Monday, July 25, 2005

ஒரு முயற்சியும்... அதன் முடிவும்!

இது நடந்தது 1997ல். எங்கள் ஊர் திருச்சிக்கு மென் பொருள் தொழில் நுட்ப பூங்கா அமைக்க முயன்று கொண்டிருந்த நேரம். BHEL பாரத மிகுமின் நிறுவன மேலாளர் ஒருவர் (இப்போது ஓய்வு பெற்று இருப்பார்., எனினும், பெயர் வேண்டாம்) மற்றும் மண்டலப் பொறியியல் கல்லூரியின் (REC) அப்போதைய முதல்வர் ஆகியோரின் சீரிய முயற்சியால்., பல கணனி நிறுவனங்கள் மற்றும் திருச்சியில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பல தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்று திரட்டி, முதன் முதலில்., சங்கம் ஹோட்டலில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.
முதல் சந்திப்பிற்கே., Software Technology Park of India (STPi) வின் தலைமைப் பொருப்பிலிருந்த இராஜலெட்சுமி அவர்கள்., டில்லியிலிருந்து வந்து கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள் என்றால்., இவர்களது முயற்சி எவ்வளவு ஆக்கப் பூர்வமானது எனப் புரிந்து கொள்ளுங்கள். அக்கூட்டத்தில் கலந்து கொள்ள என் நிறுவனத்தின் நிமித்தம் நான் சென்றேன். பல நிறுவனங்களிலிருந்து பலர் கலந்து கொண்டனர். அனைவரும் ஆண்கள்., நான் மட்டுமே பெண். இன்னொன்றும் சொல்ல வேண்டும்., இக்கூட்டத்திற்கு இரு நாட்களுக்கு முன்னரே இதை ஏற்பாடு செய்திருந்த இருவரையும் நேரில் நானும், எனது நிறுவனத்தின் தலைவரும் சந்தித்துப் பேசினோம். மண்டலப் பொறியியல் கல்லூரியில் சிலரை வரவழைத்து கூட்ட ஏற்பாடுகளைப் பற்றி முன்பே பேசப் பட்டது. சரி., முதல் சந்திப்பில்., இராஜலட்சுமி அவர்கள், STPi எப்படியெல்லாம்., தொழில் நுட்ப பூங்கா அமைய உதவும் என்றும்., என்ன வசதிகள் இருந்தால், அப்பூங்காவிற்கு அனுமதி கிடைக்கும் என்பது பற்றி விரிவாகப் பேசினார். பூங்காவிற்கான இடத்தை முதலிலேயே மண்டல பொறியியல் கல்லூரி தருவதாக இருந்தது. எனவே 'ரேடியோ மோடம்' (இப்போது இதெல்லாம் மிகச்சாதரணமாக ஆகியிருக்கும்) போன்ற தொழில் நுட்ப சாதனங்களைப் பற்றியும்., அது அமைக்க ஆகும் செலவுகள் பற்றியும் அலசப் பட்டது. பன்னிரண்டு லட்ச ரூபாய் ஆகலாம் என மதிப்பிடப் பட்டு அச் செலவை தொழில்நுட்ப பூங்காவில் இடம் பெறப் போகும் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளலாம் என பேசப் பட்டது. ஆனால் நம் மக்கள்., 100% அட்வான்ஸ் வாங்கி விட்டு கணனி அசெம்பளி செய்து தரும் ஆட்கள், ( காசக் குடுத்துட்டு வாங்கிட்டுப் போங்கிறத., அப்படி நாகரீகமா 100% Advance...). வாடிக்கையாளர் தருகிற பணத்தில்தான் கணனி பாகங்களே வாங்க வேண்டும்., அது எவ்வளவு நிதி வசதியுள்ள நிறுவனமானாலும் சரி . இவர்களிடம் முன்பே பணம் தாருங்கள்., உங்களுக்கு பூங்காவில் ஒரு இடம் தருகிறோம் என்று சொன்னால்., எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்?. ஒரு வழியாக, திருச்சியைப் பற்றியும்., அதன் தொழில் வளர்சி பற்றியும்., தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றியும் (அதுவும் சிலர்தான் பேசினார்கள்) பேசிவிட்டு கலைந்து சென்றோம்.
