Thursday, May 26, 2005

நடிகன் நாடாளலாமா?

இந்தக் கேள்விய வெற்றி கொண்டான் அய்யாகிட்ட கேட்டா, அருமையா தூய தமிழ்ல பதில் கிடைக்கும். யாருக்கு? நம்ம சினிமா அண்ணன்களுக்குத்தான். ஆனா அய்யா கட்சி சார்புடையவர் என்பதால்...நான் பேசறேன். அண்ணா! நம்ம சிகரெட்ட தூக்கிப்போட்டா, தமிழ்நாட்டுல இலட்சம் பேர் தூக்கி போடறான்., நம்ம 'பபிள்கம்' மென்னமுன்னா இங்க கோடி பேர் சேர்ந்து மெல்லுறான். உண்மைதாண்ணே!. ஆனா அவங்களுக்கு முன்மாதிரியா ஏதாவது செஞ்சு காட்டிருக்கிங்களாண்ணே?.,. அதாவது 'பொண்ணுங்கிறவ தலை குனிஞ்சுதான் நடக்கனும், ஆம்பளை தலை நிமிர்ந்து நடக்கனும்" என்று ஆயிரம் பண்ணிருக்கிங்க., நான் அதச் சொல்லல. நண்டு, சிண்டுடெல்லாம் நம்மளப் பார்த்து சலம்புதுக இது உங்க சாதனைதாண்ணே, ஆனால் விஜயகாந்த் பாவம்... உண்மையாவே இறங்கிட்டாரு பார்திங்களா?! தமிழ்நாடு அம்புட்டு இளக்காரமா போயிருச்சு., சினிமாவுல ஆடி, பாட முடியல்லனா தயார இருக்கு தமிழ் நாட்டு முதல்வர் பதவி?!. ஏன் ஆடி, ஓடி நாட்டுக்கு நல்லது பண்ற வயசுல இறங்க வேண்டியதுதான?. கூட்டம் சேருது, பத்திரிக்கை எழுதுதுன்னெல்லாம் அரசியலுக்கு வரமுடியுமா?. கழைக்கூத்தாடுபவர்கள் வித்தை காட்ட எங்கூருக்கு வந்தா, சுத்துப் பட்டுல இருக்கிற 18 பட்டியும் கூடிரும்!. கை தட்டப் பாத்திங்கன்னா... காது செவிடாயிரும்!. பத்திரிக்கைகாரங்க ... நம்மூரு முன்னேறாமப் பாத்துக்கறதுல அரசியல்வாதிகளுக்கு அடுத்த இடத்துல இவங்கதான்!. எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த போது டி.விப் பெட்டியில் ஜெயலலிதாவப் பார்த்தவங்கதான்...1987 ல ஆரம்பிச்சு 1991 முடிய அம்மா படத்தப்போட்டு காசு பார்த்து, அவங்கள உக்காரவச்சுட்டுத்தான மூச்சுவிட்டாங்க?. அப்புறம் அம்மாவத் தாக்கி எழுதுனாங்க... ஆனா உங்கள? ஒரே ஒரு 'தோல்வி'., ஒதுக்கிப்புட்டாங்கல்ல?. இப்ப நீங்க ஆன்மீக பயணம் போறதெல்லாம் (உங்க பையை நீங்களே தூக்குறிங்களாம்!!.. எதைப் புகழ்றதுன்னு...?!) போடறாங்க, சந்திரமுகி தந்த மீட்புன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? உங்கள எப்படி நினைச்சுட்டு இருக்காங்க பாருங்க?.

