Monday, June 20, 2005

கூத்தரும், பாணரும்.

பழந்தமிழகத்தில் மன்னர்களை மகிழ்விக்க கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்றோர் மன்னனது ஈகை குணம், வீரம் போன்றவற்றை உயர்த்திக் கூறி., மண்ணகங் காவல் மன்னன் முன்னர் தான் எண்ணிய பரிசு இதுவெனவும் கூறி வாங்கிச் செல்வார்கலாம். ஈகையையும், வீரத்தையும் இரு கண்ணென போற்றி இருந்திருக்கிறார்கள் அக்காலத்தில். அப்போது கூட 'வல்வில் ஓரி' என்ற மன்னனைப் பார்க்க வந்து ஏமாந்த புலவர் ஒருவர்.,

"ஈயென இரத்தல் இழிந்தன்று அதனின்
ஈயேன் என்றல் அதனினும் இழிது.. "

எனத் துவங்கிய புறப் பாட்டொன்றைப் பாடி இருக்கிறார். கடலில் எவ்வளவு நீர் இருந்தாலும் அதை ஆடு., மாடுகள் குடிப்பதில்லை., ஆனால்

'ஆவும் மாவும் சென்றுணக் கலங்கி,
சேறோடு பட்ட சிறுமைய தாயினும்
உண்ணீர் மருங்கின் அதற் பலவாகும்...
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர் அதனால்....."

இப்படிப் போகின்றது அப்பாட்டு. பாரி, பேகன் போன்று கடையெழு வள்ளல்களில் ஒருவன் ஓரி... அவனே ஒரு புலவரைப் புலம்ப வைத்திருக்கிறானென்றால்., உண்மையில் நமது நாட்டில் ஈகை தழைத்திருந்ததா?.
அக்காலத்தில், புலவர்கள் தான் நிறைய பொருட்கள் பெற்ற இடத்தை மற்ற பணர்களுக்கு அடையாளம் காட்ட, ஆற்றுப் படுத்துதல் அதாவது 'வழிப்படுத்துதல்' என்ற மரபை வைத்திருந்திருக்கிறார்கள்., "பெற்ற பெருவளம்., பெறார்க்கு அறிகுறீயீச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்". அன்று செய்யுள் எழுதினார்கள்., இன்று அனைத்தும் உரைநடையாயிற்று. ஆனால் செய்யுள் எழுதியவன்., "இவ்வளவு பெற்றேன்; நீயும் சென்று வாங்கிக்கொள்" என்கிறான்., ஆனால் நம் எழுத்தாளர்கள்?. அதைவிட அவர்களின் குணத்தைப் பற்றி சொல்லும்போது,
"புகழெனின் உயிருங் கொடுக்குவர்
பழியெனின் உலகோடு பெறினுங் கொள்ளலர்
அயர்விலர் அன்ன மாட்சியினராகி.... "

தமெக்கென முயலாமல் ...பிறர்கென முயலுனர்..... இதையெல்லாம் படிக்கும்போது., கற்பனையை ஏற்றி இதையெல்லாம் கூறியிருப்பரோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. எனெனில் இவற்றையெல்லாம் படித்து வந்தவர்கள்தாம் நாமும்...நமது எழுத்தாளர்களும். நாலுபேர் கவனத்தை ஈர்க்க., எத்தகைய பழியையும் எழுதத் தயங்குவதில்லை நாம். அன்றைய புலவர்களின் சங்கிலித் தொடர்தான் எழுத்தாளர்களென்றால்., ஒரு மாட்சிமைகூட கைவரவில்லையே ஏன்?.
அன்று மன்னராயிருந்தவர்கள் சிலர் புலவராகவும் இருந்திருக்கிறார்., புலவர்களோ, கூத்தர்களோ மன்னராக இருந்திருக்கின்றனரா?., எனக்கு தெரியவில்லை., தெரிந்தவர் சொல்வீர். ஆனால் இன்று மன்னாராட்சி கடந்த காலமாகி., மக்களாட்சி!!., பரிசு வாங்கிய கூத்தர்கள் கொடுக்கிறார்கள்., கூத்தாடுவதே மன்னராகத்தான்?!.

Friday, June 17, 2005

இணையத்தில் பதிபவர்களே - பதில் சொல்லுங்கள் இதற்கு!!!

இணைய தளத்தில் தான் பாத்தவற்றை., படித்தவற்றை, அறிந்தவற்றை, புரிந்தவற்றை தினமும் வந்து பதிக்காவிட்டால் கை நடுங்கும் இணைய நண்பர்களைப் பார்த்து கேட்கிறேன்., உங்களைப் பார்த்து கைநீட்டித்தான்., இந்த நள்ளிரவிலும் தூங்காமல் விழித்துக் கேட்கிறேன். நீங்கள் எல்லாம்............ இந்த சவாலுக்கு தயாரா?


ஹி ஹி!! வேற ஒண்ணுமில்ல.....நான் ஒரு கணக்கு சொல்கிறேன்., யார் சரியான விடை சொல்கிறீர்கள் எனப் பார்ப்போம். ((பின்ன தமிழ் மணத்துல தெரியுற மொத மூணு வரியப் படிச்சிட்டு ஓடிப் போயிற்ரிக., 15 நிமிச அற்ப ஆசைன்னு 80 வயசு 'பாய்'(ஸ்) சொல்லிட்டாரு...ம்.. அவருக்கென்ன அவரு வீட்டு 'லாண்டிரி(அட இந்தத் துணி துவைக்கிறது)பில்லக் கூட பத்திரிக்கைகரங்க வெளியிடுவாங்க (இது அவரே சொன்னது)...ஆனா நம்ம??)).


கட்டியால் எட்டுக் கட்டி, 1/4, 1/2, 3/4 ஆக செட்டியார் இறந்த பின்பு (யாரும் அடிக்கவராதீங்க., கணக்குல செட்டியார்னுதான் இருக்கு)சிறு குழந்தை மூன்றிற்கும் பிடாமல் (துண்டு போடாமல்) சரியாக (சம அளவு) பகிர்ந்து கொடுக்கவும்.


புரியாதவர்களுக்காக:

8 கட்டி இருக்குது மாமூ., செட்டியார்க்கு 3 புள்ள குட்டிங்க அக்கா, அவர் அப்பீட்டு ஆனாங்காட்டி..., இந்த மூணு புள்ளங்களுக்கு.... கட்டிகள உடைக்காம சரி சமமா பிரிச்சுக் கொடுக்கணும். எப்பிடி கொடுப்பிங்க?.

மதுர ஏரியா எல்லாம் ஒத்திக்கோ., நிச்சயம் இதுக்கு உங்களுக்கு விடை தெரிஞ்சு இருக்கும். தெரியாங்காட்டி ஒரு தபா 'ட்ரை' பண்ணு தப்பில்ல!. (ராமதாஸ் அண்ணாச்சி கூட்டணி மாறுர ஜோர்ல இருக்காப்ல இருக்கு., இடையில நம்ம தமிழு கொஞ்சம் 'ரெஸ்ட்' எடுக்கட்டும் இன்னான்ற...பா.. நீயி?)