இது குறித்தான அடுத்த சந்திப்பு அதே 'சங்கத்தில்'., இம்முறை., உலக வங்கியில்., (WORLD BANK) அர்ஜெண்டினா, பிரேசில் பேன்ற நாடுகளின் வளர்ச்சிக்காக பணியாற்றும் தம்பதிகள் ராணி, ஜோசப் ஆகிய இருவர் தலைமையில் நடந்தது. இம்முறையும் அதேபோல் பலர் கூடினோம்., ஸ்ரீமதி இந்திரகாந்தி கலை, அறிவியல் கல்லூரி தலைவர் திருமதி.மீனா அவர்களும் கலந்து கொண்டார். இம்முறை, நாங்கள் இருவர் பெண்கள். கூட்டம் முடியும்வரை அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டம் முடிந்ததும் ஏதும் பேசாமல் புறப்பட்டு விட்டார். எங்கள் ஊரில் 25 ம் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் உண்டு., 13 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் கணனித்துறை இல்லாத கல்லூரிகளே இல்லை. எங்கள் மாவட்டத்தில் கணனி பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். தொழில் நுட்ப பூங்காவினால் ஏற்படும் வேலை வாய்ப்புகளைப் பற்றி அறியாதவரல்ல மீனா., இவ்வாய்ப்பை பயன்படுத்தியிருக்கலாமே என ஏகப்பட்ட கேள்விகள் என்னுள்.
பிறகு., மதுரை பாண்டியனில் ஒரு கூட்டம் நடக்கப் போவதாக எனக்கு அழைப்பு வந்தது., அக் கூட்டத்திற்கு என்னால் செல்ல இயலவில்லை. அப்புறம்தான் நடந்தது க்ளைமேக்ஸ்'. திருமதி.மீனா அவர்கள் தலைமையில் சில நிறுவனங்கள் அப்போதைய மத்திய அமைச்சர், காலஞ்சென்ற ரங்கநாதன் குமாரமங்கலம் அவர்களை சந்தித்து., இத்திட்டம் குறித்து விளக்கங்கள் அளித்தனர். ஆரம்பத்தில் இருந்து இதற்கு பெரு முயற்சி எடுத்தாவர்கள் அதில் இல்லை. எனக்கு மென்பொருள் உற்பத்தியில் எங்கள் மாவட்டம் முதல் மாவட்டமாக வரவேண்டும் என்ற தணியாத ஆவல் உண்டு., அதேபோல் வங்கிகளை, நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும்., ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் NABARD (NABARD ல் பெரிய கணனி நிறுவனங்களும் உண்டு) போல் ஒரு அமைப்பும் திருச்சிக்கு வேண்டும் என்ற கனவும் இருந்தது.
பிறகு நம்ம வாழ்க்கைதான் திசை மாறிய கப்பலாகி குடும்பக் கடலில் பயணப் பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு., தொழில் நுட்ப பூங்கா திருச்சியில் வந்துவிட்டது எனக் கேள்விப் பட்டேன். அதே மண்டலப் போறியியல் கல்லூரியின் இடத்தில். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. யாருடைய முயற்சியால் வந்ததோ... ஆனால் வந்துவிட்டது. இதில் முதலில் ஆர்வமுடன் பங்கேற்றவர்களில் 10% பேராவது பயன் பெறுகிறார்களா என ஊருக்குப் போய்த்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
பின்குறிப்பு : STPi நமது இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் செயல் படுவது. மென்பொருள் ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் அதற்கான அனுமதி மற்றும் தகவல்கள் வழங்குவது இதன் பணி. தகுந்த இடம் மற்றும் நிதி இருந்தால் உங்கள் மாவட்டத்திலும் ஆரம்பிக்கலாம். (இவ்விவரங்கள் அநேக நண்பர்., தோழிகளுக்குத் தெரிந்திருக்கும்., எனினும் தெரியாதவற்களுக்காக)... தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி (சேர்த்துக் கொள்ளலாம் என்றால் பாண்டிச்சேரியும்) போன்ற 5,6 இடங்களில்தான் உள்ளது. ஆவ்வளவு பெரிய ஆந்திராவில்கூட., திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத், விசாகபட்டினம் என்ற நான்கு இடங்களில்தான் உள்ளது.
முகவரி : Mr.S.N.Zindal Director General Software Technology Parks of India Electronics Niketan, 6,C.G.O.Complex, Lodhi Road, New Delhi-110 003Ph:+91-11-24362811/3187/4034/3484 Fax:+91-11-24363436/24634336 URL: http://www.stpi.in/ Email : snzindal@stpi.in

No comments: