Thursday, June 02, 2005

அன்பில் அம்மா...!

இன்று காலை தொலைபேசி வழியே கேட்கிறேன்., நீங்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை., துடித்துப் பதறிய இதயத்தை இறுக்கிப் பிடித்து தெலை பேசினேன்., நீங்கள் அனுமதிக்கப் பட்டிருந்த மருத்துவ மனைக்கு., மருத்துவ மனையெங்கும் உறவினர் கூட்டம்., எப்போதும் சிரிப்புடன் எவரையும் வறவேற்கும் உங்கள் முகம் பார்த்து துடித்தபடி. துடித்தாலும் உங்கள் பக்கத்திலிருக்கும் பாக்கியசாலிகள். நண்பனின் அம்மா., என்பது மட்டுமே நமது உறவா?. முன்பே உங்களுக்கிருந்த உபாதைகள் தெரிந்திருந்தால்., ஓடி வந்து பார்த்திருப்பேனே?., எத்தனை சமாதானம் சொன்னாலும்., என் இதயமே எனக்கு விரோதியாகிறது. போன மாதம் பேசியபோது கூட., நன்றாக இருக்கிறேன் என்றுதானே ஏமாற்றிவிட்டீர்கள்?.

உங்களை முதலில் பார்த்த அந்த நாள்., இன்னும் பசுமை குறையாமலேயே என்னுள் இருக்கிறதே. பிறந்தது முதல் பார்த்துப் பழகிய உறவுகளை விட உயிரில் உரைந்துவிட்ட உயிரல்லவா நீங்கள்?. எங்கள் ஆயா இளம்வயதில் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என நான் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் எண்ணிக்கொள்வேன். எனக்கு நண்பன் என்ற தோள் கொடுத்த தெய்வம். சிறிய வயதில் உள்ள புகைப்படத்தில்., மருளும் விழிகளுடன் நீங்கள் அப்படியே கலைவாணி போலவே இருப்பீர்கள். இப்போது என் அழுகையை அதிகரித்தபடி என்கையில் உள்ள இத்தப் படமும் அதே அழகுடன். வெளிநாட்டு வாழ்க்கை இன்னும் எத்தனை பேரை வெறும் புகைப்படங்களாக்கி என் கைகளில் தரப்போகிறதோ?. நான் அன்பிலில் நமது வீட்டில் தங்கிய நாட்கள் திரைப்படமாய் நினைவில் விரிகிறது. "பொண்ணு பரவாயில்லம்மா... நீ ஒரு வார்த்தை தம்பிகிட்ட சொன்னீன்னா சரின்னு சொல்லிரும்". உங்கள் வார்த்தைகள் காதில் ஒலிக்கிறது. பெற்ற மகனை அவன், இவன் என நீங்கள் அழைத்து நான் பார்த்ததில்லை. "மருமக எப்படிம்மா?" "ம்.. அதுக்கென்னம்மா? சின்னப் பொன்ணுனாலும் எல்லாத்தையும் பாத்துக்குது". யாரடா இப்படி கேட்பார்கள் எனக் காத்திருந்து கதையளக்கும் உலகத்தில் தனிப்பிறவி!. புள்ளையப் பாத்துக்க! என்றது நீங்கள் கடந்த முறை என்னிடம் பேசியவார்த்தை. அதுவே கடைசி வார்த்தையாகிவிடுமா?., எல்லையில்லாப் பரம்பொருள் என்கிறார்களே., அதிசயம் நடக்கும் என்பது போல் நீங்கள் 'கோமா' விலிருந்து மீண்டு விடுவீர்களா?. 56 வயது ஒன்றும் அதிகமில்லை ஆண்டவனே.

நான் துவண்ட போதெல்லாம் தூக்கிவிட்ட நண்பனே!., இன்று என்னால் உன் அருகிருக்க முடியவில்லை. என்னை மன்னிப்பாயா?.

4 comments:

.:D:. said...

Please get the next available flight and fly back home!

:'(

-dyno

துளசி கோபால் said...

எல்லாம் கடவுள் விதிச்சபடிதான்!

இப்படித் தொலைதூரத்தில் வந்து நிக்கற நாமெல்லாம் இப்படித்தான் அவஸ்தைப் படவேண்டியுள்ளது.

நினைச்சா'சட்'னு போற தூரமா?

கலங்காதீங்க!!! நண்பனின் அம்மான்னாலும் நமக்கும் அம்மாபோலத்தானே!

என்றும் அன்புடன்,
துளசி.

லதா said...

உங்கள் துயரத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம். அம்மா அவர்கள் நலமுடன் இல்லம் திரும்பிவர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

அப்டிப்போடு... said...

என் துக்கத்தில் பங்கு கொண்ட சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
நேற்று காலை (இங்கு இரவு) அம்மா இறைவனடி சேர்ந்தார். வீட்டில் அமைதியாக அங்கும், இங்கும் நடமாடிக் கொண்டிருக்கும் பெண் உருவங்களால்தான் வீடென்பதே அர்த்தம் பெறுகிறது. தன் இரத்தம்தான் என்றாலும் வேறுபடும் உறவுகளை இணைக்கும் (அப்பா-மகன்., கணவன் - தனது அண்ணன் இப்படி) பாலமாக ஒரு 'பைண்டிங் ஏஜெண்ட்' ஆக கண்ணுக்குத் தெரியாமல் பெண்கள் ஆற்றும் காரியங்கள் ஏராளம். என்னைப் பொறுத்தவரை பெண்ணே வீடு. எனக்கு அவருக்கு இருக்கும் உபாதைகள் முன்பே தெரிந்திருந்தால்கூட இவ்வளவு அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டேன். எதிர்பாரா மரணம். அதிர்ச்சியின் உச்சம்.