எம்.ஜி.யாரப் பார்த்து எல்லாரும் அரசியலுக்கு வந்திங்கன்னா, அவரோட உழைப்பை பாத்தீங்களா?. 1936 ல நடிக்க வந்தார். (முன்பும் நாடகங்களில் நடித்தார்). 1953 ல .தி.மு.க உறுப்பினராகி (அதுக்கும் முன்பே அவர் படங்களில் திராவிடம் பரப்பினார்). 1962ல் சீனப் போருக்கு முதன்முதலில் ரூபாய் 75,000/- வழங்கினார். எந்த இயற்கைச் சீற்றங்கள் வந்தாலும், அள்ளித்தார நீளும் கைகளில் முதல் கை அவருடையது. அவருடைய ஆட்சி பற்றி, மிகக் கடுமையான மாற்றுக் கருத்து எனக்குண்டு, ஆனல் அவரது வள்ளல்தன்மை பற்றி அவரது எதிரிக்கும் மாற்றுக் கருத்திருக்காது. 1962 ல் சட்ட மன்ற உறுப்பினராகி, 1967 ல் முதன்முதலில் தமிழ் நாடு சட்ட மன்ற பேரவை உறுப்பினரானார். 14 ஆண்டுகள் கழித்தே அவருக்கு பதவி கிடைத்தது. 1972 ல் தனிக் கட்சித் தொடங்கி, 1977ல் முதல்வரனார். 1953ல் நேரடி அரசியலுக்கு வந்து 24 ஆண்டுகள் கழித்தே முதல்வர் பதவி அவருக்குச் சாத்தியமானது. ஜெயலலிதாவும் கூட 1981ல் அ.தி.மு.கவில் சேர்ந்து, 1984ல் ராஜ்யசபா உறுப்பினராகி, 1989ல் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, 1991ல் முதல்வர் ஆனார். 10 வருட அனுபவம்!!. ஆனா இது எதுவுமே இல்லாம நாலு அரசியல்வதி நம்மைத் தேடிவந்து பாக்குறாங்கங்றத மட்டுமே மக்கள் பணியின் தகுதியாகக் கொள்ளமுடியுமா? நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த தலைவர்கள் கூட இப்பிடி பெருமையா வசனம் பேசுனது கிடையாது. நீங்களெல்லாம் பின்பற்றும் எம்.ஜி.யார் அவர்கள் கூட "இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்னு" பாட்டெழுதுறவங்க, 'அவங்க ஆசையை' எழுதி தரப் பாடுவார். வசனம் "என்னைக் களங்கப் படுத்தி மகிழாதீர்கள்னு" பணிவாகத்தான் இருக்கும். சந்திரமுகில சமத்தா நடிச்ச உங்களப் போட்டு வாங்குறேன்னு நினைக்காதிங்க., உங்களுக்குச் சொன்னா உங்க கூட்டத்துக்கு சொன்ன மாதிரி., அது தவிர சந்திரமுகி வெற்றி ஏதும், உங்கள திரும்பி தட்டிவிட்டுரப் போவுது!!.


ஆந்திராவில் 1987ல் என்.டி ராமாராவ் அவர்கள் அரசியலுக்கு வரும்போது, நம்ம விஜயகாந்த் மாதிரி 'பழைய சோறும், வெங்காயமும் போதும்' என்றுதான் வந்தார். சொத்துக்களை நாட்டுக்கு அர்பணிக்கவும் செய்தார். ஆனால் அவருடைய ஆட்சியில் தான் ஊழல் பெருகி வளர்ந்தது என்பதை ஆந்திர மக்கள் மறுக்க முடியாது. 'ராமாராவ்காரு' 'சிரஞ்சீவிகாரு!" என நடிகர்களை அவ்வளவு மரியாதையாக அழைக்கும் ஊரில்., அவருக்குப் பிறகு எந்த நடிகனும் முதல்வர் ஆகவில்லை. ஆனால் இங்கே?. எம்.ஜி.யார் ஆட்சியில் அவரே கட்டுப்படுத்த முடியமல் பெருகியது ஊழல். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும், எல்லாம் மாறணும்! ங்கிறிங்க நடிகர்கள் எல்லோரும்., 20 ஆண்டுகள் நடிகர்கள்தானே ஆண்டும், ஆண்டு கொண்டும் இருக்கிறீர்கள் என்ன மாற்றம் வந்தது?!!., விஜயகாந்த் கேட்கிறார் அன்புமணிக்கு என்ன தகுதி, தாயாநிதி மறானுக்கு என்ன தகுதி?., அரசியல்வாதியின் மகனாகப் பிறந்து, வளர்ந்ததே தகுதி!!!. என் தந்தை ஒரு அரசு அலுவளர். ஒரு அரசு அலுவலகத்தின் சுவர்கள் என்ன போசிக் கொள்ளும் என்று கூட நான் சொல்லுவேன்!!. அவர்கள் வந்தது நியாயம் எனச் சொல்லவில்லை. அதனால் நான் வருவேன் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது. வெள்ளந்தியான ஜானகி அம்மாவிடம் ஒரு ஆண்டு பழகியதையே உங்கள் அரசியல் தகுதி என பறைசாற்றும் நீங்கள் கேட்கிறீர்கள் தயாநிதி, அன்புமணி பற்றி !!. சரி அரசியலுக்கு வருவதற்குரிய கொள்கை ஏதாவது இருக்கிறதா?. பிரேமாவுக்குப் பிடித்தமாக இருத்தல் என சொல்லி விடாதீர்கள். மனைவியை எப்போதும் முன்னிருத்துவதால் உங்களை ஒழுங்கானவர் என மக்கள் நினைப்பார்களா? இல்லை அவரது ஆதிக்கம் என நினப்பார்களா?. உங்கள் இரண்டாவது மகனை சினிமாவில் களமிருக்க பயிற்சி கொடுக்கிறீர்கள். ஆனால் தாயநிதி, அன்புமணி அரசியலுக்கு வரக் கூடாது.

