Friday, June 10, 2005

சங்கிலி ...புத்தகச் சங்கிலி..!

ஒரு நாள் அதிகாலை நேரம், எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற அக்கா வந்து, 'என் பையன் போனவாரம் புதுசா கம்பியூட்டர் வாங்கினான்., அது இப்ப என்னமோ வேலை செய்ய மாட்டேங்குது., கொஞ்சம் வந்து பார்கிறியா?. என்று கேட்டாங்க. நான் அப்ப, (நமக்கு எப்பவுமே எட்டு மணிக்கு மேலதான் விடியும்)., நடுச்சாமத்துல (கலை 6 மணி) இது என்னடா தொந்தரவுன்னு., தூக்கத்தோடயே, அவங்களோட போயி, அந்தப் பையனிடம் 'என்னப்பா பிரச்சனை'? என்று., கேட்டதுதான் தாமதம், அவன் ஆரம்பிச்சான் பாருங்க, Half adder, Full adder, Multiplexer, De-multiplexer, Decoder, Complier னு அவனுக்கு கம்பியூட்டர்ன்னு ஒண்ணப்பத்தி என்னல்லாம் தெரியுமோ., அத்தனையும் சொல்லிட்டான். அவங்க அம்மாவும் ஓரத்துல நின்னு பெருமையா மகனப் பார்த்திட்டு இருந்தாங்க., ஆனா எனக்குத்தான் அஞ்சுங்கெட்டு, அறிவுங்கெட்டுப் போயிருச்சு. அதெல்லாம் சரி., 'கம்பியூட்டர் ஸ்கிரீன(கணணித்திரை) ஆன் பண்ணனும் இப்பிடின்னு சொல்லிட்டு வந்தேன்.

ஏறக்குறைய அந்தப் பையனின் துடிப்பான மனநிலைதான் எனக்கும் துளசி அக்கா கூப்பிட்டப்ப. சின்ன வயசுல எல்லாரும்போல கோகுலம், அம்புலி மாமாதான். நான் 6வது படிக்கும் போது எங்கப்பா முதன்முதலில் 'பாரதிதாசனார் கவிதைகள்' வாங்கிக் கொடுத்தார். அப்பொழுதெல்லாம், திருக்குறள் மனப்பாடம் பண்ணுவது எங்களுக்குள்ள தவிர்கமுடியாத கடமை. பள்ளியில் நடக்கும் எல்லாப் போட்டியிலும் கலந்து கொள்வதால் படிக்க ஆரம்பித்தேன். யாராவது எழுதிக் கொடுத்து மேடையில் வாசிப்பதெல்லாம் எங்கப்பாகிட்ட நடக்காது. அப்படி ஆரம்பித்த வாசிப்பு பழக்கம்., திசை தெரியாத காட்டில் கண்ணொளியற்றவர் மாட்டிக்கொண்ட கதையாக இன்றும் மீள முடிவதில்லை. கதை, கவிதை, கட்டுரைகள், கடிதங்கள்., அரசியல், அறிவியல், ஆன்மீகம், சமூகம், பொருளாதாரம்,வரலாறு, வானியல் என எது கிடைத்தாலும் படிப்பதுண்டு.

