Thursday, June 02, 2005

மாமிசமா? சைவமா?

நான் விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு செல்லும் போது, வா! சாமி., நல்லாருக்கியா? இப்படி பல கேள்விகளோடு எங்க சனமெல்லாம் என்னைப் பார்த்த பரவசத்தில் ஓடிவரும் வேளையில், இந்த ஆடு, கோழி இதெல்லாம் இருக்கு பாருங்க... அதெல்லாம் நான் ஊருக்குள்ள கால வச்ச உடனே தெரிச்சு ஓடி, ஆடு அது பட்டியிலும், கோழி பஞ்சாரத்திலும் தானாப் போயி அடைஞ்சுக்கும். ஏன் தெரியுமா? நான் அம்புட்டு மாமிசப் பட்சினி. நானும் இதெல்லாம் பாவம்... ஏன் சாப்பிடனும்?. உயிர்க் கொலை புரியலாமா? இதுல உள்ள சத்து காய்கனில இல்லையா? அப்பிடி, இப்பிடின்னு ஆயிரம் கேள்வி கேட்டுக்குவேன். அதெல்லாம் கறிக்குழம்பு வாசம் என் மூக்கை துழைக்காதவரைதான். அதான் வச்சுட்டாங்கல்ல, நாம சாப்பிடுலைன்னா யாரும் சரியா சாப்பிடமாட்டங்கல்ல? அப்பிடின்னு மனச சமாதானப்படுத்திட்டு(!) ஒரு வெட்டு வெட்டிருவேன். இப்படி மாடு, பன்னி, பாம்பு, பல்லி, எலி, நாய் என்று சிலதைதவிர குறிப்பா பறவைகளில் காகம் தவிர அனைத்தையும் சாப்பிட்டு இருக்கிறேன் எனச் சொல்லலாம்.

வெள்ளையர் காலத்திலே துப்பாக்கி வைத்துக் கொள்ள என் பாட்டனார் அனுமதி பெற்றுருந்தார். வழிவழியாக இன்றும் அது தொடர்கிறது. எங்கள் ஊரைச் சுற்றி மலைகள் என்பதால்., எங்க அண்ணனுக்கெல்லாம் பொழுது போக்கு வேட்டையாடுதல். முயல்கள், கொக்கு, காடை (பறவைகளிலே மிக சுவையானது பச்சை காடைதான்), புறா என்று ஏதாவது வரும். பத்தாவது நான் தேறிவிட்டதற்கு (நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை பாருங்க! நீ புத்தகத்த தொட்டே நாங்கெல்லாம் பாத்ததில்ல.... தேறிருவியா?.,) எனக்கு அண்ணன் தந்த பரிசு 3 புறாக்கள். தலையில் கைவிளக்கு (டார்ச் லைட் ) கட்டிக்கொண்டு நண்பர்களுடன் ஏதோ போருக்கு போவது போலப்போய்... ஒன்றும் இல்லாமல் திரும்பி வரும் காலமும் உண்டு.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் கருப்ப கோவில் என்ற ஒன்றுண்டு., அதில் ஆண்கள் மட்டுமே பூஜையிலிருந்து, பொங்கள் வரை செய்ய வேண்டும். அப்போது ஆடு, கோழி என எல்லாவற்றையும் கலந்து மிகச் சுவையாக சமைப்பார்களாம். பெண்களுக்குத் தாடா என்பதால் சுவைத்ததில்லை. திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட ஒரு ஊரில் கனி உண்ணும் 'வவ்வால்கள்' வேட்டையாடுவது மிகவும் பிரசித்தமானது. டாட்டா சுமோக்களும், சபாரிகளும் தவம்கிடக்கும் 'வவ்வாள்'களுக்காக. ஏனெனில் அது மிகவும் சுவையாக இருக்குமாம். எங்க பெரியம்மா கோழி, புறா சமைச்சா தேவாமிருதம்னு இதத்தான் சொல்லியிருப்பாங்க போலன்னு நினைச்சிக்குவேன். பொன்னியின் செல்வனில் ஏறத்தாழ, 2000 வருடங்களுக்கு முன் தமிழர்கள் பெரும்பாலும் மாமிசம் உண்ணுபவர்களாகவே இருந்திருக்கின்றனர் என வாசித்திருக்கிறேன்.