சரி!, அது ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வரத் துடிக்கிறீர்கள். மக்கள் சேவையே நோக்கம் என்றால் கேரளாவில் மம்மூட்டி 'கேன்சர் மறுவாழ்வு மையம்' அமைத்து அளப்பரிய சேவை ஆற்றுவதுபோல் நீங்கள் செய்யமுடியாதா?. வட இந்தியாவில் நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்றால் அம்பானிகளையும், டாட்டாவையும், பிர்லாவையும் கொண்ட பூமி அது. எனவே தாங்கும்!!!. ஆன இங்க பாவப்பட்ட தமிழ் செம்மங்கையா... விட்டுருங்க. பத்திரிக்கை தூக்குதேன்னு இன்னம் ரெண்டு பேர் இறங்குனிங்கன்னா அம்புட்டுத்தான் தமிழ்நாடு!!. அய்யா நெடுமாறன், அய்யா நல்லகண்ணு மாதிரி நாட்டில் மழை பொழியக் காரணமாக இருக்கிற சில நல்ல தலைவர்களும் இங்கு இருக்கிறார்கள். நீங்கள் உண்மையில் மாற்றத்தை விரும்பினால், அவர்களைப் போன்றோரை ஆதரித்து மாற்றம் காட்டுங்கள்!. கோடிகளில் புரள்கின்ற நீங்கள் விளையாட ஏழைத் தமிழனின் அடிவயிறுதானா அகப்பட்டது?. விளையாட்டை காட்டுங்கள் வேறிடம்!!!.

18 comments:

துளசி கோபால் said...

நெத்தியடி!!!!!!

காஞ்சி பிலிம்ஸ் said...

அப்படி போடு ராசா.

மதி கந்தசாமி (Mathy) said...

Super!!!!

அக்கினிப்பூக்கள் said...

முதல்வர் பதவிக்கு வரத்துடிக்கும் வயதான நடிகர்களுக்கு சரியான ஆப்பு!

Seemachu said...

சுத்தப் பேத்தல்!!
//
அன்புமணிக்கு என்ன தகுதி, தாயாநிதி மறானுக்கு என்ன தகுதி?., அரசியல்வாதியின் மகனாகப் பிறந்து, வளர்ந்ததே தகுதி!!!. என் தந்தை ஒரு அரசு அலுவளர். ஒரு அரசு அலுவலகத்தின் சுவர்கள் என்ன போசிக் கொள்ளும் என்று கூட நான் சொல்லுவேன்!!. //
MBBS பக்கம் கூடப் போகாத டாக்டர் பையன் கையில மருந்து வாங்கிச் சாப்பிடுவாங்களா?!!
மக்கள் ப்ரச்னை தெரியாத, பணம் பண்ணுவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அன்புமணி, தயாநிதி அரசியலுக்கு
வரும்போது, மக்கள் ப்ரச்னையைப் புரிந்த, கீழ்மட்டத்திலிருந்து வந்த ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதில் ஒரு தவறும் இல்லை.
அரசியலுக்கு வருவதற்கு, பிற அரசியல்வாதிகளின் அரவணைப்புத் தேவையில்லை.. மக்கள் உங்கள் மீது கொண்ட
அன்பு போதுமானது. அரசியலில் மாற்றம் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.
MGR-ஆல் உழைத்துத்தான் வரமுட்டிந்தது என்றால் அது அவர் காலம். எங்க அப்பாகூடத்தான் 300 ரூபாய் வருமானத்தில்
ஆரம்பித்து முன்னுக்கு வந்தார்.. அதற்காக நான் 300 ரூபாய் சம்பளம் வாங்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா..

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

மு. சுந்தரமூர்த்தி said...

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் விட்டுவிட்டு போகலாம். தவறில்லை.

எங்க ஊர்ப்பக்கம் சொல்வார்கள்: "கையில நாலு காசு இருக்குது நீ என்னா சொல்ற யோசன" ன்னு தம்பி அண்ணாத்தகிட்ட கேட்டானாம். "செலவில்லாத பணத்துக்கு சில்ற கட வையி" ன்னு அண்ணாத்த ஆலோசனை சொன்னாராம்.

கொஞ்சம் பணமும், புகழும் சேர்ந்துவிட்டது. முதலீடு செய்ய ஆசைப்படுகிறார். முயற்சி செய்து பார்க்கட்டுமே. எம்.ஜி.ஆரைப் பார்த்து சூடுபோட்டுக் கொள்பவர்கள் கூடவே, சிவாஜி, பாக்யராஜ், டி. ராஜேந்தர் என்று அடுத்து வந்த புலிகளின் சூடுகளையும் கொஞ்சம் பார்க்கவேண்டும். இந்த நப்பாசையைத் தவிர உண்மையேலேயே சேவை செய்யவேண்டுமென்று நினைத்தால் நீங்கள் குறிப்பிட்டதுபோல எம்.ஜி.ஆரின். நெடும்பாதையில் பயணம் செய்து அந்த அளவுக்கு
perseverance இருக்குதான்னு முதல்ல சோதித்துப் பார்த்துக்கொள்ளவேணும். கூடவே கொஞ்சம் அரசியல் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளவேணும். சும்மா சினிமா வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறதெல்லாம் நிஜ அரசியலில் வேலைக்கு ஆகாது.

