Friday, July 01, 2005

சத்யன்

நான் இந்தியாவில் இருந்தபோது, ஒரு கணனி நிறுவனத்தில், ஒரு துறையின் மேலாளராகப் பணியாற்றிய சமயம் அது. ஒரு நாள் நன்பகல் நேரத்தில், ஒரு இளைஞர் வந்து, என் நண்பர் ஒருவர் தன்னை இங்கு அனுப்பியதாகக்கூறி., ஒரு வேலை வேண்டும் என்றார். இங்கு இப்போது ஒன்றும் ஆள் தேவையில்லை. என்ன படித்திருக்கிறீர்கள்? எனக் கேட்டேன். தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள் எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. பி.காம் படித்திருக்கிறேன், என் பெயர் சத்யா என்றார். அப்போது அவரை அனுப்பிய நண்பரும் தொலைபேசியில் அழைத்து., முதலில் அவன் கதையை கேளுங்கள்., கண்டிப்பாக ஏதாவது செய்யுங்கள் என்றார். ஆளைப் பார்த்தாலும் அப்படியொன்றும் வறுமையில் உழல்வதாகத் தெரியவில்லை. மேலும் கணனி தெரியாத ஆளுக்கு இங்கென்ன வேலை கொடுப்பது என யோசித்தபடியே., முன்பு என்ன வேலை செய்தீர்கள்? எனக் கேட்டேன். எனக்கு கொஞ்சம் உங்களுடன் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி., அவர் சொன்ன கதை., நான் சற்றும் எதிர்பாராதது.
அதன் சுருக்கம் இதுதான். அவர் 'ஹவாலா' மோசடியில் ஈடுபட்டு நிறைய சம்பாதித்துப், பிறகு பிடிபட்டு., அனைத்தையும் இழந்து உயிர் தப்பினால் போதும் என மனைவி, குழந்தையுடன் மீண்டும் தனது சொந்த ஊருக்கே ஓடி வந்து விட்டார். மனைவி அருமையான பெண் 'ஆசிரியையாக' வேலை பார்க்கிறார்., கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர். காதலித்து மணந்த பெண். கணவரின் வேலை என்னவெனத் தெரியாமல் 'பிஸினஸ்' பார்க்கிறார் என நம்பிய அப்பாவி. நம் நாட்டில் எத்தனை பெண்கள் கண்மூடித் தனமாக கணவனை நம்புகின்றனர்?. சுயரூபம் தெரிந்தபோது, நாம் சேர்ந்து வாழ வேண்டுமானால் நேர்மையான வேலை ஒன்றைத் தேடிக்கொள். மாதம் நீ 1000 ரூபாய் சம்பாரித்தாலும் போதும் என அழுது மனதைக் கரைய வைத்து அந்த மனிதனைத் தயார் படுத்தியிருந்தாள் அந்தப் புண்ணியவதி. இந்தக் கதையைக் கேட்டவுடன் ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது எனக்கு., அவரின் நிலை கண்டல்ல அந்தப் பெண்ணின் மன அமைதிக்காக. குறுக்குவழியில் பணம் பார்த்தவனின் மனமாற்றம் எப்படிப்பட்டதென்பது தெரியாதா என்ன?. இருந்தாலும் நாளைக்கே வந்து வந்துவிடுங்கள். உங்கள் முகவரி தொலைபேசி எண் எல்லாம் கொடுத்துவிட்டுப் போக வேண்டும். என்று கூறி அனுப்பிவிட்டு. ஒருவரை விட்டு முகவரி சரியானதுதானா? என பார்த்துவரச் செய்தேன்.