எனக்குள் படிக்கும் பழக்கத்தை தூண்டிவிட்டவர்கள் ஏராளமான பேர். வருடம் தவறாமல் பொங்களுக்கு 'பால் பொங்கிற்றா?' என்று கேட்டு தஞ்சையிலிருந்து வரும் எனது 70 வயது தோழரின் கடிதங்களும், என் பள்ளித் தமிழாசிரியை வசந்தா அவர்களது பாராட்டும், எனது கல்லூரி தமிழ்ப் பேராசிரியைகள் 'தனபாக்கியம்', 'பாரதி கண்ணம்மா' (இவர் தன் கணவரால் பின் கொல்லப்பட்டார்). அவர்களது ஊக்குவிப்பும் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது.
படித்த புத்தகங்கள், வைத்திருக்கின்ற புத்தகங்கள் எண்ணிக்கை தெரியவில்லை. வாங்கிய புத்தகங்களைவிட., சேர்த்த புத்தகங்களே அதிகம்!!. ஒருமுறை போகிக்கு எரிக்க எங்க ஆயா ஒரு புத்தகம் தர, மக்கி நைந்திருந்த அப்புத்தகத்தின் பெயர் அரைகுறையாகத் தெரிந்தது., அது 'திருப்புகழ்'. ஆயா, எங்கேயிருந்து இத எடுத்த? என வினவியபோது., பரணிலிருந்து ஒரு 'டிரங்' பெட்டி இறக்கப் பட்டது. அதில் அத்தனையும் அரிய தமிழ் புத்தகங்கள். ஆனால் அனைத்தும் மிகவும் மக்கியிருந்தது. வெறும் வெட்டருவா, வேல்கம்புதான் நம்மாளுகளுக்கு என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, இத்தனை புத்தகங்கள் படித்த (படித்தார்களோ என்னமோ?) முகம் தெரியாத என் பாட்டனையோ, பாட்டியையோ நினைத்துச் சிலிர்ப்படங்க வெகுநேரமாயிற்று. இந்தக் கதையை நான் என் தோழியிடம் கூற., அட எங்க வீட்டிலேயும் அப்படித்தான் எனக்கூறி., அவள் காப்பாற்றி வைத்திருந்த 'மணிமேகலை' மற்றும் இரு புத்தகங்கள் தந்தாள். பள்ளியில் நடக்கும் போட்டிகளில் வென்று புத்தகங்கள் பரிசு பெறும்போது., 'ராஜாஜி' எழுதிய இராமாயணம் (ஆங்கிலத்தில்)., விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு(மூன்று முறை இதே புத்தகம் கிடைத்திருக்கிறது), போன்றவையே கிடைக்கும். அப்பொழுதெல்லாம் 'ஒரு ஜெயகாந்தன்., புதுமைப் பித்தன்னு தந்தா என்னா?னு நினைச்சுக்குவேன். பிறகு அவற்றை வாசித்துணர்ந்தபோது., அது வேறு பாதைக்கு என்னை இட்டுச் சென்றது. காந்தியின் 'சத்திய சோதனை'.,படித்த போது யாரும் பிறப்பிலேயே மகான் அல்ல என்பதும்., தன்னை உள்ளபடி நேர்மையாக ஒப்புக் கொடுப்பவனே., வழிகாட்டத் தகுதியானவன் என்பதும் தோன்றியது. காந்தி, விவேகானந்தர் எல்லாம் பள்ளியில் படிக்கும் வரைதான்., கல்லூரி வந்ததும்., கல்கி பழக்கமானார். மதிய இடைவேளைகளில் மத்திய நூலகத்திற்கு ஓடி 'பொன்னியின் செல்வன்'( 4 பக்கம் கூட நிம்மதியாப் படிக்க முடியாது., ஆய்வு நூலானதால் வீட்டிற்கு இல்லை)படித்து 4 மாதத்தில் முடித்தேன். மணியத்தின் ஓவியங்கள் தனிக்கதை சொல்லும். அநேகமாக கல்கியின் அனைத்துப் படைப்புகளையும் வாசித்திருக்கிறேன்., நேரமிருந்தால் இன்றும் மீள்வாசிப்பதுமுண்டு(http://www.chennainetwork.com/a/ebooks/ebooks.html). படித்ததில் பிடித்தது பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், மோகினித்தீவு, பார்த்திபன் கனவு, சிறுகதைகள் சில ஒற்றை ரோஜா உட்பட, கட்டுரைகள் பல. மூ. வரதராசனார் (எல்லாக் கட்சிகளுக்கும் பிடித்த எழுத்தாளர்) கடிதங்கள்.,கட்டுரைகள்., ஆராய்ச்சி நூல்கள்., (கற்பில் சிறந்தவள் மாதவியே என தீர்ப்பு கூறியவரல்லவா?.). ஆங்கிலத்தில் ஆர்.கே.நாராயண் கட்டுரைகள் கவர்ந்தது. அவரது 'மால்குடி டேஸ்' மறக்கமுடியாதது. அருந்ததிராய் அவர்களும் பிடித்த இந்திய ஆங்கில எழுத்தாளர். பிறகு தி.ஜானகிராமன்(அம்மா வந்தாள் 'பசி தெய்வம்., அதுக்கு நைவேத்தியம் பண்ணனும்(?!)'., மோகமுள்). புதுமைப் பித்தன் (படித்த அனைத்தும் பிடித்தது), ஜெயகாந்தன் (சில நேரங்களில் சில மனிதர்கள்., நந்தவனத்தில் ஒரு ஆண்டி) பிரபஞ்சன், பாலகுமாரன் (இரும்புக்குதிரைகள், தாயுமானவன்), அரு.இராமநாதன்( அரசியல் பற்றித்தெரிய வேண்டுமா?., இவரது வீரபாண்டியன் மனைவி படியுங்கள்)., சுஜாதா., எஸ்.ரா (துணையெழுத்து). இத்துடன் அவ்வப்போது, ரஜேஸ்குமார், சுபா கூட.
அரசியல் கட்டுரைகள், வரலாற்றுப் புதினங்களுக்கு கலைஞர் (ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், நெஞ்சுக்குநீதி, குறளோவியம் (முப்பாலில் மூன்றாம் பாலே அதிகம்). சாண்டியல்யன் (கடற்புறா).