அப்டிப்போடு... said...

துளசி அக்கா, காஞ்சி பிலிம்ஸ், மதி கந்தசாமி, அக்கினிப் பூக்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!.

சீமாச்சு!
//MBBS பக்கம் கூடப் போகாத டாக்டர் பையன் கையில மருந்து வாங்கிச் சாப்பிடுவாங்களா?//

MBBS பக்கம் கூட போகாத சின்னப் பசங்களின் கையில் மருந்தைக் கொடுத்து எத்தனையோ பேருக்கு உதவுகிறார் ஒரு மருத்துவர் நமது ஊரில். இதழ்களில் படித்திருக்கலாம் நீங்கள் கூட!. அன்புமணி, தயாநிதிக்கு மக்கள் பிரச்சனை தெரியாது. உங்கள் பிரச்சனை என்னவென்றால் அன்புமணி, தயாநிதியை நான் ஆதரிக்கும் தொனியில் எழுதியதுதான். அதில் நான் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் தகுதி என்ன? என்று கேள்வி கேட்பவர்களின் தகுதி என்ன?.,. அவர்களுக்காவது அரசியல் சூழ்நிலையில் வாழ்நிலை இருந்தது. விஜயகாந்த் குமுதத்தில் ஜானகி அம்மையாருடன் சிறிது காலம் நட்பு பாராட்டியதயே தன் அரசியல் தகுதியாக சித்தரிக்க முனைந்தால், அதை ஆதரிக்க முடியாது.

//கீழ்மட்டத்திலிருந்து வந்த ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதில் ஒரு தவறும் இல்லை.//

கீழ் மட்டத்தில் இருந்து வந்தவர்கள்தான் எம்.ஜி.யார், என்.டி.யார் எல்லாம். ஆனால் ஊழல் என்பதை இயல்பாக்கியது நடிகர்கள் ஆட்சி. அதிலிருந்து இப்படி நான் மாறுபடுவேன் எனக் கொள்கை ரீதியாக எழுதுவதை விடுத்து, எம்.ஜி.யார் பிரச்சார வேன் கொடுத்தை எல்லாம்... ம்...சுனாமியில் பாதிக்கப்பட்டபோது, எங்கிருந்தோ வந்த விவேக் மக்களொடு மக்களாக இணைந்திருக்க, உழைக்கும் வர்க்கத்தின் மதிமயக்கி இங்கு சம்பாரிக்கும் இவர்கள் என்ன செய்தார்கள்?.

எந்த வகையில் விஜயகாந்த் உங்களுக்கு நம்பிக்கையானவராகத் தெரிகிறார்?., பத்திரிக்கைகள் எழுதுவதைப் படித்து நம்பிக்கையா?., வீரப்பன் மனைவியிலிருந்து, ஜெயலட்சுமி வரை அனைவரையும் அரசியலுக்கு இழுப்பவர்கள்தான் அவர்கள்.

அரசியலுக்கு வர அரசியல்வதிகளின் அரவணைப்பு தேவை என நான் எங்கேயும் எழுதவில்லை!

//மாற்றம் அரசியலில் எப்போதும் வரலாம் //
என்ன மாற்றமய்யா? ஒரு நடிகையின் கையில் இருந்து நடிகனின் கைக்கு மாற்றுவதா? மக்கள் அன்பு அவர் பக்கமுல்லதை எப்படி கணித்தீர்?. அந்தக்காலத்தில் உங்கப்பா 100ரூபா வங்கியிருந்தாலும், இந்தக்காலத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாரித்தாலும்., ஏழையின் காலம் நகராமல்தான் நிற்கிறது. எந்தக் காலத்திலும் அவர்களை ஏய்த்துப் பிழைக்க கூட்டங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. (உங்க அப்பாவும் உழைத்தார், நீங்களும் உழைத்துதானே சம்பதிக்கிறீர்கள்? அப்புறம் என்ன எம்.ஜி.ஆர் உழைத்தார், விஜயகாந்துக்கு உழைப்பு தேவையில்லை?) படித்தவர்கள் மிகுந்த இக்காலத்திலாவது அது தடுக்கப் படவேண்டும். அரசியலில் உள்ள நல்லவர்கள் கைக்கு பதவி சென்று சேர வேண்டும். பகட்டுக்கு மயங்கும் பழக்கம் நாம் விடவேண்டும்.

மற்றொன்று, இந்தப் 'பேத்தல்' எல்லாம் நீங்கள் உங்களுடனேயே வைத்துக் கொண்டு, மாற்றுக் கருத்தை, தகுந்த முறையில் வெளிப்படுத்தினீர்களேயானால் மகிழ்வேன். பின்னுட்டத்திற்கு நன்றி!!

என்றும் மிக்க அன்புடன்
மரம்.

குழலி / Kuzhali said...

விஜயகாந்த் பற்றிய எனது பதிவிற்கான சுட்டி இதோ விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா? மீள்பதிவு ஹி ஹி சந்தடி சாக்கில் விளம்பரம்

Seemachu said...