Wednesday, June 15, 2005

ரஜினியின் குறும்பு

கடந்த மூன்று வாரமாக குமுதம் ரஜினியின் பேட்டியை வெளியிட்டு வந்தது. 06.06.2005 அன்று "Exclusive" - நேரடி சந்திப்பு என்று அட்டையிலே (படங்காட்டப்பட்டு) சுட்டப்பட்டு, (அட்டைப் படத்தில ரஜினி)லக்லக்லக்க ரகசியம் என்று தலைப்பிடப் பட்டு, 13.06.2005 அன்றும் அட்டைப் படத்தில் ரஜினி தலைப்பு : ரஜினியின் அடுத்த திட்டம்; அடுத்து 20.06.2005 அன்று அட்டையில் விக்ரம் (அதான் பேட்டி முடியப் போவுதில்ல? அடுத்தாளப் பார்க்கலாம்னு போல); தலைப்பு : இமயமலை என் ஆன்மீக வீடு., ஒரு நாள் சந்திப்புதான்., பேட்டி வெளியாகுமுன்னரே அதன் ஆசிரியருக்கு பேட்டியின் முழு விவரம் தெரிந்திருந்தும் என்னா பில்டப்பு?)

எதை உண்டால் 'முதல் இடம்' என்ற பித்தம் கொண்ட குமுதம்., ரஜினியைத் தானாகவே சந்தித்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஜவகர் பழனியப்பனை வாசலுக்கே வந்து வரவேற்றாராம் ரஜினி(?!).
அந்த வார பேட்டியின் ஒரு பகுதி கீழே,

ரஜினி : தினக்கூலி 50 ரூபாய் சம்பளம் வாங்குறவுங்க 30 ரூபாயை தியேட்டர் டிக்கெட்டுக்கு கொடுக்கிறாங்க., .......

இதுக்கு ஜவகர் அய்யா சொன்ன பதில் : பலகோடி மக்களை மூன்று மணிநேரம் அவர்களின் எல்லா கவலைகளையும் மறக்க வைத்து சந்தோசப் படுத்திரிங்க., அது எத்தனையோ கோடிக்கு சமம்(!).
தொடர்ந்து பேட்டியில் பாபாவுக்குப் பிறகு கலையுலகத் தொடர்ச்சியா ஒரு திட்டம் வச்சிருந்தேன்னு பூடகமா ரஜினி கூறினார்., (ஐயா, அவங்கவங்க டப்பு டப்புன்னு காமராசர், எம்.ஜி.ஆர் இல்ல., அதனால நான் வாரேன்னு கொஞ்சங்கூட தயக்கமில்லாம அடிச்சுப் பாக்குறாங்க இன்னும் எத்தன நாளைக்கு சாமி நீங்க இப்பிடி பூடகமாவே பேசி., உங்கள கும்பிடுறவங்கள (ரசிகன்ல இருந்து அரசியல்வியாதிக வரை) வெறுப்பேத்துவிக?).
ஜவகரும் விடாம, இமயமலையப் பத்தி புகழ்ந்து பேசிட்டு (ப்ப்ப்பாவம்ய்யா....!)., நீங்க சொல்றதக் கேட்கும்போது இப்பவே அங்க போகணும் போல தோணுது( எங்க?., இமயமலைக்கு...ஹா ஹ் ஹா!)., எதிர்காலத்துல வேற ஒரு திட்டம் வச்சிருக்கிறதா நடுவுல சொன்னிங்க? அது என்னன்னு சொல்லமுடியுமா (தூண்டில் போட்டாச்சு).

அதுவும் கலையுலகம் சார்ந்த ஒரு பிளான் தான்னு (நழுவிருச்சு மீன்)., அந்தப் பிளான் ஆப் தி ரெக்கார்டாம்., (அது யாருக்கு வேணும்?).
இப்படியே பேட்டி மொத்தமும் இமயமலை, மகான். கீதை ந்னு போயி., அவல நினைச்சுப் போன குமுத்தத வெறும் வாயும் மூணு புத்தகமுமா (என்ன புத்தகம்னு ரஜினி புத்தக மீ-மீ ங்கிற மாய இல்ல முகமூடி பதிவுல பாத்துக்கங்க) திருப்பியனுப்புன ரஜினியின் குறும்புத்தனத்த நினைச்சு, நினைச்சு சிரிச்சுகிட்டேயிருந்தேன் நேற்று முழுவதும். ஆன்மீகப் பயணத்த பத்திதான் வாரவாரம் விகடன்ல சொல்றாரே... ஜவகர் நீங்க அதைப் படிச்சு தெரிஞ்சுட்டு இருந்திருக்களாம்.

விஜயகாந்த் பொங்கியெழுந்து பேட்டி குடுக்கறதுகூட குமுதத்த தூக்கி நிறுத்தவில்லை போல?., ஒரு பொத்தகத்த வாங்கி ஒரே நாள்ல ஊர் முச்சூடும் படிச்சுருமப்பு நம்ம ஊர்ல.
ஒரு நாட்டின் எதிர்கட்சி போன்று செயல்பட வேண்டும் பத்திரிக்கைகள். நமது அரசியல் சட்டத்தின் நன்கு தூண்களில் ஒன்று தவறிழைத்தாலும்., அத்தூணாக தான் மாறி, நெறியுரைக்க வேண்டும் பத்திரிக்கைகள். பட்டணத்து நாகரீகத்தில் பிறந்து, சினிமாவுடன் வளர்கின்ற மேட்டுக்குடிகளுக்கு வேண்டுமானால் பத்திரிக்கைகள் படித்து தூக்கி எறியும் பழைய பேப்பராக இருக்கலாம்., ஆனால் கிராமப் புறங்களுக்கு பத்திரிக்கையும், பஞ்சாயத்து டி.வியும்தான் உலகத்தைச் சொல்லும் ஊடகங்கள்., சினிமாவெல்லாம்., தீபாவளிக்கும், பொங்களுக்கும் பார்க்கின்ற கொண்டாட்டங்கள் அவ்வளவே!. ஒரு முறை அரசியலைப் பற்றி நானும் எங்க அண்ணனும் காரசாரமாக விவதித்துக் கொண்டிருந்தோம்., அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு அம்மா., "எனக் கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப் போலவே இருப்பான்னு" பாடுன மனுசனுக்கு ஒரு புள்ள இல்லயே?ன்னு புலம்புச்சு. இவ்வளவு ஏன் எம்.ஜி.ஆர் இறந்துட்டார்னு மொதமொத ஊர்ல வந்து சொன்ன பையனோட சனங்க யாரும் கொஞ்ச நாளாப் பேசவேயில்லை. இப்படி கண்மண் தெரியாமல் அன்பு வைக்கும் மக்களுக்கு நடிகர்கள் கொடுப்பது என்ன?. பத்திரிக்கைகள் பொறுப்பில்லாமல் ரஜினியிலிருந்து, செந்தில்வரை அரசியலுக்கு வர அழைப்பதின் பின்னனிதான் என்ன?. சில பேர் சொல்கிறீர்கள் வந்தால் வரட்டும்., தேர்தலில் எதிர்த்து பிரச்சாரம் செய்யுங்கள் என்று. சாமி!., காக்கா உட்க்காரப் பனம்பழம் விழுந்த கதையாகத் தானேய்யா இங்கு நடிக, நடிகைகள் ஆட்சிக்கு வருவது? (நான் எதைக் குறிப்பிடுகிறேன் எனப் புரியும் என நினைக்கிறேன். ) திடும்மென லாட்டரியில் தமிழ்நாட்டு முதல்வர் பதவி கிடைத்தவுடன்., என்ன நடக்கிறது அதிகாரிகள் உலகத்திலும், எதிர் அரசியல் கூடாரத்திலும் என அனுமானிக்கக்கூட அவகாசம் இன்றி., ஊழலை கண்டு கொள்ளாமல்., தான் அடித்து முதலில் விட்டதைப் பிடித்து கொள்வோம் என்ற நிலைதானே எப்போதும் உள்ளது. இதுவரை போனது போகட்டும் கத்துவதால் இழந்த வளர்ச்சி மீளப் போவதில்லை., நமக்கெல்லாம் ஒரே இரவில் கண்திறந்துவிடப் போவதுமில்லை. ஆனால் பத்திரிக்கைகள் சாமானிய மனிதர்களைப் போல பிதற்றுவது சரியல்ல., தவறு நடக்கும் போது., இப் பத்திரிக்கைகள் தாம் எழுதியதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். பத்திரிக்கைகள் ஆதரித்து எழுதும் நடிகர்கள் அரசியலுக்கு வந்து தவறிழைத்தால்., ஆதரித்து எழுதிய அத்தனை பத்திரிக்கைகளும் தவற்றிற்கு போறுப்பேற்க வேண்டும். உட்காந்தா 5 வருடம் ஒரு குறையுமில்லாமல் ஊழல் கொடிகட்டிப் பறக்குது., பதிரிக்கைகள் விற்பனையைக் கூட்ட நடிகர்., நடிகையர் படங்களைப் போடுங்கள்., பேட்டியைப் போட்டுக் கொள்ளுங்கள்., பிடித்தவர் படிப்பர்., வேண்டாதவர் வேறு வேலையப் பார்ப்பர். உங்கள் பத்திரிக்கை சார்பில் ஒரு நடிகரை அரசியலுக்கு வர ஊக்கப்படுத்தினீர்களேயானால் அவரும் தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு இறங்கி விடுகிறார். இறங்குபவர் தகுதியானவர் என்பதற்கு சான்றுகளையாவது முன்வையுங்கள். பொறுப்பு வேண்டும் பேரறிவாளர் நெஞ்சில் விழைந்த பத்திரிக்கை பெண்ணிற்கு என எழுதுமாறு இருப்பதே வருந்ததக்கதுதான்.

