Tuesday, July 26, 2005

வீச்சருவாள் முனையில் காதல்இந்தப் படத்திற்கான விவரம் குமுதத்தில்., (http://www.kumudam.com/kumudam/mainpage.php)ஆனால் என்னால் இந்தப் படத்தை விட்டு ஏனோ கண்களை அகற்ற முடியவில்லை. கிராமம்., காதலைப் போல என்னோவோ எனக்கு அரிவாளும் மிகப்பிடிக்கும். காரணம் தெரியவில்லை.

ரோஜாப் பூக் குவியலில் முகிழ்கும் காதல்... வாடிக்கை...
அருவாள் முனையில் துளிர்பது நிச்சயம் இல்லை வேடிக்கை...
ரோஜாவாக இருந்தால் என்ன?., அருவாளாக இருந்தால் என்ன?
பூப்பதுகாதல் அது பொய்யல்ல!.

நன்றி : குமுதம்

நம்பிக்கை - கவிதை

நாராயண் வெங்கட்... அறிவித்திருந்த போட்டிக்கு., என் முயற்சி...

***************

நம்பிக்கையுடன் தான் புற்றெடுக்கிறது கரையான்
நாகம் குடிபுகும் எனத் தெரிந்தும்....
சீக்கிரம் வா! ஓட்டுப் போட....

சத்துணவு, முட்டை, சேலைவேட்டி, சைக்கிள்
சாமானியன் நலனோ?., ஓநாய் கண்ணீரோ?...
குத்து பணம் கொடுத்த கட்சிபார்த்து...

கிணற்றில் கிடக்கும் ஜனநாயகமே! - இதோ
பற்றிக்கொள் நம்பிக்கை கயிற்றை... விட்டுவிடாதே....?!
********************
நன்றி தோழி.சந்திரவதனா., விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

NOW WE HAVE A OPPORTUNITY TO CAST OUR VOTES TO MAKE TAMIL AS OFFICIAL LANGUAGE IN THE UN. PLEASE DO NOT MISS THIS GRATE OPPORTUNITY. ASK ALL OUR KNOWN PEOPLES TO VOTE FOR IT.Go to:http://petitions.takingitglobal.org/ClassicalTamil

Monday, July 25, 2005

ஒரு முயற்சியும்... அதன் முடிவும்!

