Monday, May 30, 2005

விச்சு அவர்கள் மற்றும், விச்சுவைப் போன்றவர்களுக்கு

எனது 'நடிகன் நாடாளலாமா?' என்ற பதிவிற்கு நீங்கள் அளித்த பின்னூட்டத்திற்கு., நான் அளித்த மறுமொழியினால் பின்னூட்டங்கள்தான் பாய்ந்து கொண்டு வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் தனிப் பதிவு போட்டு விளம்பரப்படுத்தியதற்கு நன்றி!. நான் என் மறுமொழியில்., 'நீங்க' என்று, 'பிராமணர்களைத்தான்' குறிப்பிட்டேன்!!. விஜயகாந்தை வெகுவாக ஆதரித்து சீமாச்சு, விச்சு அவர்கள் ஆகியோர் பின்னூட்டம் ஆளித்திருந்தீர்கள். அப்போது தோன்றிய எனது எண்ணதையே எழுதினேன்!!!.. பிறகு டோண்டு அவர்களும் பின்னூட்டம் இட்டிருந்தார்.
ஒரு 50 ஆண்டுகாலம் அரசியலில் கழித்த ஒரு தலைவரை அவர் திராவிடத்தை ஆதரித்தார் என்ற ஒரு காரணத்திறக்காக என்னவெல்லாம் அவரைப் பற்றி தரக்குறைவாக எழுத முடியுமோ அவ்வளவு எழுதுகிறீர்கள். மண்ணுக்குள் சென்றுவிட்ட பெரியாரை சம்மந்தமில்லாமல் சீன திரைப்பட விமர்சனத்துக்கு பின்னூட்டத்தில் கூட தயக்கமின்றி எழுதி கேலி புரிந்து மகிழ்கிறீர்கள். ஊழலைப்பற்றி எழுதினால் கூட தி.மு.க வை வெகுவாக தாக்கி, வசதியாக அ.தி.மு.க வை மறக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டில் மட்டும் 18 கொலைகள் என்கவுண்டர் என்ற பெயரில்., பொடாவில் எதிர்கட்சித் தலைவர்கள் எத்தனை பேர் அடைபட்டனர்?., ம்.. என்றால் கஞ்சா வழக்கு., ஏன் என்றால் 'தடா' வழக்கு. எத்தனை பேர் இதை சுட்டி காட்டினீர்கள் நேர்மையுடன்?. ஆனால் வீட்டில் உக்கார்ந்திருக்கும் கருனாநிதியை உங்கள் தூக்கத்திலும் 'நீங்கள்' விட்டுவைக்கிறீர்களா?. பிராமணியத்தை ஒவ்வொரு நிமிடமும் விடாமல் சுமந்து கொண்டிருக்கும் நீங்கள் அரிவுரை வழங்காதீர்கள் நான் 'ஜாதி' குறிப்பிட்டு எழுதக்கூடாதென்று!!!. அன்புமணி, தயாநிதி பதவிக்கு வந்ததால்., பாதிப்படையக் கூடியவர்கள் தொன்று தொட்டு உழைத்த தி.மு.க வினரும்., ப.ம.க.வினரும்தான். ஆனால் நடிகர், நடிகைகள் ஆட்சிக்கு வருவதால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்தத் தமிழகம். நல்லவர்கள் கைகளுக்கு பதவி செல்ல வேண்டும் அதுவும் 'நெடுமறன்', 'நல்லகண்ணு' அவர்களைப் போன்றவர்களிடம் என்றுதான் எழுதியிருக்கிறேன். சமந்தமில்லாமல் நீங்கள் விவாதத்தின் போக்கை திசை திருப்பும் விதமாக இரண்டு வரிகளைப் பிடித்துக் தொங்கிக் கொண்டு இருந்தீர்களேயானால், தி.மு.காவையும் கருனாநிதி, அவரது மகன், குடும்பத்தை சாடும் களமாக இணையத்தளங்களை 'நீங்கள்' உபயோகப்படுத்துவதால்., பெரும்பாலான நல்ல பதிவுகள்., அதன் நோக்கம் புதைக்கப்பட்டு, வெற்றெழுத்துக்களாகவே நின்று போகின்றன. ஆனால் உங்கள் நோக்கங்கள் (தி.மு.க எதிர்ப்பு) தெளிவாகவே நிறுவப்பட்டு விடுகிறது.


விச்சு அவர்களே, நீங்கள் என்னுடைய முந்தய பதிவான, வாழ்க தமிழ்குடிதாங்கிகள் என்ற பதிவிற்கு, நான் எழுதிய மறுமொழிக்கு,

\\நீங்கள் குறிப்பிட்டதைப் போல், உங்களுக்கு உணவு வேண்டுமெனில் அத்தியாவசிய தேவையான வார்த்தைகளை நீங்கள் அம்மொழியில் கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற ஒன்றை உங்கள் மேல் திணிக்கும் உரிமையை அவனுக்குத் தருகிறீர்கள் (அதில் உங்கள் தேவையும் இருக்கிறது, மறக்கவில்லை!) ஆனால் ராமதாஸ்க்கு மறுக்கிறீர்கள். அவர் செய்யட்டும் முதலில் என்கிறீர்கள்!!!. அவர் சாக்கடையில் நின்று கொண்டு நன்மைப் பார்த்து சாக்கடையில் இறங்காதே என்று கூறினால், நீ வெளியே வா., அதுவரை நானும் நிற்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது?.//

நீங்கள் கூறிய பதில்.

//அவர் சாக்கடையில் நிற்கவில்லை..அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டு உஙளை சாக்கடையில் இறங்க சொல்கிறார்.//

தமிழ் மயமாவது சாக்கடையில் இறங்குவதா? என தனிப் பதிவிட்டு நான் உங்களை அம்பலப்படுத்தி இருந்தால்... ஜெயகாந்தனின் கதிதான் உங்களுக்கும்!!. இவ்வளவு தெளிவாக எந்த ஒரு பொறுப்புமின்றி பேசும் உங்களுக்கு. உங்கள் மொழிகளிலே பதில் கூறுவது தவறென்று நான் ஒருபோதும் கருதவில்லை

Friday, May 27, 2005

இன்றைய செய்திகள் சில- பகடிகள் சில

மக்கள் ஆதரவு பெற்ற மோடி அரசை யாராலும் கவிழ்க்க முடியாது - வாஜ்பாய்
(பிகார் முடிஞ்சிருச்சு., இந்தப் பக்கம் பார்த்து சீக்கிறம் முடிங்க !!!- வாஜ்பாய்)

தமிழகத்தில் 72 இடங்களில் மழை கொட்டியது
(நாங்க இடைத்தேர்தல்ல ஜெயிச்சதுனாலதான் தெரியுமில்ல?-இரத்தத்தின் இரத்தங்கள்)