குங்குமம் கேள்விகள் - நம்ம பதில்கள்

இதுவும் ஒரு me-me ஆயிரும்போல இருந்தாலும்., என் பதில்களை இங்கேயும் வைத்துக் கொள்ள விழைவதால்.,

ராஜ்குமார், காரப்பாடி பலவிதமாக யோசித்து... ஒருவிதமா பேசுவது; ஒருவிதமாக யோசித்துப் பலவிதமாகப் பேசுவது... எது சார் பெஸ்ட் வழி?
இரண்டாவதுதான் சிறந்த வழி., பல விதமாப் பேசுனா அவங்க, அவங்க அவங்களுக்குத் தேவையானத எடுத்துப்பாங்க! - யாரவது ஒருத்தர் நம்ம யோசிச்ச மாதிரியும் எடுத்துக்களாம். நம்ம அரசியல்வாதிக பொழப்பே இப்பிடித்தான ஓடுது?., இந்துத்துவாங்கிற ஒரே யோசனதான்., அத இந்தியாவுல ஒரு மாதிரி பேசுறது (நாலு பேரு முட்டாள்தனமா அடிபட்டு செத்தா., நமக்குத்தான் பேரு;) பாகிஸ்தான்ல வேற மாதிரி பேசி; நான் இம்புட்டு முக்கியமானவன் காட்டுறது. அதுமாதிரி. (தற்போதய உதாரணத்தைதான் சொல்ல முடியும்).


க தியாகராசன், குடந்தை: நாவலர் 'உதிர்ந்த ரோமம்'; கலைஞர் 'சிறுபிள்ளை'; எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் 'காலிடப்பா'; சிதம்பரம் 'வக்கற்றவர்'; ஆனால் இப்படிச் சொல்பவர்?
மூப்பனார் - சொதப்பனார் - அத்வானி ஸெலக்டிவ் அம்னீஸ்யாவால் பாதிக்கப்பட்டவர்., ஸ்டாலின் - குட்டித்தலைவர், அன்புமணி- சின்ன அய்யா இதையெல்லாம் செல்லுபவர் உங்களுக்காக தினமும் 22 மணிநேரம் உழைத்து இவற்றைக் கண்டுபிடித்த, உங்கள் அன்பு சகோதரி.

அ கி வ அசோக்குமார் - கோகிலா, நரிப்பாளையம் : பீகாரில் கொசு இருக்கக் கூடாது என்று கவர்னர் பூட்டா சிங் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...?
அங்கு மக்களே கொசு மாதிரித்தானே., தனியா எதுக்கு இன்னொரு கொசு?.

எஸ் அபுதுல்லா அஹமது, நாகூர்: தேசபக்தர்கள் - தீவிரவாதிகள் : ஒப்பிடவும்.
தேசத்திற்காக தடியடி வாங்குபவர் தேசபக்தர்., தேசத்திற்காக தடியெடுப்பவர் தீவிரவாதி.

நன்றி., அல்வா மாதிரி கேள்விகளை தொகுத்தளித்த பாஸ்டன் பாலாஜி அவர்களுக்கு.

Friday, June 10, 2005

சங்கிலி ...புத்தகச் சங்கிலி..!

ஒரு நாள் அதிகாலை நேரம், எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற அக்கா வந்து, 'என் பையன் போனவாரம் புதுசா கம்பியூட்டர் வாங்கினான்., அது இப்ப என்னமோ வேலை செய்ய மாட்டேங்குது., கொஞ்சம் வந்து பார்கிறியா?. என்று கேட்டாங்க. நான் அப்ப, (நமக்கு எப்பவுமே எட்டு மணிக்கு மேலதான் விடியும்)., நடுச்சாமத்துல (கலை 6 மணி) இது என்னடா தொந்தரவுன்னு., தூக்கத்தோடயே, அவங்களோட போயி, அந்தப் பையனிடம் 'என்னப்பா பிரச்சனை'? என்று., கேட்டதுதான் தாமதம், அவன் ஆரம்பிச்சான் பாருங்க, Half adder, Full adder, Multiplexer, De-multiplexer, Decoder, Complier னு அவனுக்கு கம்பியூட்டர்ன்னு ஒண்ணப்பத்தி என்னல்லாம் தெரியுமோ., அத்தனையும் சொல்லிட்டான். அவங்க அம்மாவும் ஓரத்துல நின்னு பெருமையா மகனப் பார்த்திட்டு இருந்தாங்க., ஆனா எனக்குத்தான் அஞ்சுங்கெட்டு, அறிவுங்கெட்டுப் போயிருச்சு. அதெல்லாம் சரி., 'கம்பியூட்டர் ஸ்கிரீன(கணணித்திரை) ஆன் பண்ணனும் இப்பிடின்னு சொல்லிட்டு வந்தேன்.

ஏறக்குறைய அந்தப் பையனின் துடிப்பான மனநிலைதான் எனக்கும் துளசி அக்கா கூப்பிட்டப்ப. சின்ன வயசுல எல்லாரும்போல கோகுலம், அம்புலி மாமாதான். நான் 6வது படிக்கும் போது எங்கப்பா முதன்முதலில் 'பாரதிதாசனார் கவிதைகள்' வாங்கிக் கொடுத்தார். அப்பொழுதெல்லாம், திருக்குறள் மனப்பாடம் பண்ணுவது எங்களுக்குள்ள தவிர்கமுடியாத கடமை. பள்ளியில் நடக்கும் எல்லாப் போட்டியிலும் கலந்து கொள்வதால் படிக்க ஆரம்பித்தேன். யாராவது எழுதிக் கொடுத்து மேடையில் வாசிப்பதெல்லாம் எங்கப்பாகிட்ட நடக்காது. அப்படி ஆரம்பித்த வாசிப்பு பழக்கம்., திசை தெரியாத காட்டில் கண்ணொளியற்றவர் மாட்டிக்கொண்ட கதையாக இன்றும் மீள முடிவதில்லை. கதை, கவிதை, கட்டுரைகள், கடிதங்கள்., அரசியல், அறிவியல், ஆன்மீகம், சமூகம், பொருளாதாரம்,வரலாறு, வானியல் என எது கிடைத்தாலும் படிப்பதுண்டு.