இது நடந்தது 1997ல். எங்கள் ஊர் திருச்சிக்கு மென் பொருள் தொழில் நுட்ப பூங்கா அமைக்க முயன்று கொண்டிருந்த நேரம். BHEL பாரத மிகுமின் நிறுவன மேலாளர் ஒருவர் (இப்போது ஓய்வு பெற்று இருப்பார்., எனினும், பெயர் வேண்டாம்) மற்றும் மண்டலப் பொறியியல் கல்லூரியின் (REC) அப்போதைய முதல்வர் ஆகியோரின் சீரிய முயற்சியால்., பல கணனி நிறுவனங்கள் மற்றும் திருச்சியில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பல தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்று திரட்டி, முதன் முதலில்., சங்கம் ஹோட்டலில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.
முதல் சந்திப்பிற்கே., Software Technology Park of India (STPi) வின் தலைமைப் பொருப்பிலிருந்த இராஜலெட்சுமி அவர்கள்., டில்லியிலிருந்து வந்து கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள் என்றால்., இவர்களது முயற்சி எவ்வளவு ஆக்கப் பூர்வமானது எனப் புரிந்து கொள்ளுங்கள். அக்கூட்டத்தில் கலந்து கொள்ள என் நிறுவனத்தின் நிமித்தம் நான் சென்றேன். பல நிறுவனங்களிலிருந்து பலர் கலந்து கொண்டனர். அனைவரும் ஆண்கள்., நான் மட்டுமே பெண். இன்னொன்றும் சொல்ல வேண்டும்., இக்கூட்டத்திற்கு இரு நாட்களுக்கு முன்னரே இதை ஏற்பாடு செய்திருந்த இருவரையும் நேரில் நானும், எனது நிறுவனத்தின் தலைவரும் சந்தித்துப் பேசினோம். மண்டலப் பொறியியல் கல்லூரியில் சிலரை வரவழைத்து கூட்ட ஏற்பாடுகளைப் பற்றி முன்பே பேசப் பட்டது. சரி., முதல் சந்திப்பில்., இராஜலட்சுமி அவர்கள், STPi எப்படியெல்லாம்., தொழில் நுட்ப பூங்கா அமைய உதவும் என்றும்., என்ன வசதிகள் இருந்தால், அப்பூங்காவிற்கு அனுமதி கிடைக்கும் என்பது பற்றி விரிவாகப் பேசினார். பூங்காவிற்கான இடத்தை முதலிலேயே மண்டல பொறியியல் கல்லூரி தருவதாக இருந்தது. எனவே 'ரேடியோ மோடம்' (இப்போது இதெல்லாம் மிகச்சாதரணமாக ஆகியிருக்கும்) போன்ற தொழில் நுட்ப சாதனங்களைப் பற்றியும்., அது அமைக்க ஆகும் செலவுகள் பற்றியும் அலசப் பட்டது. பன்னிரண்டு லட்ச ரூபாய் ஆகலாம் என மதிப்பிடப் பட்டு அச் செலவை தொழில்நுட்ப பூங்காவில் இடம் பெறப் போகும் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளலாம் என பேசப் பட்டது. ஆனால் நம் மக்கள்., 100% அட்வான்ஸ் வாங்கி விட்டு கணனி அசெம்பளி செய்து தரும் ஆட்கள், ( காசக் குடுத்துட்டு வாங்கிட்டுப் போங்கிறத., அப்படி நாகரீகமா 100% Advance...). வாடிக்கையாளர் தருகிற பணத்தில்தான் கணனி பாகங்களே வாங்க வேண்டும்., அது எவ்வளவு நிதி வசதியுள்ள நிறுவனமானாலும் சரி . இவர்களிடம் முன்பே பணம் தாருங்கள்., உங்களுக்கு பூங்காவில் ஒரு இடம் தருகிறோம் என்று சொன்னால்., எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்?. ஒரு வழியாக, திருச்சியைப் பற்றியும்., அதன் தொழில் வளர்சி பற்றியும்., தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றியும் (அதுவும் சிலர்தான் பேசினார்கள்) பேசிவிட்டு கலைந்து சென்றோம்.