கருனாநிதி, ஸ்டாலின் மீது மேம்பாலங்கள் கட்டிய விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை - தினமலர்.
(அதுதான் செய்தி போட்டாச்சுல்ல?., அந்துமணி தம் பட்டளாத்தோட 'பார்க்செரட்டன்ல' கொண்டாட வேண்டியதுதான?-இத மட்டும் உடனே போட்டுருவிங்களே?. நட்சத்திரமெல்லாம் வேற? -மரம். )

பிரதமருடன் அத்வானி சத்திப்பு
( மோடிய மட்டுமாவது விட்டுருங்கய்யா... இல்லைனா அடுத்த தேர்தல்ல மக்கள் காவிய மறந்தே போயிருவாங்க! - அத்வானி)

சுயமாக செயல்படாத பிரதமர் - மோடி
(நான் எப்படி சுயமா செயல்பட்டு 'கோத்ரா' வ எங்களுக்கான 'யாத்ரா' வா மாத்தினேன்?- - மோடி )

விஜயகாந்த் அரசியலுக்கு வர உரிமை உள்ளது - கருனாநிதி
(ஆனால் தி.மு.காவில் இணைந்தால்தான் என்னிடம் வர உரிமையுள்ளது!!- கருனாநிதி )

Thursday, May 26, 2005

நடிகன் நாடாளலாமா?

இந்தக் கேள்விய வெற்றி கொண்டான் அய்யாகிட்ட கேட்டா, அருமையா தூய தமிழ்ல பதில் கிடைக்கும். யாருக்கு? நம்ம சினிமா அண்ணன்களுக்குத்தான். ஆனா அய்யா கட்சி சார்புடையவர் என்பதால்...நான் பேசறேன். அண்ணா! நம்ம சிகரெட்ட தூக்கிப்போட்டா, தமிழ்நாட்டுல இலட்சம் பேர் தூக்கி போடறான்., நம்ம 'பபிள்கம்' மென்னமுன்னா இங்க கோடி பேர் சேர்ந்து மெல்லுறான். உண்மைதாண்ணே!. ஆனா அவங்களுக்கு முன்மாதிரியா ஏதாவது செஞ்சு காட்டிருக்கிங்களாண்ணே?.,. அதாவது 'பொண்ணுங்கிறவ தலை குனிஞ்சுதான் நடக்கனும், ஆம்பளை தலை நிமிர்ந்து நடக்கனும்" என்று ஆயிரம் பண்ணிருக்கிங்க., நான் அதச் சொல்லல. நண்டு, சிண்டுடெல்லாம் நம்மளப் பார்த்து சலம்புதுக இது உங்க சாதனைதாண்ணே, ஆனால் விஜயகாந்த் பாவம்... உண்மையாவே இறங்கிட்டாரு பார்திங்களா?! தமிழ்நாடு அம்புட்டு இளக்காரமா போயிருச்சு., சினிமாவுல ஆடி, பாட முடியல்லனா தயார இருக்கு தமிழ் நாட்டு முதல்வர் பதவி?!. ஏன் ஆடி, ஓடி நாட்டுக்கு நல்லது பண்ற வயசுல இறங்க வேண்டியதுதான?. கூட்டம் சேருது, பத்திரிக்கை எழுதுதுன்னெல்லாம் அரசியலுக்கு வரமுடியுமா?. கழைக்கூத்தாடுபவர்கள் வித்தை காட்ட எங்கூருக்கு வந்தா, சுத்துப் பட்டுல இருக்கிற 18 பட்டியும் கூடிரும்!. கை தட்டப் பாத்திங்கன்னா... காது செவிடாயிரும்!. பத்திரிக்கைகாரங்க ... நம்மூரு முன்னேறாமப் பாத்துக்கறதுல அரசியல்வாதிகளுக்கு அடுத்த இடத்துல இவங்கதான்!. எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த போது டி.விப் பெட்டியில் ஜெயலலிதாவப் பார்த்தவங்கதான்...1987 ல ஆரம்பிச்சு 1991 முடிய அம்மா படத்தப்போட்டு காசு பார்த்து, அவங்கள உக்காரவச்சுட்டுத்தான மூச்சுவிட்டாங்க?. அப்புறம் அம்மாவத் தாக்கி எழுதுனாங்க... ஆனா உங்கள? ஒரே ஒரு 'தோல்வி'., ஒதுக்கிப்புட்டாங்கல்ல?. இப்ப நீங்க ஆன்மீக பயணம் போறதெல்லாம் (உங்க பையை நீங்களே தூக்குறிங்களாம்!!.. எதைப் புகழ்றதுன்னு...?!) போடறாங்க, சந்திரமுகி தந்த மீட்புன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? உங்கள எப்படி நினைச்சுட்டு இருக்காங்க பாருங்க?.

எம்.ஜி.யாரப் பார்த்து எல்லாரும் அரசியலுக்கு வந்திங்கன்னா, அவரோட உழைப்பை பாத்தீங்களா?. 1936 ல நடிக்க வந்தார். (முன்பும் நாடகங்களில் நடித்தார்). 1953 ல .தி.மு.க உறுப்பினராகி (அதுக்கும் முன்பே அவர் படங்களில் திராவிடம் பரப்பினார்). 1962ல் சீனப் போருக்கு முதன்முதலில் ரூபாய் 75,000/- வழங்கினார். எந்த இயற்கைச் சீற்றங்கள் வந்தாலும், அள்ளித்தார நீளும் கைகளில் முதல் கை அவருடையது. அவருடைய ஆட்சி பற்றி, மிகக் கடுமையான மாற்றுக் கருத்து எனக்குண்டு, ஆனல் அவரது வள்ளல்தன்மை பற்றி அவரது எதிரிக்கும் மாற்றுக் கருத்திருக்காது. 1962 ல் சட்ட மன்ற உறுப்பினராகி, 1967 ல் முதன்முதலில் தமிழ் நாடு சட்ட மன்ற பேரவை உறுப்பினரானார். 14 ஆண்டுகள் கழித்தே அவருக்கு பதவி கிடைத்தது. 1972 ல் தனிக் கட்சித் தொடங்கி, 1977ல் முதல்வரனார். 1953ல் நேரடி அரசியலுக்கு வந்து 24 ஆண்டுகள் கழித்தே முதல்வர் பதவி அவருக்குச் சாத்தியமானது. ஜெயலலிதாவும் கூட 1981ல் அ.தி.மு.கவில் சேர்ந்து, 1984ல் ராஜ்யசபா உறுப்பினராகி, 1989ல் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, 1991ல் முதல்வர் ஆனார். 10 வருட அனுபவம்!!. ஆனா இது எதுவுமே இல்லாம நாலு அரசியல்வதி நம்மைத் தேடிவந்து பாக்குறாங்கங்றத மட்டுமே மக்கள் பணியின் தகுதியாகக் கொள்ளமுடியுமா? நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த தலைவர்கள் கூட இப்பிடி பெருமையா வசனம் பேசுனது கிடையாது. நீங்களெல்லாம் பின்பற்றும் எம்.ஜி.யார் அவர்கள் கூட "இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்னு" பாட்டெழுதுறவங்க, 'அவங்க ஆசையை' எழுதி தரப் பாடுவார். வசனம் "என்னைக் களங்கப் படுத்தி மகிழாதீர்கள்னு" பணிவாகத்தான் இருக்கும். சந்திரமுகில சமத்தா நடிச்ச உங்களப் போட்டு வாங்குறேன்னு நினைக்காதிங்க., உங்களுக்குச் சொன்னா உங்க கூட்டத்துக்கு சொன்ன மாதிரி., அது தவிர சந்திரமுகி வெற்றி ஏதும், உங்கள திரும்பி தட்டிவிட்டுரப் போவுது!!.