எனக்குள் படிக்கும் பழக்கத்தை தூண்டிவிட்டவர்கள் ஏராளமான பேர். வருடம் தவறாமல் பொங்களுக்கு 'பால் பொங்கிற்றா?' என்று கேட்டு தஞ்சையிலிருந்து வரும் எனது 70 வயது தோழரின் கடிதங்களும், என் பள்ளித் தமிழாசிரியை வசந்தா அவர்களது பாராட்டும், எனது கல்லூரி தமிழ்ப் பேராசிரியைகள் 'தனபாக்கியம்', 'பாரதி கண்ணம்மா' (இவர் தன் கணவரால் பின் கொல்லப்பட்டார்). அவர்களது ஊக்குவிப்பும் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது.
படித்த புத்தகங்கள், வைத்திருக்கின்ற புத்தகங்கள் எண்ணிக்கை தெரியவில்லை. வாங்கிய புத்தகங்களைவிட., சேர்த்த புத்தகங்களே அதிகம்!!. ஒருமுறை போகிக்கு எரிக்க எங்க ஆயா ஒரு புத்தகம் தர, மக்கி நைந்திருந்த அப்புத்தகத்தின் பெயர் அரைகுறையாகத் தெரிந்தது., அது 'திருப்புகழ்'. ஆயா, எங்கேயிருந்து இத எடுத்த? என வினவியபோது., பரணிலிருந்து ஒரு 'டிரங்' பெட்டி இறக்கப் பட்டது. அதில் அத்தனையும் அரிய தமிழ் புத்தகங்கள். ஆனால் அனைத்தும் மிகவும் மக்கியிருந்தது. வெறும் வெட்டருவா, வேல்கம்புதான் நம்மாளுகளுக்கு என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, இத்தனை புத்தகங்கள் படித்த (படித்தார்களோ என்னமோ?) முகம் தெரியாத என் பாட்டனையோ, பாட்டியையோ நினைத்துச் சிலிர்ப்படங்க வெகுநேரமாயிற்று. இந்தக் கதையை நான் என் தோழியிடம் கூற., அட எங்க வீட்டிலேயும் அப்படித்தான் எனக்கூறி., அவள் காப்பாற்றி வைத்திருந்த 'மணிமேகலை' மற்றும் இரு புத்தகங்கள் தந்தாள். பள்ளியில் நடக்கும் போட்டிகளில் வென்று புத்தகங்கள் பரிசு பெறும்போது., 'ராஜாஜி' எழுதிய இராமாயணம் (ஆங்கிலத்தில்)., விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு(மூன்று முறை இதே புத்தகம் கிடைத்திருக்கிறது), போன்றவையே கிடைக்கும். அப்பொழுதெல்லாம் 'ஒரு ஜெயகாந்தன்., புதுமைப் பித்தன்னு தந்தா என்னா?னு நினைச்சுக்குவேன். பிறகு அவற்றை வாசித்துணர்ந்தபோது., அது வேறு பாதைக்கு என்னை இட்டுச் சென்றது. காந்தியின் 'சத்திய சோதனை'.,படித்த போது யாரும் பிறப்பிலேயே மகான் அல்ல என்பதும்., தன்னை உள்ளபடி நேர்மையாக ஒப்புக் கொடுப்பவனே., வழிகாட்டத் தகுதியானவன் என்பதும் தோன்றியது. காந்தி, விவேகானந்தர் எல்லாம் பள்ளியில் படிக்கும் வரைதான்., கல்லூரி வந்ததும்., கல்கி பழக்கமானார். மதிய இடைவேளைகளில் மத்திய நூலகத்திற்கு ஓடி 'பொன்னியின் செல்வன்'( 4 பக்கம் கூட நிம்மதியாப் படிக்க முடியாது., ஆய்வு நூலானதால் வீட்டிற்கு இல்லை)படித்து 4 மாதத்தில் முடித்தேன். மணியத்தின் ஓவியங்கள் தனிக்கதை சொல்லும். அநேகமாக கல்கியின் அனைத்துப் படைப்புகளையும் வாசித்திருக்கிறேன்., நேரமிருந்தால் இன்றும் மீள்வாசிப்பதுமுண்டு(http://www.chennainetwork.com/a/ebooks/ebooks.html). படித்ததில் பிடித்தது பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், மோகினித்தீவு, பார்த்திபன் கனவு, சிறுகதைகள் சில ஒற்றை ரோஜா உட்பட, கட்டுரைகள் பல. மூ. வரதராசனார் (எல்லாக் கட்சிகளுக்கும் பிடித்த எழுத்தாளர்) கடிதங்கள்.,கட்டுரைகள்., ஆராய்ச்சி நூல்கள்., (கற்பில் சிறந்தவள் மாதவியே என தீர்ப்பு கூறியவரல்லவா?.). ஆங்கிலத்தில் ஆர்.கே.நாராயண் கட்டுரைகள் கவர்ந்தது. அவரது 'மால்குடி டேஸ்' மறக்கமுடியாதது. அருந்ததிராய் அவர்களும் பிடித்த இந்திய ஆங்கில எழுத்தாளர். பிறகு தி.ஜானகிராமன்(அம்மா வந்தாள் 'பசி தெய்வம்., அதுக்கு நைவேத்தியம் பண்ணனும்(?!)'., மோகமுள்). புதுமைப் பித்தன் (படித்த அனைத்தும் பிடித்தது), ஜெயகாந்தன் (சில நேரங்களில் சில மனிதர்கள்., நந்தவனத்தில் ஒரு ஆண்டி) பிரபஞ்சன், பாலகுமாரன் (இரும்புக்குதிரைகள், தாயுமானவன்), அரு.இராமநாதன்( அரசியல் பற்றித்தெரிய வேண்டுமா?., இவரது வீரபாண்டியன் மனைவி படியுங்கள்)., சுஜாதா., எஸ்.ரா (துணையெழுத்து). இத்துடன் அவ்வப்போது, ரஜேஸ்குமார், சுபா கூட.
அரசியல் கட்டுரைகள், வரலாற்றுப் புதினங்களுக்கு கலைஞர் (ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், நெஞ்சுக்குநீதி, குறளோவியம் (முப்பாலில் மூன்றாம் பாலே அதிகம்). சாண்டியல்யன் (கடற்புறா).