அண்ணே அப்ப்டிப்போடு,
நான் சொல்ல வருவதைத்தான் நீங்களும் சொல்ல வர்றீங்க.. ஆனால் போற் பாதை தான் வேற.
நீங்கள் இப்பொ 'நடிகன் நாடாளலாமா?" ன்னு கேக்கறீங்க. நாளைக்கு யாராவது,
"ஒரு டாக்டர் நாடாளலாமா?", "ஒரு எஞ்ஜினீயர் நாடாளலாமா?", "ஒரு கொத்தனார் நாடாளலாமா?"
என்று வரிசையாகக் கேட்டால் என்ன சொல்லுவீர்கள்?
நடிகன் என்பது அவருடைய தற்போதைய வேலை. அதுஅ அவரின் நாடாளும் திறனுக்கு எந்த விதத்திலும் ஒரு தடையே
கிடையாது. அவருக்கு அரசியல் முன் அனுபவமோ, பின் அனுபவமோ எதுவும் தேவையென நான் நினைக்கவில்லை..
அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ, ஒரு நாடாளுமன்ற் உறுப்பினராகவோ, அட ஒரு முதல்வராகவோ வந்தால்,
அவர் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வர நினைக்கிறார், அதற்கான் சாத்தியக்கூறுகளாக என்ன நினைக்கிறார்
என்பதுதான் என் ஆராய்ச்சிக்கும், ஒரு வாக்காளரின் ஆராய்ச்சிக்கும் தேவை. அதை வைத்துக்கொண்டு தான் யாரையுமே எடை
போட வேண்டும். அவ்ர் ஜானகி அம்மையாருடன் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கட்டும். அல்லது அவருக்கு எம்ஜியார் காரென்ன விமானமே கொடுக்கட்டும், அதையெல்லாம் மக்களுக்கு பீச்சாங்கையால் எப்படி ஒதுக்க வேண்டுமென்று தெரியும்.
அப்படியே அவருக்கு ஓட்டு போட்டாலும், இதற்காகவெல்லாம் போட மாட்டார்களென்று, உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.

நம்ம அல்வாசிட்டி விஜயின் பதிவைப் படியுங்கள். ஒரு பரம்பரையே (சேலம் சிவராஜ், சிவராஜ் சஞ்ஜெய்) எப்படி லாட்ஜில்
தொழில் நடத்துகிறார்களென்ரு சொல்லியிருக்கார் பாருங்க. அது மாதிரி சில குடும்பங்கள் (இராமதாஸ், கருணாநிதி, சோனியா) இப்படி
நம்ம நாடாளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் தங்கள் லாட்ஜாக ஆக்கப் பார்க்கிறார்க்ள் அதை முதலில் கண்டியுங்கள்.

உங்கள் வாதத்தைத் தான் பேத்தல் என்று சொன்னேன். ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்ல நேரமின்மையால் எல்லாவற்றையுமே
மறுக்க வேண்டியதாயிற்று. இதை விட "காய்தல் உவத்தல் இன்றி" இன்னொரு சிறந்த பதிவை உங்களால் தரமுடியுமென்று நம்புகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

vishytheking said...

எல்ல தலைவர்களும் ஒரே மாதிரி தன் செயல்படுகிறார்கள்.. இவ்வளவு நாள் அரசியலிலேயே இருந்த பிறகு.. அண்ணனுக்கு பின் தம்பியாக அரசியலில் வந்த கருணா நிதி ஆட்சியில் ஊழல் இருக்க வில்லையா என்ன..(மிசா என்று திட்டி, பின் சர்காரியா கமிஷன் கைது வாரண்டை தவிர்க்க , மீசையில் மண் துடைத்து கூட்டணி வைத்த கதை மறந்து விட்டதா) இது ஜன நாயகம் தி மு க பாணி.. எல்லாரும் இன்னாட்டு மன்னர்.. ஆனால் நாங்கள் சொல்லுபவர் தன் நிஜமான மன்னர் என்பது போல..

மாறன் வாரிசு, மருத்துவர் வாரிசு எல்லாம் வந்து விட்டார்களே... இசுடாலின் (என்றைக்காவது கலைஞர் இப்படி முரசொலியில் எழுதினாரா அவர் பெயரை?) திறமை இன்றி வை கோ விடம் தி மு க வை இழந்து விட்டால் கலைஞர் வாரிசு வராமல் போய் விடுமே என்ற பயமா. இல்லை கலைஞ்ர் போனதும் கட்சியில் உடைந்த பங்குடன் மு. அ ஆகும் பலரது கனவை கெடுத்துவிடுவார் என்ற கவலையா?