ஆந்திராவில் 1987ல் என்.டி ராமாராவ் அவர்கள் அரசியலுக்கு வரும்போது, நம்ம விஜயகாந்த் மாதிரி 'பழைய சோறும், வெங்காயமும் போதும்' என்றுதான் வந்தார். சொத்துக்களை நாட்டுக்கு அர்பணிக்கவும் செய்தார். ஆனால் அவருடைய ஆட்சியில் தான் ஊழல் பெருகி வளர்ந்தது என்பதை ஆந்திர மக்கள் மறுக்க முடியாது. 'ராமாராவ்காரு' 'சிரஞ்சீவிகாரு!" என நடிகர்களை அவ்வளவு மரியாதையாக அழைக்கும் ஊரில்., அவருக்குப் பிறகு எந்த நடிகனும் முதல்வர் ஆகவில்லை. ஆனால் இங்கே?. எம்.ஜி.யார் ஆட்சியில் அவரே கட்டுப்படுத்த முடியமல் பெருகியது ஊழல். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும், எல்லாம் மாறணும்! ங்கிறிங்க நடிகர்கள் எல்லோரும்., 20 ஆண்டுகள் நடிகர்கள்தானே ஆண்டும், ஆண்டு கொண்டும் இருக்கிறீர்கள் என்ன மாற்றம் வந்தது?!!., விஜயகாந்த் கேட்கிறார் அன்புமணிக்கு என்ன தகுதி, தாயாநிதி மறானுக்கு என்ன தகுதி?., அரசியல்வாதியின் மகனாகப் பிறந்து, வளர்ந்ததே தகுதி!!!. என் தந்தை ஒரு அரசு அலுவளர். ஒரு அரசு அலுவலகத்தின் சுவர்கள் என்ன போசிக் கொள்ளும் என்று கூட நான் சொல்லுவேன்!!. அவர்கள் வந்தது நியாயம் எனச் சொல்லவில்லை. அதனால் நான் வருவேன் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது. வெள்ளந்தியான ஜானகி அம்மாவிடம் ஒரு ஆண்டு பழகியதையே உங்கள் அரசியல் தகுதி என பறைசாற்றும் நீங்கள் கேட்கிறீர்கள் தயாநிதி, அன்புமணி பற்றி !!. சரி அரசியலுக்கு வருவதற்குரிய கொள்கை ஏதாவது இருக்கிறதா?. பிரேமாவுக்குப் பிடித்தமாக இருத்தல் என சொல்லி விடாதீர்கள். மனைவியை எப்போதும் முன்னிருத்துவதால் உங்களை ஒழுங்கானவர் என மக்கள் நினைப்பார்களா? இல்லை அவரது ஆதிக்கம் என நினப்பார்களா?. உங்கள் இரண்டாவது மகனை சினிமாவில் களமிருக்க பயிற்சி கொடுக்கிறீர்கள். ஆனால் தாயநிதி, அன்புமணி அரசியலுக்கு வரக் கூடாது.

சரி!, அது ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வரத் துடிக்கிறீர்கள். மக்கள் சேவையே நோக்கம் என்றால் கேரளாவில் மம்மூட்டி 'கேன்சர் மறுவாழ்வு மையம்' அமைத்து அளப்பரிய சேவை ஆற்றுவதுபோல் நீங்கள் செய்யமுடியாதா?. வட இந்தியாவில் நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்றால் அம்பானிகளையும், டாட்டாவையும், பிர்லாவையும் கொண்ட பூமி அது. எனவே தாங்கும்!!!. ஆன இங்க பாவப்பட்ட தமிழ் செம்மங்கையா... விட்டுருங்க. பத்திரிக்கை தூக்குதேன்னு இன்னம் ரெண்டு பேர் இறங்குனிங்கன்னா அம்புட்டுத்தான் தமிழ்நாடு!!. அய்யா நெடுமாறன், அய்யா நல்லகண்ணு மாதிரி நாட்டில் மழை பொழியக் காரணமாக இருக்கிற சில நல்ல தலைவர்களும் இங்கு இருக்கிறார்கள். நீங்கள் உண்மையில் மாற்றத்தை விரும்பினால், அவர்களைப் போன்றோரை ஆதரித்து மாற்றம் காட்டுங்கள்!. கோடிகளில் புரள்கின்ற நீங்கள் விளையாட ஏழைத் தமிழனின் அடிவயிறுதானா அகப்பட்டது?. விளையாட்டை காட்டுங்கள் வேறிடம்!!!.

Monday, May 23, 2005

பீகார் பேரவை நள்ளிரவில் கலைப்பு

பீகார் பேரவை நள்ளிரவில் கலைப்பு, மீண்டும் 6 மாதத்தில் தேர்தல் வைக்கப் போகிறார்களாம். ஏன் என்றால் குதிரைப் பேரத்தை தடுக்கவாம்...! குதிரை யாரு...? அட அட அடா...! பாஸ்வான் காரணம் என்று லொல்லுவும் ('டங்கு' சிலிப் ஆயிருச்சுங்கண்ணா!). லல்லுதான் காரணம் என்று பாஸ்வானும் சொல்றாங்கலாம். இதுனால ப.ஜ.க பூச்சாண்டிகள் (மன்னிச்சுக்கங்க! பூசாரிகள்) எல்லாம் சேர்ந்து 'பந்த்' நடத்தப் போறாங்கலாம். பிப்ரவரியில் தேர்தல் நடந்து, 2 மாச இழுபறிக்குப் பிறகு இப்போது கலைப்பு!., நம்ம சனங்கள விட நல்லா விவரமாத்தான் பிகார் சனங்க இருக்காங்க. பின்ன, 2 மாசம் அத்தன பேருக்கும் பி.பி வர வைச்சுட்டாங்கல்ல?. தேர்தல் நடந்து ஒரு முறை கூட பேரவை கூடாமல் கலைக்கப்படுகிறது. யாரு அப்பன் வீட்டு காசு சாமி?. மீண்டும் தேர்தல் எதற்கு? அப்பிடியே 5 வருஷத்துக்கு 'ஜனாதிபதி' ஆட்சி இருக்கவேண்டியதுதான?. அட ஆளுநர் நு ஒருத்தர் சும்மாதானப்பா இருக்காரு? (கலைக்கிறதத் தவிர ). நம்மூர்லயும் கலைச்சாங்கப்பா... இப்ப இருக்கிற பர்னாலா அப்ப இருந்தப்ப...நள்ளிரவு கலைப்பு இந்திய ஜனநாயகத்தில் ஒரு அம்சமா இல்ல ஆயிரும் போல. நல்ல வேளை பிகார் மாதிரி, நம்மூரு இல்ல.!.. என்னமோ அப்பப்ப போடா, தடா, கஞ்சா, மிஞ்சிப்போனா 'என்கவுண்டர்' என்று போயிட்டு இருக்குது பொழப்பு! நான் 'பாப்பாத்தி' நீ 'பெருங்காய டப்பா' என்றாவது நடந்துட்டு இருக்குது கஞ்சேரி!! பின்ன மூணு மாசத்துக்கு ஒரு தேர்தல் வச்சு, அவுங்க பண்ற அக்கப்போர யார் தாங்கறது?.