நம்ம அம்மாக்களில் இராஜம் கிருஷ்ணன் (கரிப்பு மணிகள்)., அம்பை (வீட்டின் சமயலறையின் ஒரு மூலையில்). கோதைநாயகி இவர்களுடன் லக்ஷ்மி, இந்துமதி(காதல் ஓரிடம்., கல்லூரிப் பருவத்தில் படிக்கவேண்டும்), சிவசங்கரி (நிறைய), கேமா ஆனந்தீர்த்தன் (மனைவியின் காதலன்)., அனுராதா ரமணன், ரமணிச்சந்திரன் (கல்லூரிப் பருவம்., காதலில் விழுந்தோர்க்கு இவர் கதைகள் பிடிக்கும். ஆனா., நம்ம மூளையை கழட்டி ஒரு ஓரமா வச்சிரணும்).
தமிழ் எழுத்துலகில் ஜெயகாந்தன் யுகமுண்டு, புதுமைப் பித்தன் யுகமுண்டு., ஏன் ஒரு அம்பை யுகமோ., கோதைநாயகி, இராஜம் கிருஷ்ணன் யுகமோ இல்லை?., கரிப்பு மணிகள் எழுத இராஜம் அனுபவித்த துயரங்களை எந்த ஆண் எழுத்தாளராவது அனுபவித்ததுண்டா?.
ஆங்கிலத்தில் கல்லூரி காலத்தில் M&M., அத விடுங்க., அந்தக் காலத்து ஆளுகள்ல., Edward Gibbon (Decline and fall of the Roman Empire)., charles Dickens (Tale of two cities., Great Expectations)., Connan Dogle (sherlock holmes)., இப்பிடிச் சிலபேரு., அதுக்கும்முன்னாடி., நம்ம shakespeare. ஆனா இப்ப என்ன சுத்திக் கிடக்கறது, Animal Parade, Blue's perfect present, A Rainey day to remember, The Magic school bus, Magenta's super sleepover, It's not easy being big, Thomas and the school trip அப்பிடி, இப்பிடின்னு 75 தேறும். எங்க வீட்டு மகராசியோடது., நூலகத்தில அவ நினைகிற புத்தகம் இல்லைனா... நான் அம்புட்டுதான். அவுக 'தீம்' சொல்லுவாக., நான் அத 'டெவலப்' செய்யணும் (அதாவது அவ கத, நான் திரைக்கத!). நூலகத்தில் இல்லாத புத்தகத்தை வேண்டி மின்னஞ்சள் அனுப்பியிருந்தா., எனக்கு நாள் முச்சூடும் 'மெயிலு' பாக்கறதுதான் வேலை.
கவிஞர்களில் கண்ணதாசன், மூ.மேத்தா, வைரமுத்து (கவிதை எழுதும்போது வைர...முத்து... பாட்டெழுதும்போது?).,அப்துல் ரக்மான், இன்குலாப் படிப்பேன். பெண்கவிஞர்களில் பொன்மணி( என் பெயரை கவிதைகளில் அதிகமா உபயோகிப்பார்), கனிமொழி அப்புறம் நிறைய பேரு ஆனா சொல்லக் கூச்சமா இருக்கு!!.
நான் விழுந்து, விழுந்து படிக்கறதப் பாத்த எங்க தோட்டத்துல வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு அம்மா., "ஏன் சாமி இப்பிடி பொஸ்த்தகத்த படிக்கிறியே., அது என்ன கண்ணோடவா வரப்போவுது?" நு கேட்டாங்க., அட!., அது மனசோட வரும்னு பாவம் இந்தம்மாவுக்கு எங்க தெரியப் போகுதுன்னு நினைச்சுகிட்டேன். ஆனா படித்தவை அனைத்தும் மனதோடு வந்திருந்தால்., நாம ஒவ்வொருவரும் ஒரு சமுதாய ஏற்றத்தின் வித்துக்களல்லவா?.. தவிர., திருமணத்திற்கு முன்பே கருத்தரித்து, காரணமானவன் வீட்டிற்கு எதிர் வீட்டிலே, எவரையும் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் (அந்த ஆண் இவரை, நிராகரித்துவிட்டு. இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார்), சொந்தங்கள் புறக்கணிக்கத் துணிவுடன் கூலி வேலை செய்து, தன் பெண்மகவைத் தனியாய் வளர்த்து, திருமணம் செய்வித்த ஒரு பெண் எனக்குக் கற்றுக் கொடுத்த துணிவை., எந்தப் புத்தகமும் தரவில்லை., தன் வீட்டிலேயே ஊர்ப் பட்ட குழந்தைகள் வளர்த்து மாய்ந்து போனாலும்., ஆதரவில்லாத மற்ற குழந்தைகளையும் தூக்கி வளர்த்து மகிழ்ந்த எங்க ஆயாவின் அன்பை நான் எந்த எழுத்திலும் படிக்கவில்லை. கிராமப் புறங்களில் பேசுவோர் சர்வ சாதாரணமாக தூக்கிப் போடும் வார்த்தைகளில் உள்ள ஆழத்தை எந்த ஒரு இலக்கியத்திலும் கண்டதில்லை. 'வெள்ளைக்காரிகளுக்கு வெக்கமுமில்ல., துக்கமுமில்ல'. இந்த வரியை யோசித்துப் பாருங்கள். நமது அனைத்து துனபங்களுக்கும் காரணம் எப்படிப் புரியுது?
அப்புறம் முக்கியமான விதயம் (உபயம் முத்து), நான் இரவல் வாங்குகின்ற புத்தகங்களை ஒரு நாளும் திரும்பக் கொடுத்ததில்லை!!. உயிர் போகின்ற அவசரமா இருந்தாலும் யாருக்கும் 'புத்தகத்தையும்' 'பேனா'வையும் மட்டும் கடன் கொடுத்ததில்லை!!!.
ஜோதில இதுவரை இல்லாத அனைவரையும் அழைக்கிறேன்.

