு கப்பல்துறை (மந்திரி) கிடைத்தபோது., லாலு (லல்லு பிரசாத் யாதவ்) வெளிய வந்து சின்ஹாவத் தூக்கி கடல்ல போட்டுட்டாங்கன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாராம்., சின்ஹா நிலைமைதான் சத்துணவு PA நிலைமையும்., செல்வாக்கில்லாத பதவி (சம்பாரிக்க முடியாத பதவின்னு செல்லலாம்)].புரிய வேண்டும் என்பதற்காக சத்துணவைக் கூறினேன்., எங்க அப்பா PA Extension Panchayat. இவரடைய பொறுப்புகளை எழுதினால் இந்தத் தொடரே முடிந்துவிடும் என்பதால் சுருக்கமாக, ஒரு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களுக்கு அலுவலக உதவியாளர் (பியூன்) முதல் ஆணையர் (கமிஷ்னர்)(எங்கப்பா ஆணையர் பொறுப்பு வகித்தபிந்தான் PA ஆனார்) போன்ற பொறுப்பில் உள்ளவர்களை நியமிப்பது., வேறிடத்திற்கு மாற்றுவது போன்றவை. உதாரணத்திற்கு உள்துறை (Home) மாதிரி. நல்ல பசையுள்ள பதவி., முன்பு ஜீப் இப்போது டாட்டா சுமோ (ஓட்டுனருடன்)., இரண்டு உதவியாளர்கள் (ஒருவர் வீட்டிற்கு, இன்னொருவர் அலுவலகத்தில் - இவர்களுடைய நிலைமையை விளக்கித் தனியாக பதிவிட வேண்டும்., பாவப்பட்ட ஜீவன்கள்) அனைத்தும் உண்டு. எங்கப்பாவிற்கு அவர் பஞ்சாயத்து யூனியன் மேனேஜரில் துவங்கி., EOP, SCO, துணை ஆணையர், ஆணையர் பொறுப்பு வரை திருச்சியில் பார்த்தார். கார் உண்டு. அலுவலக காரை நாங்கள் வீட்டில் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார். அலுவலக உதவியாளர்களை நாங்கள் 'அண்ணா' என்றுதான் அழைத்தோம், எங்களுக்காக (குடும்பத்திற்காக) ஒரு நாளும் அவர்களை பயன்படுத்தியதில்லை (சிலர் காய்கறி வெட்ட, ரைஸ்மில் சென்று வரக்கூட பயன்படுத்துவார்கள்). அவசரத்தில் பள்ளிக்கு செல்லும்போது., 'அப்பா கிளம்புரதுக்குள்ள ஸ்கூல்ல விட்டு விடுகிறேன்' என்று டிரைவர் சொன்னால்கூட செல்வதில்லை.

புதுக்கோட்டைக்கு மாற்றலான பிறகு பேருந்தில் திருச்சியிலிருந்து - புதுக்கோட்டை வரை சென்று., பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் அலுவலக காரில் செல்வார். ஏனெனில் புதுக்கோட்டையில் வேலை பார்க்கும் ஒருவர், திருச்சியில் எப்படி அலுவலக வண்டியை உபயோகப் படுத்துவது?- இது அவர் வாதம். அலுவலக உதவியாளர் தேவையில்லை. புக்கோட்டையில் வசித்தால் கோப்புகளை தூக்க., தேவையான கோப்புகளை எடுத்துக் கொடுக்க உதவியாளர் தேவைப்படும்., திருச்சியில் வசித்துக் கொண்டு அவர்களை புதுக்கோட்டையிலிருந்து வரச் சொல்வதா? எனவே என் தம்பிதான் திருச்சி பேருந்து நிலையத்தில், அவனோட 'யாமகா' வில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவான்.

வழக்கம்போல் அன்று காலை 7 மணி., எங்கப்பா 'டேய் தம்பி, சீக்கிரம் வாடா! நேரமாச்சு'.- கத்த, என் தம்பி கேட்டான் "அது எப்படிப்பா வேலைல மொத நாள் சேர்ற மாதிரி கடைசி நாள் இன்னைக்குகூட பறக்கிறிங்க?". ஆம் அன்று அவர் ஓய்வு பெறும் நாள். அன்றுகூட அரசு வாகனத்தை தவிர்த்தார்.

13 comments:

துளசி கோபால் said...

மரம்,

அரசு வேலையிலும் நல்லவங்க இருக்காங்கன்றது எல்லாருக்கும் தெரியும்.ஆனா, அவுங்க எண்ணீக்கை கொஞ்சம் குறைவு.

நீங்க சொல்றப்பதான் எங்க அம்மாவோட நேர்மையை நினைச்சுப் பார்த்தேன். அவுங்களும் அரசுப்பணியிலேதான் இருந்தாங்க.