நம்ம அம்மாக்களில் இராஜம் கிருஷ்ணன் (கரிப்பு மணிகள்)., அம்பை (வீட்டின் சமயலறையின் ஒரு மூலையில்). கோதைநாயகி இவர்களுடன் லக்ஷ்மி, இந்துமதி(காதல் ஓரிடம்., கல்லூரிப் பருவத்தில் படிக்கவேண்டும்), சிவசங்கரி (நிறைய), கேமா ஆனந்தீர்த்தன் (மனைவியின் காதலன்)., அனுராதா ரமணன், ரமணிச்சந்திரன் (கல்லூரிப் பருவம்., காதலில் விழுந்தோர்க்கு இவர் கதைகள் பிடிக்கும். ஆனா., நம்ம மூளையை கழட்டி ஒரு ஓரமா வச்சிரணும்).
தமிழ் எழுத்துலகில் ஜெயகாந்தன் யுகமுண்டு, புதுமைப் பித்தன் யுகமுண்டு., ஏன் ஒரு அம்பை யுகமோ., கோதைநாயகி, இராஜம் கிருஷ்ணன் யுகமோ இல்லை?., கரிப்பு மணிகள் எழுத இராஜம் அனுபவித்த துயரங்களை எந்த ஆண் எழுத்தாளராவது அனுபவித்ததுண்டா?.
ஆங்கிலத்தில் கல்லூரி காலத்தில் M&M., அத விடுங்க., அந்தக் காலத்து ஆளுகள்ல., Edward Gibbon (Decline and fall of the Roman Empire)., charles Dickens (Tale of two cities., Great Expectations)., Connan Dogle (sherlock holmes)., இப்பிடிச் சிலபேரு., அதுக்கும்முன்னாடி., நம்ம shakespeare. ஆனா இப்ப என்ன சுத்திக் கிடக்கறது, Animal Parade, Blue's perfect present, A Rainey day to remember, The Magic school bus, Magenta's super sleepover, It's not easy being big, Thomas and the school trip அப்பிடி, இப்பிடின்னு 75 தேறும். எங்க வீட்டு மகராசியோடது., நூலகத்தில அவ நினைகிற புத்தகம் இல்லைனா... நான் அம்புட்டுதான். அவுக 'தீம்' சொல்லுவாக., நான் அத 'டெவலப்' செய்யணும் (அதாவது அவ கத, நான் திரைக்கத!). நூலகத்தில் இல்லாத புத்தகத்தை வேண்டி மின்னஞ்சள் அனுப்பியிருந்தா., எனக்கு நாள் முச்சூடும் 'மெயிலு' பாக்கறதுதான் வேலை.
கவிஞர்களில் கண்ணதாசன், மூ.மேத்தா, வைரமுத்து (கவிதை எழுதும்போது வைர...முத்து... பாட்டெழுதும்போது?).,அப்துல் ரக்மான், இன்குலாப் படிப்பேன். பெண்கவிஞர்களில் பொன்மணி( என் பெயரை கவிதைகளில் அதிகமா உபயோகிப்பார்), கனிமொழி அப்புறம் நிறைய பேரு ஆனா சொல்லக் கூச்சமா இருக்கு!!.
நான் விழுந்து, விழுந்து படிக்கறதப் பாத்த எங்க தோட்டத்துல வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு அம்மா., "ஏன் சாமி இப்பிடி பொஸ்த்தகத்த படிக்கிறியே., அது என்ன கண்ணோடவா வரப்போவுது?" நு கேட்டாங்க., அட!., அது மனசோட வரும்னு பாவம் இந்தம்மாவுக்கு எங்க தெரியப் போகுதுன்னு நினைச்சுகிட்டேன். ஆனா படித்தவை அனைத்தும் மனதோடு வந்திருந்தால்., நாம ஒவ்வொருவரும் ஒரு சமுதாய ஏற்றத்தின் வித்துக்களல்லவா?.. தவிர., திருமணத்திற்கு முன்பே கருத்தரித்து, காரணமானவன் வீட்டிற்கு எதிர் வீட்டிலே, எவரையும் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் (அந்த ஆண் இவரை, நிராகரித்துவிட்டு. இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார்), சொந்தங்கள் புறக்கணிக்கத் துணிவுடன் கூலி வேலை செய்து, தன் பெண்மகவைத் தனியாய் வளர்த்து, திருமணம் செய்வித்த ஒரு பெண் எனக்குக் கற்றுக் கொடுத்த துணிவை., எந்தப் புத்தகமும் தரவில்லை., தன் வீட்டிலேயே ஊர்ப் பட்ட குழந்தைகள் வளர்த்து மாய்ந்து போனாலும்., ஆதரவில்லாத மற்ற குழந்தைகளையும் தூக்கி வளர்த்து மகிழ்ந்த எங்க ஆயாவின் அன்பை நான் எந்த எழுத்திலும் படிக்கவில்லை. கிராமப் புறங்களில் பேசுவோர் சர்வ சாதாரணமாக தூக்கிப் போடும் வார்த்தைகளில் உள்ள ஆழத்தை எந்த ஒரு இலக்கியத்திலும் கண்டதில்லை. 'வெள்ளைக்காரிகளுக்கு வெக்கமுமில்ல., துக்கமுமில்ல'. இந்த வரியை யோசித்துப் பாருங்கள். நமது அனைத்து துனபங்களுக்கும் காரணம் எப்படிப் புரியுது?
அப்புறம் முக்கியமான விதயம் (உபயம் முத்து), நான் இரவல் வாங்குகின்ற புத்தகங்களை ஒரு நாளும் திரும்பக் கொடுத்ததில்லை!!. உயிர் போகின்ற அவசரமா இருந்தாலும் யாருக்கும் 'புத்தகத்தையும்' 'பேனா'வையும் மட்டும் கடன் கொடுத்ததில்லை!!!.
ஜோதில இதுவரை இல்லாத அனைவரையும் அழைக்கிறேன்.