Thursday, June 09, 2005

கலைஞர் கருணாநிதி - என் அறிவில்

ஜூன் 3 ஆம் நாள், கலைஞரின் பிறந்த நாள் அன்று அவரது வாழ்க்கை வரலாற்றை பதிவிட எண்ணியிருந்தேன். எதிர்பாராத சில நிகழ்வுகளால், அதை செய்ய முடியவில்லை. எனவே இந்தப் பதிவு.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலம் கட்சித்தலைவர், எதிர்கட்சித்தலைவர் மற்றும் முதல்வர் என அரசியலிலும் தவிர இலக்கியவாதியாக, பத்திரிக்கையாளராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக என பன்முகம் கொண்டவர் கலைஞர். தமிழ் ஆர்வமுள்ள எவரும் அண்ணாவிற்கு அடுத்தபடியாக, கலைஞரின் பேச்சுக்களை ரசிக்காமல் இருந்திருக்கமுடியாது. அரசியலுக்கு கலைஞர் வராமலிருந்திருந்தால், ஒரு நல்ல திரைக்கதாசிரியர், பாடலாசியர் குறிப்பாக, நல்ல எழுத்தாளர் நமக்கு கிடைத்திருப்பார். மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் என்றும் அவர் பெயர் சொல்லும் திரையுலகில். அவர் எழுதிய பாடல்களில், கா,கா,கா (பராசக்தி), காகித ஓடம் கடலலைமீது (மறக்க முடியுமா), இதயவீணை தூங்கும்போது (இருவர் உள்ளம்), வாழ்க்கையெனும் ஓடம் (பூம்புகார்) போன்றவை கேட்கத் திகட்டாதவை. அவர் வசனமோ, பாடல்களோ வந்த காலகட்டத்தில் உள்ள பிற படங்களை கவனித்தோமானால், மிகவும் வேறுபட்டிருப்பதைக் காணலாம். "கல்லைத்தான், மண்ணைத்தான் காய்ச்சித்தான், குடிக்கத்தான் கற்பித்தானா" எனத் திருமூலரையும், "ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர்" என்ற பாராதிதாசனையும் ஓரே காட்சியில் சிந்தித்திருப்பார். "கிருஸ்ணா, முகுந்தா..." எனப்பாடி பழக்கப் பட்ட அந்தக் கால தமிழ் திரையில், "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என எழுத எவ்வளவு உரம் வேண்டும்?. ஒரு இரவு நேரத்தில் " இதய வீணை" பாட்டை கேட்டுப்பாருங்கள், தவறு செய்யும் ஆண்கள் திருந்திவிடுவீர்கள். அவர் எழுதிய நூல்களில் என்னைக் கவர்ந்தது "பொன்னர் சங்கர்". பொன்னர், சங்கர் தெய்வமாக வணங்கப் படுபவர்கள் அவர்களைப் பற்றி எந்த சமரசமும் இன்றி அவர் எழுதியிருக்கிறார். வேறு எந்த திராவிடத் தலைவரும் துணிந்து தெய்வமாக வணங்கப் படுபவர்களைப் பற்றி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே.
"தண்டவாளத்திலே தலை வைத்துப் படு என்றாலும், ஆட்சி பொறுப்பை ஏற்றிடு என்றாலும் இரண்டையும் ஒன்றெனக் கருதுபவன் என் தம்பி" என அண்ணா புலாங்கிதப் பட்ட அன்புத்தம்பி. "முகத்தை காட்டு தம்பி போதும்" என்று அண்ணா எம்.ஜி.யார் அவர்களைப் பார்த்தும் சொன்னார். கூட்டம் சேர்க்க எம்.ஜி.யார், சேர்த்த கூட்டத்தை பேச்சால் கட்டிப் போட கலைஞர் (அவரே தலைசிறந்த பேச்சாளர் எனினும்) என இருவர் இருந்தனர் அண்ணாவிற்கு, ஆனால் எம்.ஜி.யார் பிரிந்தபின் இரண்டுமாக தி.மு.கா விற்கு இருக்கிறார் கருணாநிதி. (வைகோ, வெற்றிகொண்டான் என தி.மு.காவில் பேச்சாளர்களுக்கு பஞ்சமில்லை என்றாலும், நட்சத்திரப் பேச்சாளர் கலைஞர்தானே?, வைகோ சிறந்த பேச்சாளர்., இளம் உள்ளங்களை எழுச்சிபெற வைக்கக்கூடிய பேச்சாளர்., இழந்தது தி.மு.காவின் போதாக் காலம்!.).
மேடையில் பேசும்போது "என் உயிரினும் மேலான அன்பு......" எனக் கூறி கைதட்டலுக்காக ஒரு கோணல் புன்சிரிப்புடன் பேச்சில் இடைவெளி தந்து "உடன்பிறப்பே!" எனக்கூறி முடிக்கும் காட்சி, அவர் மேடைப் பேச்சுக்களை நினைக்குந்தோறும் என் மனக்கண்முன் எழும். ஒரு முறை தி.மு.க மாநாடு திருச்சியில் நடந்தபோது, அவரது பேச்சைக் கேட்க கணக்கிலடங்கா கூட்டம்., அக் கூட்டத்திற்கு மன்னை நாராயணசாமியின் மகன்களும் வந்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்புதான் நாராயணசாமி இறந்திருந்தார். கலைஞர் பேச்சிடையே கூறினார் "இக்கூட்டத்திற்கு மன்னையாரின் மக்கள் வந்திருக்கிறார்கள், பார்த்தேன், அவர்களைக் கூர்ந்து நோக்கவில்லை கண்கள் குளமாகிவிடும் என்ற காரணத்தினால்". அப்போது அவரது குரலில் இருந்த நெகிழ்வு., தாய் தன் குழந்தையிடம் காட்டுவது. தா.கிருட்டினன் இறந்தபோது அவர் காட்டிய அமைதி.,தந்தை தன் மகனிடம் காட்டிய பரிவு., குற்றமுடைத்து!!!. திருச்சி மாநாட்டில்தான் ஸ்டாலின் அவர்களின் 'கன்னிப் பேச்சு'ம் (முதன்முதல் மேடைப் பேச்சு சாமிகளா!) இடம் பெற்றது. "கட்டிய நாய்களல்ல நாம் எட்டியமட்டும் பாய்வதற்கு" என்று துவங்கி நன்றாகவே பேசினார். கலைஞரின் பேச்சுகளிலே மிகச் சிறந்தது பூம்புகார் வடிவமைக்கப் பட்டு, திறக்கப்பட்டபோது அமைந்த கடற்கரை பேச்சுதான் என என் அப்பா கூறக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை காரைக்குடியில் நடந்த கம்பன் விழாவில் கலந்து கொண்டபோது, அவரது இருக்கை, அவர் அப்போதைய முதல்வர் என்பதால் குடையுடன் வடிவமைகப்பட்டது. கலைஞர் அமர்ந்தவுடன் அக்குடை ஆடியது, அதை ஆ.சா.ஞனசம்பந்தம் அய்யா (கம்பன் கழக நிறுவனர்)., சுட்டிக்காட்ட, அடுத்துப் பேச ஆரம்பித்த கலைஞர், அப்போது மதுரை முத்து போன்றவர்களால் தி..மு.க ஆட்சி ஆட்டம் கண்டிருந்த நேரம். "குடை ஆடுகிறதென்பது எனக்கும் தெரிகின்றது., கவனமாக இருப்பேன்!", என சிலேடையாகக் கூறி கைதட்டல் அள்ளினார், என கம்பன் கழகத்திற்கு வருடா வருடம் தவறாது செல்லும் என் 70 வயது தோழர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இராம காதையை மறுக்கும் திராவிடம், இலக்கிய சுவையுணர கம்பன் கழக விழாவில் கலந்து கொண்டது. கூட்டணிக் கட்சிகளுக்கும், தனது கட்சியினருக்கு தேர்தலில் வாய்பளிக்கும்போதும்., (வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது) "இவர்களுக்கெல்லாம் தொகுதியில் இடம், ஏனையோர்க்கெல்லாம் என் இதயத்தில் இடம்" என்பது அவரது பிரபலமான வசனம். தமிழ்நாட்டில் தமிழுணர்வு தூண்டியதில் திராவிடக் கட்சிகளுக்கு பெரும்பங்கென்றால்... அதை நிலைநிறுத்தியதில் தனிப் பங்கு கலைஞருக்குண்டு. தனித்தமிழ் வாரியம், தமிழுக்கு தமிழ்குடிமகன் அனைத்தும் தந்தவர் அவர். பூம்புகார், வள்ளுவர் கோட்டம் அவர் தமிழுக்கு தந்த சீர்கள். எவ்வளவோ பேர் முன் முயன்றும் (1952 லிருந்து என நினைக்கிறேன்), கலைஞரால் தான் தமிழ் செம்மொழியானது.
தி.மு.க தோன்றும் போதே அண்ணாவுடன் இருந்தவர் கலைஞர்., இருந்தாலும் நாவலர் நெடுஞ்செழுயன், பேராசிரியர் அன்பழகன், சொல்லின் செல்வர் சம்பத் என கட்சியில் மூத்தோர் இருந்தபோதும்., எம்.ஜி.யார் உள்ளிட்ட பலரது ஆதரவோடு, கட்சியிலுள்ள பெரும்பான்மையோரால் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவரானார். தலைமைப் பதவிக்குத்தக்கவாரு இன்றும் ஆளுமையோடு திகழ்வது அவர் சிறப்பு. யார் வந்தாலும். விட்டுப் போனாலும் தமிழ்நாட்டில் தனித்த பெரும் கட்சி தி.மு.க தான். கழகத்தூண் பெரியசாமியைச் சரிகட்டி தூத்துக்குடியை ராதிகா செல்விக்குத் தந்த போது தெரிந்த அவரது அரசியல் முதிர்ச்சி, மாறன் மேல் உள்ள பாசத்தால் தாயாநிதியை கொண்டுவந்த போது தெரியவில்லை, குறையுடைத்து!!!. அறுபதுகளில் தமிழ்நாட்டில் பரவி வந்த எழுச்சி, இந்தியாவின் எந்த மாநிலமும் கண்டிராத எழுச்சி. இன்று திராவிடக் கருத்துக்கள் மங்கி வரும் வேளை, வருங்கால இளைஞர்களுக்கு திராவிடக் கருத்துக்களை கொண்டு செல்ல கலைஞரைப் போன்ற ஒருவரால்தான் இயலும்.
எல்லாத் தலைவர்களும் செய்கின்ற தவறு, தனக்குப் பின் ஒருவரை கைகாட்டாததே பெரியார், அண்ணா, எம்.ஜி.யார் அனைவரும் செய்த தவறிது. கலைஞர் அந்தத் தவறை செய்யாமல் புது வழி காட்டுவார் என்றே தோன்றுகிறது. தகுதியானவரைக் காட்டுவதிலேதான் கட்சியின் வளர்ச்சியையும், வீழ்ச்சியும் உள்ளதென்பது அரசியல் நுண்ணறிவு மிக்க அவருக்கு தெரியாத ஒன்றல்ல!.
"வாலிபம் என்பது கலைகின்ற வேடம்" என்பதை நன்கு உணர்ந்ததாலோ என்னமோ., இளம் பருவத்திலேயே தன்னை ஒரு இயக்கத்தில் இணைத்துக் கொண்டு, இன்றும் சுறுசுறுப்புடன் அயராது ஓடிக்கொண்டிருக்கிறார். இதில் சந்தேகமில்லாமல் அவர் ஒரு உதாரணம்தான்., அவரை மறுப்பவர்களுக்கும்!.