அமெரிக்கா வருவதற்குமுன் சிறிது காலம் சிங்கப்பூரில் வசித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் சமைக்கத் தெரியாதென்பதால், தேக்காவில் இருக்கும் சுதாஸ், சிதாரா அப்புறம் 'சோச்சுகாங்' முருகன் கோவில் அருகில் உள்ள 'வாழையிலை' போன்றவைதான் அன்னையாக இருந்து அமுதூட்டின (மாமிச அமுதுதான்). சிராங்கூனுக்குச் சற்று தள்ளியுள்ள ஒரு ஆந்திரா உணவகம்., அங்கும் நன்றாக இருக்கும். சிங்கப்பூர் போன புதுதில், அங்கிருந்து நம்ம வீட்டுக்குத் தொலைபேசும்போது (ஞாயிற்றுக்கிழைமைகளில்) என்ன சாப்பாடு? எனக் கேட்டால்., நீயில்லயா? அதச் செஞ்சாலே சாப்பிட மனசு வரமாட்டேங்குது... அப்புறம் கொஞ்ச நாள் கழித்து இன்னைக்குத்தான் மீன் வாங்கி ஏதோ செஞ்சேன்.... அப்புறம் கொஞ்ச நாள் கழித்து இங்க மட்டன் கொழம்பு, மட்டன் வருவல்... அங்க எல்லாம் கிடைக்குதுதான, வாங்கி நல்லா செஞ்சு சாப்புடுசாமி...! எங்க செய்யிறது? நமக்கு வந்து வாய்ச்சது சுத்த சைவம்!!. ஆனால் பறவை, மிருகங்கள் மேல் எனக்கிருக்கும் பாசத்தைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லமுடியாத நிலை. இங்கு 'இண்டியா பேலஸ்'., 'டச் ஆஃப் ஏசியா' போன்ற உணவகங்கள் பரவாயில்லை. இப்போது நானிருக்கும் ஊரில் 'செட்டி நாடு' உணவகமே இருக்கிறது. 'மெக்டொனால்ஸ்' 'பர்கர்கிங்' தாண்டி செல்லும்போது., அடச்சே... இத என்னத்த சாப்புடறது? உப்புச்சப்பில்லாம? அப்பிடின்னு நினச்சாலும், இது என்ன உன் போக்குக்கே விரோதமால்ல இருக்கு? மிளகையும், உப்பையும் கலந்து அடிக்கவேண்டியதுதான? அப்பிடின்னு நம்ம மனசு 'பளிச்' 'பளிச்' ன்னு கேள்வி கேக்கும். மனசாட்சியத் தாண்டி நடக்க முடியுமா?.

மேனகா காந்தி ஏதும் இக் கட்டுரையைப் படிச்சுட்டு , உள்ள தள்ளிரப் போறாங்க!. எனக்கு எப்போதுமே ஒரு குழப்பம்!!. மாமிசம் உண்பது தவறா?., நான் கேக்கறது எனக்கே சிரிப்பா இருந்தாலும்., நாலு பேரு எதாவது சொன்னிங்கன்னா விட்டுடமுடியுமான்னு பார்க்கிறேன். (தலைப்பு கொஞ்சம் விவகாரமா இருக்கட்டுமேன்னுதான்...)

14 comments:

இராமநாதன் said...