அடுத்தநாள் வேலையில் அவருக்கு கொடுத்த பணி., எங்கள் துறையின் அன்றாட வருவாயை வங்கியில் சேர்க்கும் பொறுப்பு. அவருக்குப் பேச இயலவில்லை. 'சத்யா, நம்பி உன்கிட்டத் தரேன். இதுல ஏதாவது மோசம் பண்ணுன., உன் வீட்டுக்குப் போலீஸ் வராது....உன்னைய மாதிரி நாலு பேர் வருவாங்கன்னு' கொஞ்சம் கடுமையாகவே சொல்லி வைத்தேன். பின்ன? கடைத் தேங்காயை எடுத்துல்ல 'ஹவாலாவ'த் திருத்தலாம்னு கணக்குப் போடுறேன். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் எந்தவித தில்லுமுல்லுமில்லாமல். மிகச் சுறுசுறுப்புடன் பணி செய்து, சத்யா எங்கள் நிறுவனத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலை. என் மனைவி முகத்துல இப்பத்தாங்க சிரிப்ப பார்க்கிறேன். நான் எதாவது சொன்னா., உங்களுக்கு போன் பண்ணிருவேன்னு மிரட்டுது. என்ற வார்த்தைகளில் தெரிந்தது உண்மையான மகிழ்ச்சி. பிறகு, எனக்குத் திருமணம் நிச்சயமாகி அந்த நிறுவனத்திலிருந்து வெளியே வந்தேன். அதற்குப் பிறகு எங்கள் அலுவலக நண்பர்கள், தோழிகளுடன் என் திருமணத்தில் பார்த்தது சத்யாவை.
சிங்கப்பூரில் இருந்து ஊருக்குச் சென்றிருந்தேன்., என் மகள் என் வயிற்றுக்குள். எங்கள் அலுவலக நண்பர்கள் அனைவரும் என்னைப் பார்க்க வந்திருந்தனர். போச்சினூடே அவர்கள் கூறினர்., சத்யா நான் போனதற்கு அடுத்த மாதத்திலிருந்தே வேலையைவிட்டு நின்று விட்டதாக. வேறு எங்காவது வேலைக்குச் சேர்ந்திருப்பானோ? என நினைத்தாலும் எதுவோ தடுமாற்றம் தந்தது. பிறிதொரு நாள் வந்தான் சத்யா, "மேடம் நல்லாயிருக்கிங்களா?., பார்வை நிலம் நோக்கித் தாழ்ந்திருந்தது." நீ எப்படி இருக்கிற'?. பதிலில்லை... சிறிது நேரம் கழித்து... "டைவஸ் ஆயிருச்சு மேடம்". அவ்வளவுதான். என் கண்கள் இருண்டது கோபத்தில். "ஓடிப் போயிரு!., நிக்காத!". இதுதான் கடைசியாக நான் சத்யாவிடம் பேசியது. 5 வருடங்கள் ஓடி விட்டன. சில ஆண்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள்?. 'சத்யன்' என ஆசையாகப் பெயரிட்டு வளர்த்த தன் ஒரே மகன் மோசடி செய்வான் என அவனது பெற்றோர் நினைத்திருப்பரா?. தாய், தந்தை, உற்றார் மற்றும் மதம் உதறி, தான் காதலித்து கை பிடித்தவன் திருந்திவிட்டான் என நினைத்து, 'கண்ணிழான் பெற்றிழந்தான்" என்பதை உணர்ந்த அப் பெண்ணின் வலி ஒரு விவாகரத்தில் தீர்ந்து விடுமா?. அப்பாயில்லாது அம்மா மட்டும் உள்ள அந்தத் தளிர் அம்மாவைப் போல் நேர்மையாக இருக்குமா?. தானும் அழிந்து கொண்டு மற்றவரையும் உணர்வுக் கொலைகள் புரியும் சில ஆண்களுக்கு விவாகரத்து என்பது தண்டனையல்லவே அது விடுதலை அல்லவா?.