வாழ்க! தமிழ்குடிதாங்கிகள்!!!

அப்பாப்பா... தமிழ்ல பெயர் வைய்யுங்கள்னு சொன்னா... என்னா எதிர்ப்பு?... என்னா துடிப்பு?...குடிதாங்கி, இடிதாங்கின்னு என்னன்ன கிண்டல்கள்?... கேலிகள்?...அரசியல் ஆதாயம்... அது....இதுன்னு ஆயிரம் காரணங்கள்!., யாரோ ஆங்கிலத்தை தார் பூசி அழித்துவிட்டார்களாம்... அதற்குத் துடித்துகொண்டொரு பதிவு...ஆங்கிலத்தில் மட்டும் பெயர்கள் வைப்பதை எதிர்த்து பதிவு போட்டார்களா?... யாருக்குத் தெரியும்?. ராமதாஸ் மரத்த வெட்டுனப்பக்கூட இவ்வளவு எதிர்ப்பு இல்ல...ஆனா தமிழில் பெயர் வேண்டும் என்றவுடன் தமிழர்கள் துடிக்கின்ற துடிப்பு மெய் சிலிர்க்கிறது.

'அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் செய்கிறார்கள்' (பாவம்...யா... நெடுமாறன்) என்றுதான் மெத்தப் படித்த இத்தனை மேதாவிகளும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களே... அப்புறம் என்ன ஆதாயம் வந்துவிடப் போகிறது?. ஓகோ படிக்காத பாமர மக்கள் தப்பி தவறி எங்க இவங்கள தூக்கிவிட்டிருவாங்கலோன்னு பயப்படுறிங்களா?.... கவலைப்படாதிங்க.... 'இரட்டை இலை' என்று ஒரு சின்னம் இருக்கும்வரை அது நடக்காது.

நல்லது பண்ணுனா வரவேற்கின்ற குணம் எப்போதுதான் நமக்கு வருமோ?... இரண்டு மலையாளிகள் ஒன்று சேர்ந்தால்... (உதாரணத்துக்கு சொல்றேன்... )'கொந்து களையும்' 'சவட்டிக் களையும் பட்டி'ன்னு என்னா அழகா மலையாலத்துல பேசிக்கிறாங்க?... அட எங்க வீட்டு 'பைப்ப' பழுது பாக்கறதுக்காக 'அப்பார்ட்மெண்ட் ஆபிஸ்' (ஆங்கிலம் தமிழ் மாதிரி கலந்திருச்சில்ல நம்மகிட்ட?) போனேன். அங்க ஒரு ஸ்பானிஸ் பொண்ணு இருந்துச்சு. என் பொண்ணுகிட்ட 'ஆண்டிக்கு 'Hai' சொல்லுன்னு சொன்னேன்'. பட்டுன்னு அந்த ஸ்பானிஸ் பொண்ணு என் மகளைப் பார்த்து 'நமஸ்தே...'னுச்சு!...தமிழ் செம்மொழியானலும்... ஆட்சி மொழியே ஆனாலும்... நாம இந்தியாவத் தாண்டுனா பாய், பெகன் தான்.... உள்ளயாவது நாம நம்ம அடையாளத்தோட இருந்தா ஏம்பா... உங்களுக்கு பொருக்க மாட்டேங்குது?. ஸ்பானிஸ்காரங்களுக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்காது. ஐரோப்பாவிலிருந்தும் மற்றும் உலகெங்கிலுமிருந்தும் பெயர்ந்தவர்கள் தான் அமெரிக்கர்கள் (செவ்விந்தியர் தவிர). ஆனாலும் அவரவது அடையாளங்கள் தொலைக்காமல்தான் வாழ்கிறார்கள். ஓரு 'ஜூஸ்' வீட்டிற்கு சென்ற போது அப்படியே இஸ்ரேலில் இருப்பதைப் போன்றே உணர்ந்தேன்.

மொழிப்பாற்றில்லாத ஒரு சமூகம் நம் சமூகம்தான். எத்தனை குண்டடிபட்டும், முகவரி தொலைத்தும் ஒரு ஈழச் சகோதரன் தமிழுக்குச் செய்யும் நூற்றில் ஒரு பங்கையாவது... சுகமாக... தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு, தமிழ்பேசி வளர்ந்த நாம் செய்கிறோமா? (என்னையும் சேர்த்துதான்). அட.. செய்யாவிட்டாலும் பாதகமில்லையப்பா... செய்பவர்களை கேலி செய்து உங்களுக்கு ஆகப் போவது என்ன?.