வணக்கம்
நன்றாக எழுதியுள்ளீர்கள். நான் ஒன்றும் மாமிச பட்சினியாக இல்லாவிட்டாலும், சாப்பிடுவதில் தவறிருப்பதாக தெரியவில்லை. வீட்டில் முட்டைக் கூட சாப்பிடாத சுத்தசைவமாக இருந்தாலும் மெக்டோனால்ட்ஸில் சிக்கன் மெக்நக்கட்ஸையும், மெக்சிக்கனையும் மஸ்டர்ட் ஸாஸ் சேர்த்து வெளுத்து வாங்குவதில் ஒரு தனி சுகம் (இந்த ஊரில் வெஜ்-பிக்மாக் கிடையாதென்பது ஒரு நல்ல சாக்கு)!

animal exploitation என்று இதை கருத முடியுமா என்பது யோசிக்கவேண்டிய விஷயம். தாவரங்களும் உயிரினங்கள் தான் என்றாலும் அவைகளின் நிலை தாழ்ந்ததாகவும் அவைகளை வதைப்பது மிருகங்களை வதைக்கும் அளவுக்கு கொடுரமாக கருதப்படுவதில்லை. இது எதனால் என்பதும் விளங்கவில்லை. உலகத்தில் இருக்கும் மற்ற எல்லா உயிர்களும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டவை என்ற குறுகிய நோக்கின் விளைவாய் கூட இருக்கலாம். இல்லை மிருகங்கள் வலியை உணர்த்துவதில் தாவரங்களை விட நன்றாக செய்கின்றன என்பதுவும் காரணமாக இருக்கலாம்.

அவரவரின் விருப்பத்தைப் பொறுத்து விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி.

பி.கு: இந்த பின்னூட்டத்தைப் படித்து விட்டு என் பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கு பிடித்திருக்கிறதென்று என் கையையோ காலையோ கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசிக்க வேண்டும்.

வீ. எம் said...
This comment has been removed by a blog administrator.
வீ. எம் said...

// குறிப்பா பறவைகளில் காகம் தவிர அனைத்தையும் சாப்பிட்டு இருக்கிறேன் எனச் சொல்லலாம் //

பருந்து நல்லா இருக்குமா பா???? சாப்பிடலாமா னு ஒரு ஆசை ..அதான் கேட்டேன்..

ஒரு சாதாரண மேட்டரை இவ்வளவு இன்ட்ரஸ்ட்டிங் கா எழுதுறீங்க .... அருமை அசைவ பி(வெ)ரியரே ! !

வீ .எம்

Muthu said...

அப்படிப் போடு,
கடைசியில் நாயகன் ஸ்டைலில் கேள்வி கேட்டுட்டீங்களே :-).

எனக்கு அவ்வப்போது தோன்றுவது, மிருகங்கள் நம்மை மாதிரி பேச ஆரம்பித்தால் அது கேட்கும் பல கேள்விகளுக்கு நாம் தலைகுனிய வேண்டியிருக்கும்.

துளசி கோபால் said...

காக்கா தின்னலையேன்னு கவலைப்படாதீங்க!!! ச்சிக்கன் பிரியாணின்னு சொல்லிக்கிட்டு அதுலே காக்காயைப் போட்டு விக்கறாங்களாம்! எங்கே? எல்லாம் நம்ம சிங்காரச் சென்னையிலேதானாம்!!! கையேந்திபவன் பக்கம் போயிராதீங்க!

நான் கல்யாணம் கட்டுன புதுசுலே 7 வருசம் சைவம்தான். காரணம் மாமிசம் சமைக்கத்தெரியாது. மீனாட்சி அம்மா புத்தகத்துலே மட்டன் வறுவல் செய்முறை இல்லையே!!!!

மாயவரத்தான்... said...

கேக்குறேன்னு தப்பா நெனக்காதீங்க... இன்னொரு பதிவிலே உங்க வயித்திலே குழந்தை இருந்ததா எழுதியிருந்தீங்க.. இங்கே என்னடான்னா ஊரிலே 'வா சாமி...' அப்படீன்னு கூப்பிடுவாங்கன்னு சொல்றீங்க.. இங்கே சொல்லுற 'சாமி' உங்க பெயரோட ஒரு பாகமா?! இல்லாட்டி பொதுவா ஆம்பிளை பசங்களை தானே ஊர் பக்கம் இப்படி கூப்பிடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்!