10 comments:

தெருத்தொண்டன் said...

இணைந்தும் இயைந்தும் வாழ்றது சிலருக்குப் பெரிய தண்டனை போலும். அவர்களுக்கு இது ஒரு விடுதலை தான்.. வி..டு..த..லை… விடுதலை.
தெருத்தொண்டன் http://theruththondan.blogspot.com

துளசி கோபால் said...

அந்தப் பொண்ணையும் குழந்தையையும் நினைச்சாத்தான் கஷ்டமா இருக்கு.

என்றும் அன்புடன்,
துளசி.

குழலி / Kuzhali said...

ஏன் பிரிந்தார்கள்?

அப்டிப்போடு... said...

நன்றி தெருத்தொண்டன், உணர்வு ரீதியாக துன்புறுத்துவோர் பெரும்பாலும் தண்டனை பெறுவதில்லை.

நன்றி துளசி அக்கா., அந்தப் பெண் 'ஆசிரியை'. நண்பர்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றேன்., முடியவில்லை.

பின்னூட்டத்திற்கு நன்றி குழலி., மீண்டும் ஐயா பாதை மாறியதும்., மதுவும் தான் காரணம்.

-L-L-D-a-s-u said...

நல்ல பதிவு அப்படிபோடு ..மனித மனம் ரொம்ப சிக்கலானது ..

நீங்கள் பெண்ணென்று இன்றுதான் தெரிந்தது ...//நன்றி குழலி., மீண்டும் ஐயா பாதை மாறியதும்//

குழலி......ஐயா ..........பாதை மாறியது......என்னமோ தோணுது .. அப்புறம் குழலி ஊடக வன்முறைக்கணக்கில் ஒன்றை கூட்டிக்கொண்டுவிடுவார் .. ;)

குழலி / Kuzhali said...

//மீண்டும் ஐயா பாதை மாறியதும்., மதுவும் தான் காரணம். //
நான் ஒரு குழல் விளக்கு, சற்று நேரமாகும் புரிந்து கொள்ள

//குழலி......ஐயா ..........பாதை மாறியது......என்னமோ தோணுது .. அப்புறம் குழலி ஊடக வன்முறைக்கணக்கில் ஒன்றை கூட்டிக்கொண்டுவிடுவார் .. ;)
//
யோவ் தாசு... சும்மா இருக்க மாட்டிங்களா?

அப்டிப்போடு... said...

நன்றி தாஸ் முதன் முதலில் பின்னுட்டம் இடுகிறீர்கள் என் பதிவில். குழலி., விடுங்க ... போற போக்கப் பார்த்தா ப.மா.க சார்பா சீட்டு உங்களுக்கு., எப்ப கேட்டலும் உறுதியா உண்டு போல?

குழலி / Kuzhali said...

//குழலி., விடுங்க ... போற போக்கப் பார்த்தா ப.மா.க சார்பா சீட்டு உங்களுக்கு., எப்ப கேட்டலும் உறுதியா உண்டு போல?
//
எனக்கு அரசியலில் ஆர்வம் அதிகம், ஆனால் சில சூழ்நிலைகளினால் அரசியலில் ஈடுபட முடியாமல் உள்ளது, நாளை என்ன நடக்கும் என சொல்லமுடியாது எதுவும் நடக்கலாம் (எப்படி அவர் மாதிரியே பேசுகின்றேனா?) ஹா... ஹா... சீட்டெல்லாம் நமக்கு வேண்டாம்(என்னமோ இவரை கெஞ்சி கெஞ்சி கூப்பிட்டு தர மாதிரிதான்)

Chandravathanaa said...

எப்படி அவருக்கு உடனேயே பணத்தை வங்கியில் சேர்க்கும் வேலையைக் கொடுக்க முடிந்தது.
சத்யனும் அது விடயத்தில் ஏமாற்றாதது அதியசயமே!

அப்டிப்போடு... said...

சந்திரவதனா., என் துறையில் எதைப் பற்றியும் நான் முடிவெடுக்கும் உரிமை இருந்தது. தவிர., எங்கள் நிறுவனத்திற்கு உள்ள ஆள் பலம். ஏமாத்தினால் எப்படியும் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை எல்லாம்தான் காரணம். சத்யா உண்மையிலேயே திருந்தும் மனநிலையில் இருந்தது உண்மை.