7 comments:

துளசி கோபால் said...

மரமே!

சூஊஊஊஊஊஊஊஊஊஊஊப்பர்!!!!!!

அட்டகாசமா இருக்கு!!!!

வாழ்த்துக்கள்!!

அப்புறம் முக்கியமான விதயம்( நன்றி அதே முத்து!)

சென்னை நெட் ன்னு ஒரு லிங்க் கொடுத்தீங்களே
அடாடாடா ரொம்ப நன்றி. நிறைய கதைகள் 'இபுக்' காக இருக்கு. ஹையா, ரொம்பக் குஷியாயிட்டேன் அக்கா.

நல்லா இருங்க!!!

மாயவரத்தான்... said...

//வருடம் தவறாமல் பொங்களுக்கு //

அது என்னாது அது?!

சுந்தரவடிவேல் said...

//அது என்ன கண்ணோடவா வரப்போவுது?//
அந்தம்மா ஏதோவொரு சித்துப்பொடி போட்டுத்தான் இந்தக் கேள்வியக் கேட்டிருக்காங்கன்னு படுது:))

அப்டிப்போடு... said...

துளசி அக்கா, மயவரத்தான், சுந்திரவடிவேல் நன்றி.

மாயவரத்தாரே.,
பச்சரிசி, பால், புது வெல்லம் எல்லாம் போட்டுதான் பொங்கள் செய்வாங்க., அதில் உள்ள பால் பொங்குவதுதான் பொங்கள். அதை அவர் 'பால் பொங்கிற்றா?'., எனக் கேட்டு கடிதம் எழுதுவார். அவர் எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் இலக்கிய கடல்., வெளியே தெரியாமலேயே எத்தனையோ நல் மூளைகள் உரங்கிப் போகின்றன. துன்பம் விழைவிக்கும் கபட மூளைகள் ஞானபீடம் பெருகின்றன.

சுந்திரவடிவேல்,
என்ன சித்துப் பொடி?

அப்டிப்போடு... said...

என்னுடைய இப்பதிவில் லா.சா.ரா போன்ற நல்ல சில எழுத்தாளர்களை எழுத மறந்து விட்டேன். ஈழ , தலித் எழுத்தாளர்கள், பற்றி தனிப் பதிவிட வேண்டும் என்பதையும் சொல்ல மறந்துவிட்டேன்.

சினேகிதி said...

http://www.geocities.com/ponniyinselvan_kalki/index.html

மேலுள்ள தளத்தில் கல்கியின் படைப்புகளை வாசிக்கலாம்.

மாயவரத்தான்... said...

//ச்சரிசி, பால், புது வெல்லம் எல்லாம் போட்டுதான் பொங்கள் செய்வாங்க//

மேற்படி வஸ்துவை எங்க ஊரிலேயெல்லாம் 'பொங்கல்' அப்படீன்னு சொல்லுவாங்க.. அதான் கேட்டேன்!