என்ன அவுங்க இறந்ததும் அவுங்க வேலை எனக்குக் கிடைக்கலை(-:

அப்டிப்போடு... said...

துளசி அக்கா., எண்ணிக்கை அப்படியொன்றும் குறைவில்லை., திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு.

//அவுங்க வேலை எனக்குக் கிடைக்கலை//

அவங்க மருத்துவர் ஆயிற்றே?., நீங்களுமா?

லதா said...

எந்த ஒரு திட்டத்தையும் அம்மாவட்டத்திற்கு பரிந்துரைப்பது இவர்கள்தான்.,

அம்மா வட்டம் அந்தக்காலத்திலிருந்தே இருக்கிறதா?:-))

அப்டிப்போடு... said...

லதா.. கடியா?., பதிவு எழுத ஆரம்பித்து விட்டீர்கள் போல. வாழ்த்துக்கள்.

PositiveRAMA said...

உங்களது தந்தையாருக்கு எனது வாழ்த்துக்கள். நேர்மைக்கு என்றுமே மதிப்பு ஜாஸ்திதான்.

எனது தந்தையாரும் அரசு ஊழியரே..ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். எனது தந்தை அருமையான ஆசிரியர் என்பதில் எனக்கு அதிகப்படியான கௌரவம் உண்டு.

துளசி கோபால் said...

மரம்,

//அவங்க மருத்துவர் ஆயிற்றே?., நீங்களுமா?//

இல்லையே:-)))))

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

என் அம்மா எப்போதும் மருத்துவனை பற்றியே யோசிப்பா. (அவவும் ஒரு மருத்துவர்தான் துளசி. :O)

ஓய்வு பெற்றுப் பதினைந்து வருடங்களாகியும் சில வேளைகளில் சொல்வா, "ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வாறன்.",நாமெல்லாம் சிரிக்க ஆரம்பித்ததும் தான் விளங்கும் அவக்கு. "கடை"க்குப் பதிலா "ஆஸ்பத்திரி"யென்று சொன்னோமென்று. :O)

உண்மையாய் உழைப்பவர்கள், நேர்மையாய் வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான்.
இப்படியான நேர்மையானவர்களைச் சந்திப்பது மிகவும் கஷ்டம். உங்கள் தந்தையாருக்கு எனது வணக்கம்.

Nagarathinam said...

நண்பருக்கு / நண்பிக்கு

உங்கள் தளம் மிக அருமை. உங்கள் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?

நண்பன், நாகரத்தினம், மதுரை

குழலி / Kuzhali said...

வணக்கம் அப்படிபோடு,
உங்கள் வலைதளம் பற்றி தினமலரில்(?!) செய்திவந்துள்ளது.

வாழ்த்துகள்...

http://www.dinamalar.com/2005sep25/flash.asp

jaime78marcus said...

Just passing by your blog and though you'd like this website.

அப்டிப்போடு... said...

பாஸிடிவ் ராமா உங்கள் தந்தையைப் போலவே ஒரு நேர்மையான் ஆசிருயரைப் பற்றியும் இத் தொடரில் வரும்.

ஷ்ரேயா உங்கள் அம்மாவைப் பற்றி பதியுங்கள்.

நாகரத்தினம் உங்களுடைய ஊக்குவிப்பிற்கு நன்றி. என்னுடைய பதிவுகள் பலவும் என்னைப் பற்றியும்., என்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியும்தான்.

அப்டிப்போடு... said...

குழலி! தினமலரில் நம்ம வலைதளத்தைப் பத்தி வந்திருக்கிறது... ஆச்சரியமா இருக்கில்லை? இன்னுமொன்று நீங்கள் பெருந்த ஆச்சரியப் பட., எங்க அப்பாவின் சாதனைகளை உடனுக்குடன் வெளியிடும் பத்திரிக்கை தினமலர்தான் (வேறுசில பத்திரிக்கைகளும் வெளியிடும்). திருச்சி தினமலர் நிருபர் திரு. சேகர் மற்றும் மண்ணச்சநல்லூரில் அப்பா ஆணையாராக இருந்த சமயம் தினமலர் நிருபர் திரு.ரவி போன்றோர் உடனுக்குடன் தினமலரில் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் என்னுடைய தளத்தைப் பற்றி வந்திருப்பது உங்கள் மூலம்தான் தெரியும்.

SLN said...

தமிழ் ப்ளாக் தேடும்போது கிடைத்தது உங்கள் ப்ளாக்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்ல, இந்த விஷயத்தில்.

மக்கள் சேவை நேரடியாகத் தேவைப்படும் இடங்களில் சென்று பார்த்தால் தெரியும். (RTO, Registration,Government Employment, Teacher posting, transfer etc etc)