இது குறித்தான அடுத்த சந்திப்பு அதே 'சங்கத்தில்'., இம்முறை., உலக வங்கியில்., (WORLD BANK) அர்ஜெண்டினா, பிரேசில் பேன்ற நாடுகளின் வளர்ச்சிக்காக பணியாற்றும் தம்பதிகள் ராணி, ஜோசப் ஆகிய இருவர் தலைமையில் நடந்தது. இம்முறையும் அதேபோல் பலர் கூடினோம்., ஸ்ரீமதி இந்திரகாந்தி கலை, அறிவியல் கல்லூரி தலைவர் திருமதி.மீனா அவர்களும் கலந்து கொண்டார். இம்முறை, நாங்கள் இருவர் பெண்கள். கூட்டம் முடியும்வரை அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டம் முடிந்ததும் ஏதும் பேசாமல் புறப்பட்டு விட்டார். எங்கள் ஊரில் 25 ம் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் உண்டு., 13 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் கணனித்துறை இல்லாத கல்லூரிகளே இல்லை. எங்கள் மாவட்டத்தில் கணனி பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். தொழில் நுட்ப பூங்காவினால் ஏற்படும் வேலை வாய்ப்புகளைப் பற்றி அறியாதவரல்ல மீனா., இவ்வாய்ப்பை பயன்படுத்தியிருக்கலாமே என ஏகப்பட்ட கேள்விகள் என்னுள்.
பிறகு., மதுரை பாண்டியனில் ஒரு கூட்டம் நடக்கப் போவதாக எனக்கு அழைப்பு வந்தது., அக் கூட்டத்திற்கு என்னால் செல்ல இயலவில்லை. அப்புறம்தான் நடந்தது க்ளைமேக்ஸ்'. திருமதி.மீனா அவர்கள் தலைமையில் சில நிறுவனங்கள் அப்போதைய மத்திய அமைச்சர், காலஞ்சென்ற ரங்கநாதன் குமாரமங்கலம் அவர்களை சந்தித்து., இத்திட்டம் குறித்து விளக்கங்கள் அளித்தனர். ஆரம்பத்தில் இருந்து இதற்கு பெரு முயற்சி எடுத்தாவர்கள் அதில் இல்லை. எனக்கு மென்பொருள் உற்பத்தியில் எங்கள் மாவட்டம் முதல் மாவட்டமாக வரவேண்டும் என்ற தணியாத ஆவல் உண்டு., அதேபோல் வங்கிகளை, நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும்., ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் NABARD (NABARD ல் பெரிய கணனி நிறுவனங்களும் உண்டு) போல் ஒரு அமைப்பும் திருச்சிக்கு வேண்டும் என்ற கனவும் இருந்தது.
பிறகு நம்ம வாழ்க்கைதான் திசை மாறிய கப்பலாகி குடும்பக் கடலில் பயணப் பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு., தொழில் நுட்ப பூங்கா திருச்சியில் வந்துவிட்டது எனக் கேள்விப் பட்டேன். அதே மண்டலப் போறியியல் கல்லூரியின் இடத்தில். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. யாருடைய முயற்சியால் வந்ததோ... ஆனால் வந்துவிட்டது. இதில் முதலில் ஆர்வமுடன் பங்கேற்றவர்களில் 10% பேராவது பயன் பெறுகிறார்களா என ஊருக்குப் போய்த்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
பின்குறிப்பு : STPi நமது இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் செயல் படுவது. மென்பொருள் ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் அதற்கான அனுமதி மற்றும் தகவல்கள் வழங்குவது இதன் பணி. தகுந்த இடம் மற்றும் நிதி இருந்தால் உங்கள் மாவட்டத்திலும் ஆரம்பிக்கலாம். (இவ்விவரங்கள் அநேக நண்பர்., தோழிகளுக்குத் தெரிந்திருக்கும்., எனினும் தெரியாதவற்களுக்காக)... தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி (சேர்த்துக் கொள்ளலாம் என்றால் பாண்டிச்சேரியும்) போன்ற 5,6 இடங்களில்தான் உள்ளது. ஆவ்வளவு பெரிய ஆந்திராவில்கூட., திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத், விசாகபட்டினம் என்ற நான்கு இடங்களில்தான் உள்ளது.
முகவரி : Mr.S.N.Zindal Director General Software Technology Parks of India Electronics Niketan, 6,C.G.O.Complex, Lodhi Road, New Delhi-110 003Ph:+91-11-24362811/3187/4034/3484 Fax:+91-11-24363436/24634336 URL: http://www.stpi.in/ Email : snzindal@stpi.in

