Friday, May 13, 2005

டேய்ய்... ஜாக்கசன் துர!

சில நேரங்களில், நாம் சந்திக்கும் மனிதர்கள், அவர்களது பழக்க, வழக்கங்கள் நாம் மிகவும் அதிசயப்படும் வண்ணம் அமைந்திருக்கும். அதற்கான காரணம் அவர்களுக்கே கூட தெரிந்து இருக்காது!.

எங்கள் வீட்டிற்கு வழக்கமாக வரும் எனது அப்பாவின் நண்பர். அவருக்கு ஒரு பழக்கம்!. எங்கள் வீட்டிற்கு அவர் வரும்போது கை நிறைய அல்லது பை நிறைய ஏதாவது வாங்கிக் கொண்டு வருவார். வந்தவுடன் என் தம்பியைத் தேடுவார், பெரிய பூந்திப் பொட்டலத்தை அவன் கையில் தந்துவிட்டு, "தம்பி, இப்படி உக்காரு! என்று பாசமாக அருகில் அமரவைத்து, மென்மையாக "எங்க!, 8வது வாய்பாடு சொல்லு பார்க்கலாம்" என்று போடுவாரே பாக்கலாம். எங்க குடும்பத்துக்கே கணக்கு என்பது காலன் மாதிரி!. திக்கித்திணறி அவன் வேறுவழியில்லாமல் சொல்லி முடித்ததும்... சரி நல்லது...! 16 ஆம் வாய்பாடு சொல்லு...அடுத்த 'பாம்' அ அசால்ட்டா போடுவார். அவர் எங்க வீட்டுக்கு வந்தாலே... என் தம்பி புலம்ப ஆரம்பித்து விடுவான்..! "5 வது 10 வது வாய்பாடா இருந்தாக் கூட, பரவாயில்ல... 8 வது 16 வதுன்னில்ல ஏழரையப் போடறாரு!". நங்களும் கூட சேர்ந்து, "ஆமாடா தம்பி!... வாய் பாட்டு உன்னையப் பாடச் சொல்லிக் கேட்டாக் கூட பரவாயில்ல, இப்பிடி வாய்பாடச் சொல்லச் சொல்லி ரசிக்கர ஆள என்னடா பண்றது?... சரி... நீ எதுக்கும் 32ஆம் வாய்பாட நல்லா மனப்பாடம் பண்ணிக்க!" அப்பிடின்னு வெறுப்பேத்துவோம்.

இப்படித்தான் எங்க ஊரில் (கிராமத்தில்) ஒருவர்...தினமும் சரியாக மாலை 6.30 மணிக்கு (ஒரு செகண்ட்கூட முன்னப் பின்ன இருக்காது!!) அவரது டேப் ரெக்கார்டரை ஆன் செய்து "எங்களுடன்... வயலுக்கு வந்தாயா?... நாற்று நட்டாயா...?, களை பறித்தாயா? யில் ஆரம்பித்து...... நீ எங்களுக்கு மாமனா?... மச்சானா?... மானங் கெட்டவனே!". (இந்த இடத்தில் 'பட்'டென்று டேப் நிறுத்தப் படும்!!!) என்ற கட்டபொம்மன் வசனத்தை ஒரு நாள் விடாமல் கேட்பார். ஊரில் காற்று அடிப்பதுபோல்... தண்ணிர் வருவது போல் இந்த 'வதையை', ஊர் மக்கள் இயல்பாக ஏற்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும். கட்டப்பொம்மனின் உறவினர்கள்கூட, (அவரது தலைமுறையினர்), இவ்வளவு பாசமாக அவர் மீது இருப்பார்களா?... என்பதும் சந்தேகமே!

வருடக்கணக்கில் ஜாக்சன் துரையை திட்டி ரசித்துக்கொண்டிருக்கும் இவருக்கும்... வரும்போதெல்லாம் வாய்பாடு கேட்டு ரசிக்கும் அவருக்கும்... Brain Structure எப்படித்தான் இருக்கும்? தெரிந்து கொண்டு ரசிக்க ஆசை!. (கவனிக்க: தலைப்பு நானும் ஏதோ ஒரு வீரத்தில் வைத்தது.)

6 comments:

Muthu said...

:-)

வசந்தன்(Vasanthan) said...

//வருடக்கணக்கில் ஜாக்சன் துரையை திட்டி ரசித்துக்கொண்டிருக்கும் இவருக்கும்... வரும்போதெல்லாம் வாய்பாடு கேட்டு ரசிக்கும் அவருக்கும்... Brain Structure எப்படித்தான் இருக்கும்? தெரிந்து கொண்டு ரசிக்க ஆசை!. //

கூடவே அடிக்கடி 'அப்படிப்போட்டு' இம்சை செய்யும் மரத்தின் மூளையையும்.

துளசி கோபால் said...

அப்பப்ப இது மாதிரி எடுத்து விடுங்க!!!!

நல்லா இருக்கு!!!

என்றும் அன்புடன்,
துளசி.

பி.கு: முத்துவோட சிப்பி தூள்!

அப்டிப்போடு... said...

முத்து!, உண்மையிலே ):- இப்பிடின்னா எனக்கு அர்த்தம் தெரியலே!, நல்லாயில்லையா மேட்டர்?

வசந்தன்!, தமிழை (எல்லா நட்டுத் தமிழுந்தான்) அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு தேர்ந்த வசந்தனின் மூளையே BEST Choice

நன்றி துளசி அக்கா.

குமரேஸ் said...

//வருடக்கணக்கில் ஜாக்சன் துரையை திட்டி ரசித்துக்கொண்டிருக்கும் இவருக்கும்... வரும்போதெல்லாம் வாய்பாடு கேட்டு ரசிக்கும் //

//தினமும் சரியாக மாலை 6.30 மணிக்கு (ஒரு செகண்ட்கூட முன்னப் பின்ன இருக்காது//

ஒரு விடயம் அல்ல, இரு விடயங்களுக்காகவும், உண்மையில் அவரது Brain Structure எப்படித்தான் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்

அப்டிப்போடு... said...

ஆம்! குமரேஸ் ஆரம்பிச்சுட்டாய்யா.... 6.30 ஆயிருச்சா மணி? என்று நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்!