வசந்தன்(Vasanthan) said...

நல்ல சுவாரசியமாக இருக்கிறது பதிவு.
வீட்டில் கோழி வளர்த்ததால் முதலாம் இடப்பெயர்வு வரை கோழி தொட்டதில்லை. ஆனால் இன்று அலுத்துப்போகுமளவுக்கு தின்றாகிவிட்டது. அதுவும் ஒஸ்ரேலியா வந்தபின் கோழி அலுத்தேவிட்டது. ஊர்க்கோழி (நாட்டுக்கோழி) போல் எதுவும் வராது.

உங்களைவிட நான் பரவாயில்லை. பன்றி, பாம்பு, குரங்குகூட நன்றாகச் சுவைத்தாயிற்று.

சரியா தப்பா என்றெல்லாம் கேட்கவே கூடாது. 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என்று சும்மாவா சொன்னார்கள் (நல்ல ஒரு சாக்கு.)
மனிதரைத் தின்பதில்லையாதலால் தான் மனிதக் கொலை ஒரு பாவமாகத் தெரிகிறது. அதையும் செய்துவிட்டால் எதுவும் பாவமில்லை;-)

குழலி / Kuzhali said...

பதிவு நன்றாக உள்ளது, மாயவரத்தான் நீங்க ஏதோ சந்தேகத்தோட கேட்கிறமாதிரி உள்ளது, முந்தைய பதிவுகள்,மற்றொரு பதிவெல்லாம் பார்த்தால் இந்த சந்தேகம் வராது

மாயவரத்தான்... said...

குழலி... அப்படி ரெண்டு மூணு பதிவுகளை படித்ததினால் தான் எனக்கு சந்தேகமே.. அவரு ஆணா இருந்தா என்ன, பெண்ணா இருந்தா என்ன? நல்ல சுவையா எழுதுறாரு... அம்புட்டு தான். இருந்தாலும் out-of-curiosity கேட்டேன்.

க்ருபா said...

பொன்னியின் செல்வனில் ஏறத்தாழ, 2000 வருடங்களுக்கு முன் தமிழர்கள் பெரும்பாலும் மாமிசம் உண்ணுபவர்களாகவே இருந்திருக்கின்றனர் என வாசித்திருக்கிறேன்.

பொன்னியின்செல்வனில் இந்த வரிகளைத் தான சொல்றீங்க?

நெல்லைக் காவல் காத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக்கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. "கோழி அப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது?" என்று அலட்சியத்துடன் அக் குழந்தைகள் சோழியும் பல்லாங்குழியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிசைகளின் கூரைகளின் வழியாக அடுப்புப் புகை மேலே வந்து கொண்டிருந்தது. அடுப்புப் புகையுடன் நெல்லைப் புழுக்கும் மணமும், கம்பு வறுக்கும் மணமும், இறைச்சி வதக்கும் நாற்றமும் கலந்து வந்தன. அக்காலத்தில் போர் வீரர்கள் பெரும்பாலும் மாமிச பட்சணிகளாகவே இருந்தார்கள். வல்லவரையனும் அப்படித்தான். எனவே அந்த மணங்கள் அவனுடைய நாவில் ஜலம் ஊறச் செய்தன.

1000 வருடங்களுக்கு முன்னால்.

க்ருபா

NONO said...

எல்லாம் பழக்கதோசம்!!! விட வேண்டும் என்று நினைத்தால் விடலாம், எல்லாம் மனத்தை பொறுத்து!!! உடனே எல்லாத்தையும் விடவேண்டும் என்று எதையாவது விலக்குவது அதிக பயன் தராது, படிப்படியாக விடலாம்! இதில் சில சிக்கல்கள் வரலாம் உ+ம் சில விருந்துதொம்பல் சமயம்!! உங்களை விருந்துக்கு அழைப்பவருடம் முன் கூட்டியே நீங்கள் சைவம் என தெரிவிப்பதன் மூலம் இப்படிப்பட்ட சிக்கல்களை தவிற்கலாம்!!! பல விருந்தோம்பலில் பல நாட்டு சைவ உணவுகளை நான் சுவைத்திருக்கிறேன்!!! வெளிநாடுகளில் சைவ உணவு உண்ணுவது ஒன்றும் அதிகம் சிரமம் இல்லை! பல நாடுகளில் பல உணவு விடுதியில் அவர்களுடைய மெனுவில் இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் சமைத்துத் அழகிய அலங்கரத்தோட தந்து உள்ளார்கள்!!!