மாயவரத்தானுக்கு...

தவிர்கமுடியாத சில காரணங்களாலும்., எனது மடிக்கணனி என்ன காரத்தினாலோ மடிந்து விட்டதினாலும்., இவ்வளவு காலம் விடுப்பு எடுக்கும்படியாயிற்று. மன்னிக்கவும். போனவர்கள் அனைவரும் மீண்டும் வந்துவிட்டார்கள். மகிழ்ச்சி., நானும் வந்துவிட்டேன். இனிமேலேனும் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். இப்போது மாயவரத்தானுக்குப் பதில்.

உங்களுடைய 'சந்திரமுகி' பின்னூட்டம் பார்த்துவிட்டு., வேறு பதிவிற்கு போட வேண்டிய பின்னூட்டத்தை மாற்றி போட்டுவிட்டார்போல என்றுதான் முதலில் நினைத்தேன். திடீரென்று என்னுடைய ஒரு பதிவில்., ஆண்களையன்றோ 'சாமி' அழைப்பார்கள் என்று ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள். முதலில் உண்மையாக எவ்வித சந்தேகமும் இல்லாமல் கேட்கிறீர்கள் போல என்று எண்ணித்தான் பதிலளித்து இருந்தேன். ஆனால் ஒருவருடைய பதிவில் (மாயூரம் சிவா என நினைக்கிறேன்)., மரத்தடி என்ற பெயரில் வந்த பின்னூட்டத்தை பார்த்த பிறகு., ஒருவேளை சந்தேகப்பட்டு கேட்டீர்களோ என எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் எவ்விதம் கேட்டீர்களோ?... நான் சில காரணங்களுக்காக மரம் என்ற பெயரில் எழுத வேண்டிய கட்டாயம். நீங்கள் மாயவரத்தான் என்ற பெயரில் எழுதுவதைப் போல. ஆனால் இதுவரை எந்தப் பதிவின் பின்னூட்டத்திலும் 'அப்படிப்போடு' அல்லது 'மரம்' என்ற எனது அடையாளங்கள் இன்றி 'அனானிமஸ்' ஆகவோ வேறு பெயரிலோ பின்னூட்டம் தந்தது இல்லை. மிகக்கடுமையான எதிர்வினைகளைக்கூட என் அடையாளத்துடந்தான் தந்திருக்கிறேன். உங்களுக்கு இது நிச்சயம் புரிந்திருக்குமே?.
சகட்டு மேனிக்கு காலஞ் சென்ற தலைவர்களைத் தாக்குவதையும்., திராவிடக் கட்சிகளை நக்கல் செய்வதையும் படிக்கும்போது எனக்கு எழும் உணர்வுகளை எவ்வித 'பாசாங்குமின்றி' அப்படியே பதிவு செய்திருக்கிறேன். ஹல்வா சிட்டி சம்மி அவர்களின் பதிவில் கூட நீங்கள் இப்படி திராவிடத்தலைவர்களை தாக்குவதால்தான் 'அனானிமஸ்கள்' உருவாகிறார்கள் என்றுகூட என்னுடைய நடையில் எழுதியிருக்கிறேன். வேறு ஒரு பதிவில்கூட 'அனானிமஸ்' ஆபாசமாக எழுதினால் குற்றம்., நீங்கள் எழுதினால் விமர்சனமா? எனக் கேட்டிருந்தேன். அப்படி எழுதும்போது நிச்சயமாக இப்படி ஒரு சீரியஸ் விதயமாக இந்த 'அனானிமஸ்' பிரச்சனை ஆகும் என்று நினைக்கவில்லை. அனானிமஸ்சின் தகாத பின்னூட்டங்களை நான் படிக்கவில்லை. இப்பிரச்சனையின் வேர் எனக்குத் தெரியாது. எனவே இது ஏதோ இருவருக்கு இடையில் நடக்கும் பிரச்சனையாகத்தான் பார்த்தேன்., மொத்த இணையத்தையும் குத்திக் கிழிக்கும் கத்தியாக இது ஆகும் என்பதை நான் அவதனிக்கவில்லை.
பல பதிவுகளின் பின்னூட்டத்தில், ஆபாச பின்னூட்டம் பற்றி ஏன் பலர் குரல் எழுப்பவில்லை? எனக் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். ஏகப்பட்ட பேர் எழுப்பியதற்கு என்ன எதிர்வினை கண்டீர்கள்? ...

அன்னையை., சகோதரியை மாசு படுத்தும் கயவர்கள் எவராயினும்... அவர்களுக்கு...அவருடைய
அன்னை இதயமாக...
அன்பு வடிவமாக...
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்....!

பாவம் என்ற கல்லறைக்குப் பலவழி... மனிதன் ஆயிரம் வருடம் வாழப் போவதில்லை... நமக்குத் தெரிந்து பிறப்பது ஒருமுறை. எதுக்கு 'அனானிமசாகவும்' வேற பேர்லயும் அல்லாடனும்?. அட., நம்ம பின் நவினத்துவ எழுத்தாளர்களோட போட்டி போடறதுன்னா... தனியாப் போயி போட்டுக்கங்க அப்பு. எங்க முன்னாடிதான் இந்தக் கண்ராவியல்லாம் அரங்கேரனுமா? இனிமே இணையத்துல எழுதுகிறோம்னு சொன்னாலே எங்க மரியாதை போயிரும் போல. இப்பவே பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் 'வலைப் பதிவை'த் தவிருங்கள்னு சொல்றாங்க., அம்மா கவனத்துக்குப் போயி அசம்பாவிதம் ஆகறதுக்குள்ள நிறுத்திக்கங்க!. இதை மற்றவர்கள் பெயரை உபயோகப் படுத்தும்., 'அனானிமசாக' வந்து தகாத பின்னூட்டமிடும் அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