Thursday, June 02, 2005

அன்பில் அம்மா...!

இன்று காலை தொலைபேசி வழியே கேட்கிறேன்., நீங்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை., துடித்துப் பதறிய இதயத்தை இறுக்கிப் பிடித்து தெலை பேசினேன்., நீங்கள் அனுமதிக்கப் பட்டிருந்த மருத்துவ மனைக்கு., மருத்துவ மனையெங்கும் உறவினர் கூட்டம்., எப்போதும் சிரிப்புடன் எவரையும் வறவேற்கும் உங்கள் முகம் பார்த்து துடித்தபடி. துடித்தாலும் உங்கள் பக்கத்திலிருக்கும் பாக்கியசாலிகள். நண்பனின் அம்மா., என்பது மட்டுமே நமது உறவா?. முன்பே உங்களுக்கிருந்த உபாதைகள் தெரிந்திருந்தால்., ஓடி வந்து பார்த்திருப்பேனே?., எத்தனை சமாதானம் சொன்னாலும்., என் இதயமே எனக்கு விரோதியாகிறது. போன மாதம் பேசியபோது கூட., நன்றாக இருக்கிறேன் என்றுதானே ஏமாற்றிவிட்டீர்கள்?.

உங்களை முதலில் பார்த்த அந்த நாள்., இன்னும் பசுமை குறையாமலேயே என்னுள் இருக்கிறதே. பிறந்தது முதல் பார்த்துப் பழகிய உறவுகளை விட உயிரில் உரைந்துவிட்ட உயிரல்லவா நீங்கள்?. எங்கள் ஆயா இளம்வயதில் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என நான் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் எண்ணிக்கொள்வேன். எனக்கு நண்பன் என்ற தோள் கொடுத்த தெய்வம். சிறிய வயதில் உள்ள புகைப்படத்தில்., மருளும் விழிகளுடன் நீங்கள் அப்படியே கலைவாணி போலவே இருப்பீர்கள். இப்போது என் அழுகையை அதிகரித்தபடி என்கையில் உள்ள இத்தப் படமும் அதே அழகுடன். வெளிநாட்டு வாழ்க்கை இன்னும் எத்தனை பேரை வெறும் புகைப்படங்களாக்கி என் கைகளில் தரப்போகிறதோ?. நான் அன்பிலில் நமது வீட்டில் தங்கிய நாட்கள் திரைப்படமாய் நினைவில் விரிகிறது. "பொண்ணு பரவாயில்லம்மா... நீ ஒரு வார்த்தை தம்பிகிட்ட சொன்னீன்னா சரின்னு சொல்லிரும்". உங்கள் வார்த்தைகள் காதில் ஒலிக்கிறது. பெற்ற மகனை அவன், இவன் என நீங்கள் அழைத்து நான் பார்த்ததில்லை. "மருமக எப்படிம்மா?" "ம்.. அதுக்கென்னம்மா? சின்னப் பொன்ணுனாலும் எல்லாத்தையும் பாத்துக்குது". யாரடா இப்படி கேட்பார்கள் எனக் காத்திருந்து கதையளக்கும் உலகத்தில் தனிப்பிறவி!. புள்ளையப் பாத்துக்க! என்றது நீங்கள் கடந்த முறை என்னிடம் பேசியவார்த்தை. அதுவே கடைசி வார்த்தையாகிவிடுமா?., எல்லையில்லாப் பரம்பொருள் என்கிறார்களே., அதிசயம் நடக்கும் என்பது போல் நீங்கள் 'கோமா' விலிருந்து மீண்டு விடுவீர்களா?. 56 வயது ஒன்றும் அதிகமில்லை ஆண்டவனே.

நான் துவண்ட போதெல்லாம் தூக்கிவிட்ட நண்பனே!., இன்று என்னால் உன் அருகிருக்க முடியவில்லை. என்னை மன்னிப்பாயா?.

கொள்கையில்லாத கட்சி

செப்டம்பர் 14ந்தேதி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ள விஜயகாந்த், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் என்னைக் கவர்ந்த பகுதிகளை உங்கள் பார்வைக்கும் இங்கே.

14ந் தேதியும் கட்சிப் பேர் அறிவிக்கப்பட போவதில்லை. கொள்கை என்ன எனக் கேட்டால். கொள்கைகளில் நம்பிக்கை இல்லையாம். (அப்டிப் போடு!!!). கொள்கை, கிள்கைன்னு ஏதாச்சும் சொன்னாவாவது செய்யிலைன்னா நாலு கேள்வி கேட்கலாம். கோடி பேர் திரட்டுவது (மாநாட்டிற்கு ) நோக்கமாம். மாநாட்டு நிதி? மன்றத்தினர் அவர்களால் முடிந்ததை(!) செய்கிறார்களாம். மீதி அவரது சொந்தப் பணமாம். டோண்டு (ராகவன்) அய்யா., என்னுடைய பதிவிற்கு பின்னுட்டம் இடும் போது, விஜயகாந்த் அவரது பணத்தைப் போட்டு அரசியலுக்கு வருகிறார் என்றார். என்னாது இது படிச்சவங்களே இப்பிடி அப்பாவியா இருக்காங்களேன்னு நினைச்சுக்கிட்டேன். இப்ப, இந்த விஜயகாந்த் போட்டிய எத்தன தலைகள் உண்மைன்னு நம்பப் போகுதோ?.

இதெல்லாம்விட பெரிய நகைச்சுவை., கட்சி பேர் இல்ல., கொள்கையில்ல ஆனா தேர்தல் எப்ப வந்தாலும் சந்திக்க தயாரா இருக்காங்களலாம். யோவ்... என்னாது இது? ஆள்ளாலுக்கு அடிச்சுப் பாருங்கையா ... விழுந்தாலும் விழுகும் தமிழனின் தலையெழுத்து!!.