அப்டிப்போடு... said...

இந்தப் பதிவிற்கு திடீரென ஜூலை மாதம் பின்னூட்டங்கள் இப்போதுதான் பார்க்கிறேன்., பின்னூடடமிட்ட இராமநாதன், வீ.எம், முத்து, துளசி அக்கா, மாயவரத்தான், வசந்தன், குழலி, க்ருபா, நோநோ ஆகியவர்களுக்கு நன்றி.,

மாயவரத்தான்.,

நிறைய பேர் என்னை ஆண் என்றே நினைக்கிறார்கள்!., இன்றுகூட ஞானபீடம் அவரது பதிவு பின்னூட்டத்தில் நான் ஆண் என நினைத்து மறுமொழியளித்துள்ளார். ஒருவேளை என் எழுத்து அப்படி உள்ளதோ என்னவோ., தவிர நான் வளர்ந்தது எல்லாம் ஆண் பிள்ளைகள் சூழ., எங்க அண்ணன்களுடன்., அவர்களே என்னை வாடா காளை(காளையாம்!)., போடா என்றே அழைப்பர். எங்க அம்மாவும், ஊரில் உள்ள உறவினர்களும் சாமி, வாடா, போடா என்றே அழைப்பது வழக்கம். எங்கள் ஊர்ப்பக்கத்தில் பெண் பிள்ளைகளைதான் சாமி என்பார்கள். எங்கள் அத்தை அவரது இரு பெண் குழந்தைகளை 'பெரியாண்டவா','சின்ன ஆண்டவா' என்று அழைப்பார். என்ன தலை சுற்றுகிறதா?., எங்கள் பரம்பரையில் பெண் பிள்ளைகள் குறைவு., எங்க பாட்டனாருக்கு ஒரே தங்கை(அவரும் சிறிய வயதிலே இறந்துவிட்டார்)., எங்க அப்பாவிற்கும் ஒரே தங்கை(ஒரு அண்ணனும்)., எங்க பெரியப்பாவிற்கு பெண் பிள்ளையே இல்லை. ஆணையே அதிகம் கொண்ட குடும்பம் என்பதால் என்னையும் அப்படி அழைக்கிறார்கள் போல., இவர்களைப் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனி ஓனரில் இருந்து... இப்போது என் கணவர் வரை அனைவரும் வாடா, போடாதான். எனக்கு என்னை ஆணென விழிப்பதை மறுக்கத் தோன்றவில்லை. அது அவ்வளவு முக்கியமான விதயமாகப் படவில்லை., ஆனால் இப்போது இணையங்களின் நிலையைப் பார்த்தால் தெளிவு படுத்தி விடுவது நல்லதென தோன்றுகின்றது. எனவே மக்களுக்கு மக்களே 'நானும் ஒரு பெண்'. அதை ஒத்துக்கொண்ட குழலிக்கும்., நான் நன்றாக எழுதுகிறேன் எனச் சொன்ன மாயவரத்தாருக்கும் என் நன்றிகள்.

லதா said...

// 'நானும் ஒரு பெண்'. //

அதைத்தான் உங்க முதல் பதிவிலேயே "வந்திட்டா மகராசி"ன்னு எழுதியிருக்கிறீர்களே :-))

அப்டிப்போடு... said...

லதா ஒருத்தருக்கு சந்தேகம் வந்திருச்சே!., க்ருபா., 1000 வருடங்களுக்கு முன்னால்தான் மன்னிக்கவும்.