முன்பு நான் ஒரு பின்னுட்டத்தில் குறிப்பிட்டதைப் போல, சினிமாப் பாட்டுதான் இலக்கியமே இன்றைய தலைமுறைக்கு, யார் அறிமுகப்படுத்துகிறார்கள் நல்ல தமிழ் என்பதை?., நமக்குத்தான் நம்முள் அடித்துக் கொள்ளவும், அடுத்தவனைப் பிடித்து கீழே (நம்மவர்களைத்தான்! வந்தாரைத்தான் நாம் வாழவைப்போமே?) தள்ளவும், ஜோல்னாப்பையை மாட்டிக் கொண்டு ஒதுக்குபுறமுள்ள கடற்கரையில் கூட்டம் போடவும் (அட அதை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு பக்கத்தில் போட்டாலாவது என்னமோ ஏதோன்னு சின்னப்பசங்க திரும்பி பாப்பங்க!), பின் நவீனத்துவங்கிற (புடலங்கா!) பேர்ல ஆபாசமா எழுதி அதிர்ச்சி தர்றதுன்னு ஆயிரம் வேலை இருக்கே!, நம்ம இளைஞன் ஒருவனை அழைத்து காலச்சுவடு, தீராநதி இதெல்லாம் என்ன என்று கேட்டுப்பாருங்கள்... காலச்சுவடு...? தீராநதி.....யா? எப்ப 'ரிலிஸ்' ஆகும் தீபாவளிக்கான்னு கேப்பாங்க சத்தியமா? ! (தமிழ்குடிதாங்கிளால்தான் இதுவும்), தப்பித்தவறி தெரிஞ்சு இருந்தா அந்தப்பிள்ளை தமிழ் வாத்தியார் மகனா இருப்பான் அல்லது தமிழ் எழுத்தாளரோட மகனா இருப்பான். நம்ம பிள்ளைகளுக்கு தெரிஞ்ச இலக்கியமெல்லாம் ஒன்று வாரமலர், ஆனந்தவிகடன் இல்லாட்டி அவன் படிச்ச பாடத்திட்டத்தில் வரும் மனப்பாட செய்யுள், அப்புறம் பாப்பையா அய்யா புண்ணியத்துல பட்டிமன்றம்!.

நெடுமாறன் அவர்கள் மேல் எனக்குஎப்போதும் மதிப்பு உண்டு!. ராமதாஸ், திருமாவளவனை எல்லாம்... ஏதோ சாதி ஓட்டு கொஞ்சத்த ஒருமுறை ஐயாவுக்கும், மறுமுறை அம்மாவுக்கும் போட சொல்ற சாதரண காளன் கட்சித் தலைவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். 'வாய்ஸ்' அ அடக்குனப்ப 'அட அப்பிடிபோடு'ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா இப்ப... இப்ப... இப்படி ஓரிரு அரசியல்வாதிகள் இருந்தாத்தான்... தமிழ்நாட்டுக்கு நல்லது. எனவே தமிழ்குடிதாங்கிகளே!!! நீவீர் வாழ்க!!!.. தமிழ் பொயர் வைக்காதவர்கள் மேலும், ஒரு மூன்று மணிநேரம் பொழுதுபோக்குவதற்காக பார்க்க கூடிய ஊடகம் தான். அதில் மூன்று வருடம் நிலைத்து விட்டாலே.... நாற்காலியைப் பிடித்து உக்கார்ந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் மக்கள் வரிப்பணத்தில் நன்றாக தங்கள் பொழுதைப் போக்கிக்கொள்ளலாம் என்கிற துணிவைக் கொண்டுள்ளவர்கள் மீதும் இடி பொழிக!!!.

Monday, May 16, 2005

காஞ்சிபுரம்! கும்மிடிப்பூண்டி!

காஞ்சிபுரத்தில் 'அம்மா' தோற்று இருந்தால்... அது ஆச்சாரிகளுக்கு கிடைத்த வெற்றியாய் போயிருக்கும். காஞ்சிபுரத்தில் உள்ளவர்களுக்குத்தானே தெரியும் காஞ்சி மடத்தைப் பற்றி?. எனவே இதை ஜெயலலிதாவிற்கு அவர்கள் செலுத்தும் நன்றியாய் கொள்ளலாம்.

கும்மிடிப்பூண்டி!, தி.மு.க வில் எப்போதும் விசுவாசம் உள்ளவன் ஓரங்கட்டப் படுவான். 2 முறை ஒருவர் தொடர்ந்து வென்றால்.. அடுத்த முறை அவருக்கு கண்டிப்பா 'சீட்' கிடைக்காது. என்னதான் பயமோ?. ஜெயித்தவனை "நீ வேளையப்பாரு! இந்தா அவன் ஜெய்கறதுக்குன்னு" சொன்னா, அவங்க நல்லாப் பாப்பங்கல்ல பாக்க வேண்டிய வேலைய?.

இந்த முடிவுகளைக் கொண்டு எதையும் அனுமானிப்பது காலவிரையமே என்று நமக்குத் தெரிகிறதோ இல்லையோ 'அம்மா' விற்கு தெரியும். ஆனால் வருகிற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க வே வெற்றி பெரும்!.

இந்த மாதிரி பரபரப்பு நேரத்துல எல்லாம் 'அன்பழகன்' என்னதான் பண்ணுவாரு? பாவம்!

Friday, May 13, 2005

டேய்ய்... ஜாக்கசன் துர!

சில நேரங்களில், நாம் சந்திக்கும் மனிதர்கள், அவர்களது பழக்க, வழக்கங்கள் நாம் மிகவும் அதிசயப்படும் வண்ணம் அமைந்திருக்கும். அதற்கான காரணம் அவர்களுக்கே கூட தெரிந்து இருக்காது!.

எங்கள் வீட்டிற்கு வழக்கமாக வரும் எனது அப்பாவின் நண்பர். அவருக்கு ஒரு பழக்கம்!. எங்கள் வீட்டிற்கு அவர் வரும்போது கை நிறைய அல்லது பை நிறைய ஏதாவது வாங்கிக் கொண்டு வருவார். வந்தவுடன் என் தம்பியைத் தேடுவார், பெரிய பூந்திப் பொட்டலத்தை அவன் கையில் தந்துவிட்டு, "தம்பி, இப்படி உக்காரு! என்று பாசமாக அருகில் அமரவைத்து, மென்மையாக "எங்க!, 8வது வாய்பாடு சொல்லு பார்க்கலாம்" என்று போடுவாரே பாக்கலாம். எங்க குடும்பத்துக்கே கணக்கு என்பது காலன் மாதிரி!. திக்கித்திணறி அவன் வேறுவழியில்லாமல் சொல்லி முடித்ததும்... சரி நல்லது...! 16 ஆம் வாய்பாடு சொல்லு...அடுத்த 'பாம்' அ அசால்ட்டா போடுவார். அவர் எங்க வீட்டுக்கு வந்தாலே... என் தம்பி புலம்ப ஆரம்பித்து விடுவான்..! "5 வது 10 வது வாய்பாடா இருந்தாக் கூட, பரவாயில்ல... 8 வது 16 வதுன்னில்ல ஏழரையப் போடறாரு!". நங்களும் கூட சேர்ந்து, "ஆமாடா தம்பி!... வாய் பாட்டு உன்னையப் பாடச் சொல்லிக் கேட்டாக் கூட பரவாயில்ல, இப்பிடி வாய்பாடச் சொல்லச் சொல்லி ரசிக்கர ஆள என்னடா பண்றது?... சரி... நீ எதுக்கும் 32ஆம் வாய்பாட நல்லா மனப்பாடம் பண்ணிக்க!" அப்பிடின்னு வெறுப்பேத்துவோம்.