மாமிசமா? சைவமா?

நான் விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு செல்லும் போது, வா! சாமி., நல்லாருக்கியா? இப்படி பல கேள்விகளோடு எங்க சனமெல்லாம் என்னைப் பார்த்த பரவசத்தில் ஓடிவரும் வேளையில், இந்த ஆடு, கோழி இதெல்லாம் இருக்கு பாருங்க... அதெல்லாம் நான் ஊருக்குள்ள கால வச்ச உடனே தெரிச்சு ஓடி, ஆடு அது பட்டியிலும், கோழி பஞ்சாரத்திலும் தானாப் போயி அடைஞ்சுக்கும். ஏன் தெரியுமா? நான் அம்புட்டு மாமிசப் பட்சினி. நானும் இதெல்லாம் பாவம்... ஏன் சாப்பிடனும்?. உயிர்க் கொலை புரியலாமா? இதுல உள்ள சத்து காய்கனில இல்லையா? அப்பிடி, இப்பிடின்னு ஆயிரம் கேள்வி கேட்டுக்குவேன். அதெல்லாம் கறிக்குழம்பு வாசம் என் மூக்கை துழைக்காதவரைதான். அதான் வச்சுட்டாங்கல்ல, நாம சாப்பிடுலைன்னா யாரும் சரியா சாப்பிடமாட்டங்கல்ல? அப்பிடின்னு மனச சமாதானப்படுத்திட்டு(!) ஒரு வெட்டு வெட்டிருவேன். இப்படி மாடு, பன்னி, பாம்பு, பல்லி, எலி, நாய் என்று சிலதைதவிர குறிப்பா பறவைகளில் காகம் தவிர அனைத்தையும் சாப்பிட்டு இருக்கிறேன் எனச் சொல்லலாம்.

வெள்ளையர் காலத்திலே துப்பாக்கி வைத்துக் கொள்ள என் பாட்டனார் அனுமதி பெற்றுருந்தார். வழிவழியாக இன்றும் அது தொடர்கிறது. எங்கள் ஊரைச் சுற்றி மலைகள் என்பதால்., எங்க அண்ணனுக்கெல்லாம் பொழுது போக்கு வேட்டையாடுதல். முயல்கள், கொக்கு, காடை (பறவைகளிலே மிக சுவையானது பச்சை காடைதான்), புறா என்று ஏதாவது வரும். பத்தாவது நான் தேறிவிட்டதற்கு (நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை பாருங்க! நீ புத்தகத்த தொட்டே நாங்கெல்லாம் பாத்ததில்ல.... தேறிருவியா?.,) எனக்கு அண்ணன் தந்த பரிசு 3 புறாக்கள். தலையில் கைவிளக்கு (டார்ச் லைட் ) கட்டிக்கொண்டு நண்பர்களுடன் ஏதோ போருக்கு போவது போலப்போய்... ஒன்றும் இல்லாமல் திரும்பி வரும் காலமும் உண்டு.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் கருப்ப கோவில் என்ற ஒன்றுண்டு., அதில் ஆண்கள் மட்டுமே பூஜையிலிருந்து, பொங்கள் வரை செய்ய வேண்டும். அப்போது ஆடு, கோழி என எல்லாவற்றையும் கலந்து மிகச் சுவையாக சமைப்பார்களாம். பெண்களுக்குத் தாடா என்பதால் சுவைத்ததில்லை. திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட ஒரு ஊரில் கனி உண்ணும் 'வவ்வால்கள்' வேட்டையாடுவது மிகவும் பிரசித்தமானது. டாட்டா சுமோக்களும், சபாரிகளும் தவம்கிடக்கும் 'வவ்வாள்'களுக்காக. ஏனெனில் அது மிகவும் சுவையாக இருக்குமாம். எங்க பெரியம்மா கோழி, புறா சமைச்சா தேவாமிருதம்னு இதத்தான் சொல்லியிருப்பாங்க போலன்னு நினைச்சிக்குவேன். பொன்னியின் செல்வனில் ஏறத்தாழ, 2000 வருடங்களுக்கு முன் தமிழர்கள் பெரும்பாலும் மாமிசம் உண்ணுபவர்களாகவே இருந்திருக்கின்றனர் என வாசித்திருக்கிறேன்.

அமெரிக்கா வருவதற்குமுன் சிறிது காலம் சிங்கப்பூரில் வசித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் சமைக்கத் தெரியாதென்பதால், தேக்காவில் இருக்கும் சுதாஸ், சிதாரா அப்புறம் 'சோச்சுகாங்' முருகன் கோவில் அருகில் உள்ள 'வாழையிலை' போன்றவைதான் அன்னையாக இருந்து அமுதூட்டின (மாமிச அமுதுதான்). சிராங்கூனுக்குச் சற்று தள்ளியுள்ள ஒரு ஆந்திரா உணவகம்., அங்கும் நன்றாக இருக்கும். சிங்கப்பூர் போன புதுதில், அங்கிருந்து நம்ம வீட்டுக்குத் தொலைபேசும்போது (ஞாயிற்றுக்கிழைமைகளில்) என்ன சாப்பாடு? எனக் கேட்டால்., நீயில்லயா? அதச் செஞ்சாலே சாப்பிட மனசு வரமாட்டேங்குது... அப்புறம் கொஞ்ச நாள் கழித்து இன்னைக்குத்தான் மீன் வாங்கி ஏதோ செஞ்சேன்.... அப்புறம் கொஞ்ச நாள் கழித்து இங்க மட்டன் கொழம்பு, மட்டன் வருவல்... அங்க எல்லாம் கிடைக்குதுதான, வாங்கி நல்லா செஞ்சு சாப்புடுசாமி...! எங்க செய்யிறது? நமக்கு வந்து வாய்ச்சது சுத்த சைவம்!!. ஆனால் பறவை, மிருகங்கள் மேல் எனக்கிருக்கும் பாசத்தைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லமுடியாத நிலை. இங்கு 'இண்டியா பேலஸ்'., 'டச் ஆஃப் ஏசியா' போன்ற உணவகங்கள் பரவாயில்லை. இப்போது நானிருக்கும் ஊரில் 'செட்டி நாடு' உணவகமே இருக்கிறது. 'மெக்டொனால்ஸ்' 'பர்கர்கிங்' தாண்டி செல்லும்போது., அடச்சே... இத என்னத்த சாப்புடறது? உப்புச்சப்பில்லாம? அப்பிடின்னு நினச்சாலும், இது என்ன உன் போக்குக்கே விரோதமால்ல இருக்கு? மிளகையும், உப்பையும் கலந்து அடிக்கவேண்டியதுதான? அப்பிடின்னு நம்ம மனசு 'பளிச்' 'பளிச்' ன்னு கேள்வி கேக்கும். மனசாட்சியத் தாண்டி நடக்க முடியுமா?.

மேனகா காந்தி ஏதும் இக் கட்டுரையைப் படிச்சுட்டு , உள்ள தள்ளிரப் போறாங்க!. எனக்கு எப்போதுமே ஒரு குழப்பம்!!. மாமிசம் உண்பது தவறா?., நான் கேக்கறது எனக்கே சிரிப்பா இருந்தாலும்., நாலு பேரு எதாவது சொன்னிங்கன்னா விட்டுடமுடியுமான்னு பார்க்கிறேன். (தலைப்பு கொஞ்சம் விவகாரமா இருக்கட்டுமேன்னுதான்...)