Friday, July 01, 2005

சத்யன்

நான் இந்தியாவில் இருந்தபோது, ஒரு கணனி நிறுவனத்தில், ஒரு துறையின் மேலாளராகப் பணியாற்றிய சமயம் அது. ஒரு நாள் நன்பகல் நேரத்தில், ஒரு இளைஞர் வந்து, என் நண்பர் ஒருவர் தன்னை இங்கு அனுப்பியதாகக்கூறி., ஒரு வேலை வேண்டும் என்றார். இங்கு இப்போது ஒன்றும் ஆள் தேவையில்லை. என்ன படித்திருக்கிறீர்கள்? எனக் கேட்டேன். தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள் எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. பி.காம் படித்திருக்கிறேன், என் பெயர் சத்யா என்றார். அப்போது அவரை அனுப்பிய நண்பரும் தொலைபேசியில் அழைத்து., முதலில் அவன் கதையை கேளுங்கள்., கண்டிப்பாக ஏதாவது செய்யுங்கள் என்றார். ஆளைப் பார்த்தாலும் அப்படியொன்றும் வறுமையில் உழல்வதாகத் தெரியவில்லை. மேலும் கணனி தெரியாத ஆளுக்கு இங்கென்ன வேலை கொடுப்பது என யோசித்தபடியே., முன்பு என்ன வேலை செய்தீர்கள்? எனக் கேட்டேன். எனக்கு கொஞ்சம் உங்களுடன் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி., அவர் சொன்ன கதை., நான் சற்றும் எதிர்பாராதது.
அதன் சுருக்கம் இதுதான். அவர் 'ஹவாலா' மோசடியில் ஈடுபட்டு நிறைய சம்பாதித்துப், பிறகு பிடிபட்டு., அனைத்தையும் இழந்து உயிர் தப்பினால் போதும் என மனைவி, குழந்தையுடன் மீண்டும் தனது சொந்த ஊருக்கே ஓடி வந்து விட்டார். மனைவி அருமையான பெண் 'ஆசிரியையாக' வேலை பார்க்கிறார்., கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர். காதலித்து மணந்த பெண். கணவரின் வேலை என்னவெனத் தெரியாமல் 'பிஸினஸ்' பார்க்கிறார் என நம்பிய அப்பாவி. நம் நாட்டில் எத்தனை பெண்கள் கண்மூடித் தனமாக கணவனை நம்புகின்றனர்?. சுயரூபம் தெரிந்தபோது, நாம் சேர்ந்து வாழ வேண்டுமானால் நேர்மையான வேலை ஒன்றைத் தேடிக்கொள். மாதம் நீ 1000 ரூபாய் சம்பாரித்தாலும் போதும் என அழுது மனதைக் கரைய வைத்து அந்த மனிதனைத் தயார் படுத்தியிருந்தாள் அந்தப் புண்ணியவதி. இந்தக் கதையைக் கேட்டவுடன் ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது எனக்கு., அவரின் நிலை கண்டல்ல அந்தப் பெண்ணின் மன அமைதிக்காக. குறுக்குவழியில் பணம் பார்த்தவனின் மனமாற்றம் எப்படிப்பட்டதென்பது தெரியாதா என்ன?. இருந்தாலும் நாளைக்கே வந்து வந்துவிடுங்கள். உங்கள் முகவரி தொலைபேசி எண் எல்லாம் கொடுத்துவிட்டுப் போக வேண்டும். என்று கூறி அனுப்பிவிட்டு. ஒருவரை விட்டு முகவரி சரியானதுதானா? என பார்த்துவரச் செய்தேன்.