இப்படித்தான் எங்க ஊரில் (கிராமத்தில்) ஒருவர்...தினமும் சரியாக மாலை 6.30 மணிக்கு (ஒரு செகண்ட்கூட முன்னப் பின்ன இருக்காது!!) அவரது டேப் ரெக்கார்டரை ஆன் செய்து "எங்களுடன்... வயலுக்கு வந்தாயா?... நாற்று நட்டாயா...?, களை பறித்தாயா? யில் ஆரம்பித்து...... நீ எங்களுக்கு மாமனா?... மச்சானா?... மானங் கெட்டவனே!". (இந்த இடத்தில் 'பட்'டென்று டேப் நிறுத்தப் படும்!!!) என்ற கட்டபொம்மன் வசனத்தை ஒரு நாள் விடாமல் கேட்பார். ஊரில் காற்று அடிப்பதுபோல்... தண்ணிர் வருவது போல் இந்த 'வதையை', ஊர் மக்கள் இயல்பாக ஏற்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும். கட்டப்பொம்மனின் உறவினர்கள்கூட, (அவரது தலைமுறையினர்), இவ்வளவு பாசமாக அவர் மீது இருப்பார்களா?... என்பதும் சந்தேகமே!

வருடக்கணக்கில் ஜாக்சன் துரையை திட்டி ரசித்துக்கொண்டிருக்கும் இவருக்கும்... வரும்போதெல்லாம் வாய்பாடு கேட்டு ரசிக்கும் அவருக்கும்... Brain Structure எப்படித்தான் இருக்கும்? தெரிந்து கொண்டு ரசிக்க ஆசை!. (கவனிக்க: தலைப்பு நானும் ஏதோ ஒரு வீரத்தில் வைத்தது.)

Wednesday, May 11, 2005

கணவர்களை 'எரிச்சல்' படுத்த...!

10 நிமிடத்துக்கு ஒரு முறை 'தம்மு', வார இறுதியில் 'தண்ணி'.... ஷாப்பிங் போகும்போது, உலக அழகிகள் நாம பக்கத்தில நடந்து வந்தாலும், எதிரே வருகிற, அத்த, சொத்த பிகர்களை 'சைட்' அடிச்சு மானத்த வாங்கறதுன்னு, இந்த கணவர்கள் நமக்கு கொடுக்கின்ற 'டார்ச்சர்' கொஞ்ச நஞ்சமல்ல...ஆனால் எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும் "கணவரைக் கைக்குள் போட"... "கணவருக்கு உங்களைப் பிடிக்க வேண்டுமா"ன்னு ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளி விடுறாங்க!.

ஆனா சில பேருக்கு அவங்கள 'டென்சன்' படுத்தி பாக்கணும்னு ஆசை இருக்கும். அவங்களுக்காக,

1. நடு ராத்திரி வரை டி.விலயோ, கம்பியூட்டர்லயோ உட்கார்ந்து இருந்திட்டு, காலைல சாவகாசமா எழுந்திருச்சு கிளம்பி, காரை start பண்ணிய உடனே (கவனிக்க: கார் start பண்ற வரைக்கும் 'தேமே'ன்னு நின்னு பார்த்திட்டு இருக்கனும்.) ஓடிப்போய் "ஏங்க! பாப்பாவ நீங்க இன்னைக்கு schoolல விட்டுட்டுப்போங்க!"ன்னு போடணும் அருவால!.

2. ஆபிஸ்ல productionல பிசியா இருக்கும்போது (அந்த வீக் on call லா இருந்தா ரொம்ப நல்லது) phoneல கூப்பிட்டு "சாயங்காலம் மறக்காம சக்கரை....(என்ன பாக்கிறிங்க... நீங்க முடிக்கறதுக்கு ஆள் லைன்ல இருந்தால்ல?), ஆனா 'டென்சன்' பண்ணியாச்சுல்ல விட்டுருங்க.

3. ஒரு மாலை நேரம் 'ஐயா' அப்படியே ரிலாக்ஸ்டா காபி சாப்பிட்டுட்டு... அன்பா நாலு கடலையப் போடும்போது, "அதெல்லாம் கிடக்கட்டும்!, உங்கம்மா கல்யாணத்தன்னைக்கு சொன்ன அந்த ஒரு வார்த்தய என் உயிர் இருக்கிறவரை மறக்கமுடியாதுன்னு அடிச்சு விடுங்க! (என்ன வார்த்தைன்னு மறந்திருந்தா எதாவது ஒரு வார்த்தைய நினைச்சுக்கங்க! அதுவா முக்கியம்?).

4. நம்ம ஆளு அவருக்குத் தெரிஞ்ச ஒரு விஷயத்தையோ.. இல்ல.. ஆபிஸ்ல அவர் செய்த சாகசத்தையோ சோல்லி 'பிலிம்' காட்டும்போது, வேற எங்கயோ 'பராக்' பாத்திட்டு என்கிட்ட 'பச்சை கல் செட்டே இல்லை' என்று போடுங்கள்!.

5. அவருடைய 'ஆட்டோகிராப்' ஐ பெருமையா எடுத்துவிடும் போது... வெறித்த பார்வையுடனும், ஒரு பெருமூச்சுடனும் "ம்... அந்த 'மகேஷ்' (யாருன்னு யாருக்குத் தெரியும்?) யார்கிட்ட மாட்டிக் கஸ்டப்படறானோ" என்று புலம்புங்கள்!.

6. குழைந்தைகள் தவறு செய்யும்போது (மட்டும்) "அப்படியே அப்பனுக்குத் தப்பாமன்னு... பல்லைக்கடியுங்கள்(பிள்ளைகளைத் திட்டுவதா நமது நோக்கம்?)

இதுக்கும் மேல இருக்கவே இருக்கு சாப்பாடு நம்ம இஷ்டப்படி எரிச்சல் படுத்த!

'அட்ப்பாவி' என்று இதைப் படித்து அலறுகின்ற ஆண்களுக்கு, 'தம்' அடிக்காதிங்க! 'தண்ணி' அடிக்காதிங்க! 'சைட்' அடிக்காதிங்க! பொறுப்பான கணவனாக இருங்கள்! நாங்கள் எப்போதுமே பொறுப்பான் மனைவிகள்தான்! (மேற்கூறியவை எல்லாம் உங்களைத் திருத்ததானே)!