அவரும் (வி.கா) வந்து முட்டி பார்க்கட்டுமே.. திறமை இருந்தால் மு.அ ஆகட்டுமே... இப்பொழுதே எதற்கு இவ்வளவு எதிர்ப்போ புரியவில்லை.. என்ன பயம்.. தோற்று விடுவோமென்றா.. எம் ஜி ஆரையே பார்த்தவர்களாச்சே.. எதையும் தாங்கும் இதயங்கள் அல்லவா.. அஞ்சற்க.

அன்புடன்

விச்சு

neyvelivichu.blogspot.com

அப்டிப்போடு... said...

நன்றி சுந்திரமூர்த்தி!

சீமாச்சு!

விஜயகாந்த் எப்படி மக்கள் செல்வாக்குள்ளவர்? என்ற கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. நடிகன் நாடாளமா? என்ற பலரின் கேள்வியே எனது தலைப்பு. அதற்கு மேம்போக்காக இவர் ஆளலாமா?, அவர் ஆளலாமா? என்று கேள்வி வரும் என மறுமொழியளிக்கிறீர்கள். ஏன் இதில் செயலலிதாவைச் சொல்லவில்லை., அவருந்தான் ஒரு குடும்பத்தை வளர்கிறார்!!!. நீங்கள் சொல்கிறீர்கள் காய்தல், உவத்தல் இன்றி படைப்பிக்க!. என்றாலும் உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. சீமாச்சு அண்ணன், ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தாலும் ஆதரிப்பேன். பொய் வேடமிடும் நடிகர்கள் வருவதை உண்மையில் மக்கள் நலனில் அக்கரை இருந்தாலொழிய, ஆதரிக்க மாட்டேன்!!!. இவ்வளவு நற்சான்றிதல் அளிக்கின்ற நீங்கள், எங்கே ஒரு ஏழைச்சிறுவனுக்கு 'ஆண்டாள் அழகரில்' பொறியியல் படிக்க இடம் வாங்கித்தாங்களேன் பார்க்கலாம்?! இன்னொரு பொறியியல் கல்லூரி வச்சு காசு பாக்க வேண்டியதுதான சத்த்மில்லாம? அதவிட்டுட்டு ...

விச்சு!,

வாங்க! என்ன இன்னும் காணோமே என்று பார்த்தேன். ஊழ்லைன் ஆரம்பம் நம்மாளுகதான் (எதையும் தாங்கும் இதயம்) ஒத்துக்கிறேன். ஆனா நாங்க படத்துக்கு படம் வசனம் பேசி, அதச்செய்யிவேன், இதச்செய்யிவேன்னு வரல., பேசுனா, 'தமிழ் வளர்ப்போம்., தன் மானம் காப்போம்னு' வேணா பேசிருப்போம். வசனம் பேசிப்பேசியே மக்கள மதிமயக்கிவிட்டு, சோத்து சேர்ப்பதற்காகவே வருபவர்களை, நடிக்கிற நண்டு, சிண்டுகளையெல்லாம் தூண்டி விடுபவார்களை கண்டிக்கவே வேண்டும்., அதென்ன 'நீங்க' எல்லாம் வி.கா ஆதாரவா கிளம்பீட்டிங்க?. பயமெல்லாம் ஒண்ணும் இல்லை. அவர் வந்து உங்கம்மாவுக்கு கிடைக்கிற ஓட்டத்தான் கலைக்கப்போறாரு... இதெல்லாம் சும்மா சிரிப்புக்குத்தான். ஆனா படித்தவர்கள் கணிசமாக உயர்ந்த இக்காலத்திலாவது இம்மாதிரி முட்டாள்தனங்கள் குறைய வேண்டும். அதுசரி! தமிழ்நாட்டு சனங்க முட்டாளா இருக்கிறதுதானே சில கூட்டங்களுக்கு நல்லது?. பின்னுட்டத்திற்கு நன்றி!

dondu(#4800161) said...

இது சுதந்திர நாடு. அவரவருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டு. விஜயகாந்தை எடுத்து கொள்வோம். தான் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறார். தான் சம்பாதித்தப் பணத்தை போட்டு தேர்தலில் நிற்கிறார். அவர் கட்சி வேட்பாளர்களும் நிற்கிறார்கள். பெரும்பான்மை பலம் பெற்றால் பதவி பெறுகிறார். இல்லாவிட்டால் பணமெல்லாம் இழந்து அரசியலை விட்டு விலகுகிறார். எதுவானாலும் ஓட்டு போடும் மக்கள் பார்த்து கொள்வார்கள். அதிலும் தமிழ் வாக்காளர்கள் விவரமானவர்கள். அவர்கள் ஒரு போதும் தொங்கும் சட்டசபையைக் கொண்டு வந்ததில்லை.

பிறகு அவர் அரசியலுக்கு வர வேண்டுமா கூடாதா என்று மற்றவர்கள் விவாதிப்பது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? ஒரு மூலதனமும் இன்றி தலைவர் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்தலில் நிற்காமலேயே மந்திரி ஆவதை விட விஜயகாந்த் தன் அரசியல் தகுதியை மக்கள் மன்றத்தில் வைத்து பரிசோதிப்பது கேவலம் இல்லை. எம்.ஜி.ஆர். ஒரு வழியில் பதவிக்கு வந்தார், என்.டி.ஆர். வேறு மாதிரி வந்தார். சிவாஜி, அமிதாப் பச்சன் ஆகியோர் வந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று களத்திலிருந்து விலகினர். எல்லாவற்றையும் காலம் பார்த்து கொள்ளும்.

