Saturday, May 07, 2005

என்றும் இருப்பாய்

அன்புள்ள ஆயா,
அப்பாவின் அம்மாவாய் என்பதைவிட,
ஆசிரியையாகவே அதிகம் இருந்தாய்!

பள்ளிப்பக்கம் நீ சென்றதில்லை!
உன் பண்பும், பாங்கும்,
பத்து 'டிகிரி' வாங்கிய
பட்டதாரிக்கும் சாத்தியப்பாடுமா? சந்தேகமே!

பெரியப்பா, அப்பா, அத்தையுடன்
உன் நாத்தனார் விட்டுச்சென்ற...
நல்வாழையையும் வளர்த்தாய் நாட்டமுடன்!

வாழையும் பெரியப்பவை மணமுடித்து,
கன்றிரண்டை ஈன்றபின் பட்டுவிட்டது,
நீயிருக்கிறாய் என்ற நம்பிக்கையில்!

அண்ணன்கள் இருவர் மற்றும்
ஆடுமாடு, கிளி, கோழி,
அப்புறம் நாங்கள் நால்வரென,
பிள்ளைகள் வளர்ப்பதே பிழைப்பானதால்....,
இரவில் என்னேரம் அழைத்தலும்
'ம்'மென்பாய்... எப்போது உறங்குவாயோ?

'பிள்ளைகள் படிப்பு' பிசினஸென
பிரிந்து சென்ற உறவுகளை....
பாசங்காட்டி மோசம் செய்யாமல்,
அமைதியாய் அனுமதித்தாய் சுமைகளுடன்!

தீபாவளி, பொங்கல் அல்ல..
எங்களைச் சந்திக்கும் நாட்களே
உனக்கு திருவிழா நாட்கள்!
அரசியலும், அறிவியலும் நான்பேச...
ஆர்வத்துடன் கேட்ட தோழி...!
உன் நிறைவுகள் தெரியும்
நிறைவேறாதன புரியும் எனக்கு!

என் கூந்தலைக் குத்தகைக்கெடுத்து....
அன்பெனும் கூலியும் கொடுப்பாய்!
பதமாய் நல்லெண்ணைக் காய்ச்சித்தேய்த்து,
பாசமும் சீகைக்காயும் சீராய்த்தடவி,
இதமாய் சுடவைத்தணீர் ஊற்றிக்கழுவி,
ஈரம்போக்க 'சாம்பிராணி' புகைபோட்டு,
'புதைக்காடு மாதிரியில்ல இருக்கு?'
புன்னகைத்துக் கொள்வாய் பெருமிதமாய்!....

எங்கும் செல்வதில்லை நீ!
வளர்த்திட்ட உறவுகள் எல்லாம்
வந்து பார்க்கெட்டுமென்ற இறுமாப்பில்!

காலச்சுழலில் திருமணம், குடும்பமென
அமெரிக்கா வந்து ஆண்டுகள்போனது,
நான்குவருடங்கள்! ஓடித்தான் விட்டது
உன் குரல்கேட்காமல், முகம்பார்க்காமல்!
தொலைபேச தெம்பில்லை எனக்கு
உன் அழுகைக்கு பயந்து!
அனைத்தயும் மீறி இன்றுபேசினேன்...
பேசி முடிக்கும்போது சொன்னாய்
"நீ வரும்வரை இருப்பேன்!"

தெரியும் ! இருப்பாய் நீ!
உன்னைப்போல இனியொருவரைப் படைப்பது
அத்தனை சுலபமா அவனுக்கு?

8 comments:

நிலவு நண்பன் said...

hi friend
very nive articles..really it makes me to enter in my old thoughts...thanks friend....A great salute for u for this article...Bye

அப்டிப்போடு... said...

Thanks நண்பா!

Suresh babu said...

அருமை.... திரும்ப திரும்ப படிக்க வைத்தது.

சுரேஷ்.

அப்டிப்போடு... said...

சுரேஷ்,
நன்றி!, நானறிந்த வரையில் ஒவ்வொரு வீட்டிலும் சில மெழுகுவர்த்திகள் தன்னை உருக்கி, ஒளியை ஊருக்கு தந்து கொண்டிருக்கின்றன! அறிமுகப்படுத்துவோம் அவர்களை இங்கு!.

Thangamani said...

நல்ல முயற்சி!

பழமலையின் 'சனங்களின் கதை' கிடைத்தால் வாசித்துப்பாருங்கள். சமூகம், சுற்றம் சார்ந்த ஆழ்ந்த கவிதைகள் கிடைக்கும்.

கவிதையில் எழுத்துப்பிழை இருந்தால் அதிகம் உறுத்தும்.
நன்றி!

அப்டிப்போடு... said...

நன்றி மணி, படிக்கின்றேன்! எழுத்துப் பிழை சுட்டியமைக்கு நன்றி, திருத்தி கொள்கிறேன்

பாலராஜன்கீதா said...

your writings rekindled my thoughts about my mom-in-law

அப்டிப்போடு... said...

Balarajan Geetha,

Welcome! and share your thougnts, if you wish!