அடுத்தநாள் வேலையில் அவருக்கு கொடுத்த பணி., எங்கள் துறையின் அன்றாட வருவாயை வங்கியில் சேர்க்கும் பொறுப்பு. அவருக்குப் பேச இயலவில்லை. 'சத்யா, நம்பி உன்கிட்டத் தரேன். இதுல ஏதாவது மோசம் பண்ணுன., உன் வீட்டுக்குப் போலீஸ் வராது....உன்னைய மாதிரி நாலு பேர் வருவாங்கன்னு' கொஞ்சம் கடுமையாகவே சொல்லி வைத்தேன். பின்ன? கடைத் தேங்காயை எடுத்துல்ல 'ஹவாலாவ'த் திருத்தலாம்னு கணக்குப் போடுறேன். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் எந்தவித தில்லுமுல்லுமில்லாமல். மிகச் சுறுசுறுப்புடன் பணி செய்து, சத்யா எங்கள் நிறுவனத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலை. என் மனைவி முகத்துல இப்பத்தாங்க சிரிப்ப பார்க்கிறேன். நான் எதாவது சொன்னா., உங்களுக்கு போன் பண்ணிருவேன்னு மிரட்டுது. என்ற வார்த்தைகளில் தெரிந்தது உண்மையான மகிழ்ச்சி. பிறகு, எனக்குத் திருமணம் நிச்சயமாகி அந்த நிறுவனத்திலிருந்து வெளியே வந்தேன். அதற்குப் பிறகு எங்கள் அலுவலக நண்பர்கள், தோழிகளுடன் என் திருமணத்தில் பார்த்தது சத்யாவை.
சிங்கப்பூரில் இருந்து ஊருக்குச் சென்றிருந்தேன்., என் மகள் என் வயிற்றுக்குள். எங்கள் அலுவலக நண்பர்கள் அனைவரும் என்னைப் பார்க்க வந்திருந்தனர். போச்சினூடே அவர்கள் கூறினர்., சத்யா நான் போனதற்கு அடுத்த மாதத்திலிருந்தே வேலையைவிட்டு நின்று விட்டதாக. வேறு எங்காவது வேலைக்குச் சேர்ந்திருப்பானோ? என நினைத்தாலும் எதுவோ தடுமாற்றம் தந்தது. பிறிதொரு நாள் வந்தான் சத்யா, "மேடம் நல்லாயிருக்கிங்களா?., பார்வை நிலம் நோக்கித் தாழ்ந்திருந்தது." நீ எப்படி இருக்கிற'?. பதிலில்லை... சிறிது நேரம் கழித்து... "டைவஸ் ஆயிருச்சு மேடம்". அவ்வளவுதான். என் கண்கள் இருண்டது கோபத்தில். "ஓடிப் போயிரு!., நிக்காத!". இதுதான் கடைசியாக நான் சத்யாவிடம் பேசியது. 5 வருடங்கள் ஓடி விட்டன. சில ஆண்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள்?. 'சத்யன்' என ஆசையாகப் பெயரிட்டு வளர்த்த தன் ஒரே மகன் மோசடி செய்வான் என அவனது பெற்றோர் நினைத்திருப்பரா?. தாய், தந்தை, உற்றார் மற்றும் மதம் உதறி, தான் காதலித்து கை பிடித்தவன் திருந்திவிட்டான் என நினைத்து, 'கண்ணிழான் பெற்றிழந்தான்" என்பதை உணர்ந்த அப் பெண்ணின் வலி ஒரு விவாகரத்தில் தீர்ந்து விடுமா?. அப்பாயில்லாது அம்மா மட்டும் உள்ள அந்தத் தளிர் அம்மாவைப் போல் நேர்மையாக இருக்குமா?. தானும் அழிந்து கொண்டு மற்றவரையும் உணர்வுக் கொலைகள் புரியும் சில ஆண்களுக்கு விவாகரத்து என்பது தண்டனையல்லவே அது விடுதலை அல்லவா?.