நேரு குடும்பத்தில் பிறந்ததாலேயே இந்திரா, ராஜீவ், அவர் மனைவி சோனியா மற்றும் ராகுல் காந்தி அரசியலில் குப்பை கொட்ட முடிந்திருக்கிறது. நேரு சம்பந்தம் இல்லாதிருந்தால் இவர்களில் யாராவது தலைவர் பதவியை நினைத்து கூட பார்த்திருக்க முடியுமா? எல்லாம் நேரம்தான்.

1970-ல், ஒரு வக்கீல் மற்றும் நடிகர் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். எல்லோரிடமும் கருத்து கேட்டார். முக்கால்வாசி பேர் இது உருப்படும் காரியமில்லை என்று திருவாய் மலர்ந்தருளினர். அவ்வாறு கூறியவர்கள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் யார் என்பதைக்கூட சிரமப்பட்டுத்தான் நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. பத்திரிகை? அமோகமாக நடக்கிறது. பத்திரிகை பொருளடக்கம்? அரசியல், அரசியல் மற்றும் அரசியல். கவர்ச்சி படங்கள்? மூச். தனி நபர் தாக்குதல் கிடையவே கிடையாது. கிளு கிளு செய்திகள் - அண்ணாச்சி, ஜயலக்ஷ்மி முதலியோரைப் பற்றி? யார் அவர்கள்? நான் இங்கு எந்தப் பத்திரிகையைக் குறிப்பிடுகிறேன் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா?

இதெல்லாம் நடக்கும் என்று யாராவது 1970-ல் நினைத்து பார்த்திருக்க முடியுமா? பத்திரிகைத் துறையில் அனுபவம் வாய்ந்த குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்ட பெஸ்ட் கண்ணா பெஸ்ட் பத்திரிகை நொண்டுகிறது. எது நடக்கும் என்று யார் கூற முடியும்? இவர் பத்திரிகையோ சீராகச் சென்று கொண்டிருக்கிறது.

நடிகனோ, பொறியாளனோ, எழுத்தாளனோ யாராயிருந்தாலும் அரசியலுக்கு வருவதை எதிர்க்க நாம் யார்? வேண்டுமானால் தேர்தலில் அவர்களுக்கெதிராகப் பிரசாரம் செய்யுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

கொழுவி said...

//(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)//

ஆம் தெரிகிறது ஐயா!

enRenRum-anbudan.BALA said...

Dear அப்பிடிப்போடு,

//நடிகன் நாடாளலாமா?" "
inthiyAvil (kuRippAka thamiznAttil !) entha parathEsiyum
ALum thakuthi utaiyavar thAn enpathil aiyamillai !!!!

Also, pl. check my comments (no.31) at http://tamilkudumbam.blogspot.com/2005/05/blog-post_23.html

enRenRum-anbudan.BALA said...

//1987 ல ஆரம்பிச்சு 1991 முடிய அம்மா படத்தப்போட்டு காசு பார்த்து, அவங்கள உக்காரவச்சுட்டுத்தான மூச்சுவிட்டாங்க?.
//
Super Comedy :)
makkaL allavA utkAra vaiththArkaL !! People can decide for themselves about whom to vote in spite of what media says !!!

dondu(#4800161) said...

This is the message I get when I try to vote for this post:

"Sorry! This blog is not yet listed in thamizmanam.com"

What is the problem?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

vishytheking said...

//அதென்ன 'நீங்க' எல்லாம் வி.கா ஆதாரவா கிளம்பீட்டிங்க?. //

இதற்கு என்ன பொருள் என்று புரியவில்லை.. அய்யர் பட்டமா? கலைஞர் வள்ளுவருக்கு இத்தனை நூற்றாண்டுகள் கழித்து கொடுத்த பட்டமய்யா அது.. நீங்கள் வாரிவழங்குகிறீர்களே.. இது தவறான எண்ண ஓட்டம்.. யாரயும் ஜாதி மத அடிப்படையில் குறிப்பிட்டு தாக்குவதை தவிருங்கள். நீங்களும் தமிழ் இனம் திருந்துவதற்கு உதவியவராவீர்கள். அப்புறம் அதை பின்பற்றுவதும் ப்ற்றாததும் உங்களுடைய அறிவு மூப்பைப் பொறுத்தது.

வி. கா வை ஆதரித்ததால் பார்ப்பான் பட்டம் கிடைத்தால், அவருக்கு தோல்வி நிச்சயம்.. அரசாங்க வேலைவாய்ப்பு, 35 மார்க் கல்லூரி இடம் இதெல்லாம் விட்டுவிட்டு அவரை ஆதரிப்பதாவது..