Tuesday, May 10, 2005

மஞ்சள் பை

ஒரு நூதனமான அனுபவம்!, உங்களில் யாருக்காவது இது ஏற்பட்டிருக்கவும் கூடும். என் அப்பா ஊர் திண்டுக்கல் பக்கத்தில் உள்ள ஒரு கிராமம். அப்பாவிற்கு திருச்சி கலைக்டர் அலுவலகத்தில் வேளை என்பதால், நாங்கள் திருச்சியில்!. விடுமுறை அல்லது குடும்ப விழாக்களுக்குத்தான் ஊருக்குச் செல்வது. அதற்குள் 10 முறை 'புள்ள கனவுல வந்திச்சு (நாந்தான்!) பாக்கனும்னு ஓடி வந்தேன்னு' பெரியப்பா (ஐய்யான்னு சொல்லுவோம்!) வந்து விடுவார்!. வரும்போது, அரிசிமூட்டை, தேங்காய், கடலை, மாம்பழம் காய்கறிகள் என்று அப்போது தோட்டத்தில் எது விளைகின்றதோ அதைக் கொண்டு வாருவார். இதுல ஒரு பாயிண்ட் என்னன்னா, ஊர்ல அவர் நாட்டாமை (தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு கலாய்ப்பதுண்டு) என்பதால், திண்டுக்கல் to திருச்சி highway ல போற எல்லா பஸ் கண்டக்டரும், டிரைவரும் பழக்கம் (பின்ன எப்ப எது தோட்டத்தில விளைஞ்சாலும், இவர்களுக்கு ஒரு 'மஞ்சள் பை' கட்டயம் உண்டு.) அதானால் யாரும் இவரிடம் டிக்கெட்டுக்கு பணம் கேட்பதில்லை!. எனவே, அங்கிருத்து இலவசமாக வந்துவிட்டு, திருச்சி பஸ்டாண்டில் இருந்து E.B காலனி வர ( 3 மைல்) 25 ரூபாய் கொடுத்துவருவார். இதுவல்ல நான் சொல்ல வந்தது, திண்டுகல்லில் இருந்து திருச்சி வரை 'மஞ்சள் பை' புண்ணியத்தில் ராஜ உபச்சாரம்!... ஆனால் ஆட்டோவில் ஏறியவுடன் (ஆட்டோ ஓட்டுனருக்கு இவர் 'நாட்டமையா இருந்தா என்ன?, இல்ல 'எஜமானா' இருந்தா என்ன?) "யோவ் பெரிசு மூட்டைய நல்லா ஏத்து"ன்னு அருமையான மரியாதையா இருக்கும். "டவுனுகாரன்களுக்கு மரியாதையே தெரியாதப்பா.."ன்னு அலுத்து கொண்டுதான் வருவார். ஓவ்வொரு ஆண்டும் எப்போதடா தேர்வுகள் முடியுமென்று காத்திட்டு இருந்து ஓடிப்போயிருவேன் ஊருக்கு!. அங்குதான் என்னமோ சுதந்திரக் காற்றையே சுவாசிப்பது போல் இருக்கும். நம்ம சத்தாய்ப்பா... பஸ்ச விட்டு இறங்கின உடனே (நமக்காக மட்டும்தான் அந்த ஊர்ல பஸ்சே நிக்கும், மத்தவங்க அடுத்த ஊரில் இறங்கி நடந்து வர வேண்டும்!), சூட்கேஸ் தூக்க நாலு பேர் ஓடிவருவாங்க (மாமா மகனுக தான்!). அப்ப ஆரம்பிக்கிற கவனிப்பு விடுமுறை முடியும் வரைத் தொடரும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், ஊர் சுற்றல் என பொழுது போகும். நல்ல சாப்பாடுன்னு பேருக்கு சொல்லவில்லை!. காலைல அப்பக் கறந்து சூடா இருக்கிற பால்ல அப்பிடியே ' ப்ரூ ' தூள், சர்க்கரைப் போட்டு, அடிக்க வேண்டியதுதான்!. எங்க அண்ணன் ஒரு கோழிப்பண்ணை வச்சிருந்தனால, நின்னாகோழி, நடந்தா கோழி.... படுத்தா கோழி குருமாதான்!. இதுதவிர பத்தும் பத்தாததுக்கு தோட்டத்தில் காய்க்கின்ற இளநீர், மாம்பழம்...இங்க அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு உறவினர்களை நினைத்து அழுவதைவிட, கோழி, இளநீரை நினைச்சுத்தான் நிறைய அழுவது. பம்பு செட்டில் தோழிகளுடன் (நல்ல தோழிகள் இன்றும் அங்கு உண்டு என் அண்ணிகளுடன் சேர்த்து) நீராட்டம். மதியம் எங்க ஐயா கயிற்றுகட்டிலை நான்கு போர்வைகளைப் போட்டு மெத்தென்று ஆக்கித்தருவார். அதில், 'காட்டன் டவலை' தண்ணிரில் நனைத்து பிழிந்து முகத்தில் போட்டுக்கொண்டு (மே மாச வெய்யில் பிச்சுரும் இல்ல). மாமரத்து நிழலில் படுத்தால் பொழுது சாயும் காலம் தான் மீண்டும் இந்த உலகத்திற்கு வருவது ... எந்திருச்சு திரும்ப ஒரு இளநீரோ, பதனீரோ அடித்துவிட்டு... வீட்டுக்குச் செல்வது.... இப்படி சுகம்ம்ம்ம்ம்ம்மா.... நாட்கள் போய்ட்டு இருக்கிறப்பதான் ... அந்தக் கொடுமையான நாள் வரும்!. ஆமா, திரும்பி திருச்சிக்கு போகனும் இல்ல?. இந்தப் படிப்புன்னு ஓன்ன எவந்தான் கண்டுபிடிச்சானோ?...ஊருக்கு கிளம்புகிற நாள் காலையில் இருந்து ரொம்ப சோகமா ஆகி நம்ம முகம் தன்னால 'உம்' என்று ஆயிரும்! "அதான் மூணு மாசத்துல "ஊர்ச்சாமி" கும்புட வருவில்ல சாமி!" சுற்றங்களின் சமாதானம் இன்னும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்றும். சரின்னு மனச சமாதனப் படுத்திகிட்டு, சூப்பரா சுடிதார மாட்டிட்டு, பக்காவா தலை சீவி, என்ன மேக்கப் போட முடியுமோ, அம்புட்டும் போட்டு(திருச்சில நமக்காக ஒரு மாசமா கத்திட்டு இருக்கிற ஜொல்லன்களை ஏமத்தக்கூடாதில்ல?) 'பாட்டா' (அப்பாவோட அப்பா) படத்துக்கு சாமி கும்பிட்டு விட்டு, எல்லாப் பெரிசுக கிட்டயும் திருநீறு வாங்கிப் பூசிட்டு பந்தாவா செருப்ப போட்டுத் திரும்பும்போதுதான் அந்த அதிர்ச்சி நடக்கும்! எங்க ஆயா நாலைந்து 'மஞ்சள் பை'களை கொண்டு வந்து கொடுப்பாங்க! 'என்னாது இது?' நான் பாய்வேன்!. "கோவிச்சுக்காதப்பா!, கொஞ்சம் கடல , துவர, தேங்காதான் சாமி, நீ தூக்க வேண்டாம், அண்ணன் தூக்கிக்குவான்!" (திருச்சிக்கு அண்ணன் தான் கொண்டுபோய்விடும்!) . அதுவும்தான் டிப்டாப்பா டிரஸ் பண்ணிட்டு வரும்! பஸ் வரைக்கும் தூக்கிற மாதிரி நடிச்சுட்டு, என்கிட்ட தள்ளிரும்! சுடிதார், செண்ட், லைட்டா லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுட்டு மஞ்சப் பையத்தூக்கிட்டு திருச்சி வந்து சேர்வேன்!. நானவது பரவயில்ல!., ஒரு தடவ என் தம்பி, எங்க அத்தை ஊருக்குப் போன போழுது(அத்தை பொண்ணு திருமணமோ என்னமோ), ஒரு மூட்டை காய்ஞ்ச மிளகாய பாசமா அவன் தலைல கட்டி விட்டுட்டங்க! எங்க அப்பா ஊருக்குப் போகும்போது வள்ளல் மாதிரி வாரி வழங்குவார் என்றாலும், அத சிக்கனமா செலவழிச்சுட்டு (அதாவது, ஆட்டோவில் வாராமல் டவுன் பஸ்சில் வருவது, ஊர்ல திருநீர் பூசறப்ப பெரிசுககிட்ட இருந்து வேற வல்லிசாத் தேறும்!, அதெல்லாம் பாக்கெட் மணியாக்கி பட்டாசு வெடிக்கணும்ல?).அவன் மிளகாய் மூட்டையத் தூக்கி டவுன் பஸ்( மாலை கூட்டத்தில்) கண்டக்டர் பின் புறப் படிக்கிட்ட போராடிக்கிட்டு இருக்கும் போது, முன்புறம் ஏத்தி, முன்புறப் படிக்கருகில் இருக்கிற சீட்டுக்கடியில் தள்ளிவிட்டுட்டான். அவன்போய் நல்லா பஸ் நடுவில் நின்னுக்கிட்டான், கொஞ்ச நேரத்தில டிரைவர்ல ஆரம்பிச்சு எல்லாரும் வரிசையாத் தும்ம ஆரம்பிச்சுட்டங்க!. கண்டக்டர் யாருது மூட்டை?ன்னு கத்தும்போது, பேசாம அப்பிடியே ஜன்னலுக்கு வெளிய பாத்து சமாளிச்சிட்டு, எங்க காலனி வந்தவுடன், மிளகா மூட்டையை இழுத்திட்டு ஓடிவந்திட்டான்!. அதற்குப்பிறகு யாராவது அத்த வீட்டுக்கு...ன்னு... சொன்னாப்போதும்...அவங்களுக்கு கும்மாங்குத்துதான். எங்க பெரிய அண்ணன் மகன் இதிலெல்லாம் ரொம்பத் தெளிவு! திருச்சிக்கு சேர்ந்து வரும்போது "அக்கா பையக்குடு! நான் வச்சுக்கிறேன்னு" வங்கிக்குவான்! ஆனா திண்டுக்கல் (அவன் ஊர்) போனா "இந்தாக்கா வச்சுக்க!"ன்னு நம்மகிட்ட தந்திருவான்.