இதையும் சிந்தியுங்கள், இன்றிருக்கும் ஆட்சியின் பின்னிருப்பவர்களிள் எத்தனை பேர் நீங்கள் சொன்ன இனத்தை சேர்ந்தவர்கள்.. கொள்ளை அடிப்பதில் 50 % அவர் வீட்டில் இருப்பவர்களும் (யாரென்று சொல்லத்தேவையில்லை) 50% மற்ற அமைச்சர்களும் தான் சாப்பிடுகிறார்கள்.. அடுத்த கட்சி ஆட்சியில் சாப்பிட்டு, நாட்டைக்கெடுத்தவர்கள் எல்லோரும் நீங்கள் சொன்ன ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை.. 50 வருடஙளில் ஜப்பான் எங்கே போனது தெரியுமல்லவா? 40 வருட ஆட்சியில் என்ன மாறியது? இரட்டை குவளைகளா? ஏழைகளின் கஷ்டங்களா? நாட்டை காக்க முடியாத நிலையை மறைக்க ஏமாற்றும் அரசியல் வியாதிகள் செய்வது இந்த இனத்தின் மீது பாய்வது.. இந்த இனத்தவர் மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் நன்றகத்தான் வாழ்கிறார்கள். நாசமாய் போனது நாம் தான்.

விகா ஜாதி பேர் சொல்லி வாக்கு கேட்க மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி கேட்காமல் , அவருடைய சொந்த தகுதிகள் மூலம் ரசிகர்கள் ஆதரவு கிடைப்பதை பயன்படுத்துவது தவறா.. அவர் ஆடினார் பாடினார், என்னமோ செய்தார்.. மரம் வெட்டி நாட்டை வீணக்கவில்லை, பாத்திமா பாபு போன்றோறை துன்புறுத்தி பொறுக்கித்தனம் செய்யவில்லை. இசுடாலின், மூ க முத்து போன்றோர் முயற்சி செய்தது தெரியதா.. சுய முயற்சியால் முன்னேறும் திறமை கூட இன்றி, தந்தையின் புகழில் சவாரி விடும் இளம் தலைவர்களை (இசுடாலின், அன்புமணி, கார்த்திக் சிதம்பரம், GK வாசன்) ஆதரிக்கலாம் என்றால், விகா விற்கு என்ன குறை.. சொந்த காலில் நிற்கிறார் அய்யா.. இசுடாலினுக்கு சென்னை மேயர் பதவி என்றால் அவருக்கு ஒரு நடிகர் சங்க தலைவர் பதவி.. அவர் கடன் முழுவதையும் அடைத்தார், நிலையான வருமனத்துக்கு வழி செய்தார் என்று அனைவரும் ஒத்துக்கொள்கிறார்களே.. திறமை இல்லாமல் இதெல்லம் செய்தாரா? அப்படியானால் அவருக்கு முன்னால் வந்தவர்கள் ஏன் கடனை விட்டுச்சென்றார்கள்?
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..(இதுவும் ஒரு நடிகர் தான் சொன்னார். அவர் இறந்ததும் ஒரு தலைவர் அவர் புகைப்படத்தை சுவரொட்டியில் பதித்து வாக்கு கேட்டார்.. இந்த தண்டனை போதாதா என்று.. மறந்து விட்டோம் இல்லையா?)

மக்களின் இன, மத, ஜாதி உணர்வுகளில் குளிர் காயும் தலைவர்களும், அவர்களை ஆதரிக்கும் கட்சிகளும் இவர் வரவை எதிர்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது..படித்த உங்களுக்கு என்ன ஆச்சுதையா?

நடிகன் செய்ததைக்கூட அதற்கு முன் ஆண்ட தலைவர்கள் செய்ய முடியவில்லை..(காமராஜர் தவிர).. சொந்த லாபங்கள் தான் பெருகின.

//படித்தவர்கள் கணிசமாக உயர்ந்த இக்காலத்திலாவது இம்மாதிரி முட்டாள்தனங்கள் குறைய வேண்டும்.//

படித்தவர்கள் அவர்களுக்கு வசதியான முட்டாள் தனங்களை ஆதரிக்கலாமா?

vichu
http://neyvelivichu.blogspot.com/
பி.கு
தமிழ்மணதில் என் வலைப்பூ மலர யார் உதவுவார்கள்.. இரெண்டு மூன்று முறை முயற்சித்து விட்டேன்.. 24 மணி நேரம் என்று செய்தி வருகிறது.. 4 நாள் ஆகிவிட்டது.. ஒன்றும் பதிலும் இல்லையே..

வீ. எம் said...

வாங்க ! வாங்க கேப்டன் சார், பொது ஜனம் தலைல ஓரமா கொஞ்சம் இடம் இருக்கு... உங்க பங்குக்கு முக்கா கிலோ மொளகா எடுதுனு வாங்க !!!