Saturday, May 07, 2005

என்றும் இருப்பாய்

அன்புள்ள ஆயா,
அப்பாவின் அம்மாவாய் என்பதைவிட,
ஆசிரியையாகவே அதிகம் இருந்தாய்!

பள்ளிப்பக்கம் நீ சென்றதில்லை!
உன் பண்பும், பாங்கும்,
பத்து 'டிகிரி' வாங்கிய
பட்டதாரிக்கும் சாத்தியப்பாடுமா? சந்தேகமே!

பெரியப்பா, அப்பா, அத்தையுடன்
உன் நாத்தனார் விட்டுச்சென்ற...
நல்வாழையையும் வளர்த்தாய் நாட்டமுடன்!

வாழையும் பெரியப்பவை மணமுடித்து,
கன்றிரண்டை ஈன்றபின் பட்டுவிட்டது,
நீயிருக்கிறாய் என்ற நம்பிக்கையில்!

அண்ணன்கள் இருவர் மற்றும்
ஆடுமாடு, கிளி, கோழி,
அப்புறம் நாங்கள் நால்வரென,
பிள்ளைகள் வளர்ப்பதே பிழைப்பானதால்....,
இரவில் என்னேரம் அழைத்தலும்
'ம்'மென்பாய்... எப்போது உறங்குவாயோ?

'பிள்ளைகள் படிப்பு' பிசினஸென
பிரிந்து சென்ற உறவுகளை....
பாசங்காட்டி மோசம் செய்யாமல்,
அமைதியாய் அனுமதித்தாய் சுமைகளுடன்!

தீபாவளி, பொங்கல் அல்ல..
எங்களைச் சந்திக்கும் நாட்களே
உனக்கு திருவிழா நாட்கள்!
அரசியலும், அறிவியலும் நான்பேச...
ஆர்வத்துடன் கேட்ட தோழி...!
உன் நிறைவுகள் தெரியும்
நிறைவேறாதன புரியும் எனக்கு!

என் கூந்தலைக் குத்தகைக்கெடுத்து....
அன்பெனும் கூலியும் கொடுப்பாய்!
பதமாய் நல்லெண்ணைக் காய்ச்சித்தேய்த்து,
பாசமும் சீகைக்காயும் சீராய்த்தடவி,
இதமாய் சுடவைத்தணீர் ஊற்றிக்கழுவி,
ஈரம்போக்க 'சாம்பிராணி' புகைபோட்டு,
'புதைக்காடு மாதிரியில்ல இருக்கு?'
புன்னகைத்துக் கொள்வாய் பெருமிதமாய்!....

எங்கும் செல்வதில்லை நீ!
வளர்த்திட்ட உறவுகள் எல்லாம்
வந்து பார்க்கெட்டுமென்ற இறுமாப்பில்!

காலச்சுழலில் திருமணம், குடும்பமென
அமெரிக்கா வந்து ஆண்டுகள்போனது,
நான்குவருடங்கள்! ஓடித்தான் விட்டது
உன் குரல்கேட்காமல், முகம்பார்க்காமல்!
தொலைபேச தெம்பில்லை எனக்கு
உன் அழுகைக்கு பயந்து!
அனைத்தயும் மீறி இன்றுபேசினேன்...
பேசி முடிக்கும்போது சொன்னாய்
"நீ வரும்வரை இருப்பேன்!"

தெரியும் ! இருப்பாய் நீ!
உன்னைப்போல இனியொருவரைப் படைப்பது
அத்தனை சுலபமா அவனுக்கு?

உன் முகம்

இன்றிரவே துவங்கிவிட்டது...
எனது பகல்!
என்ன கேட்பாய்
நாளை மாலை?
அறிந்த அனைத்தையும்
அலசிப்பார்த்தது மூளை...

நேர்த்தியாய் அலங்கரித்து
நெட்டுயிர்த்து நிமிர்கையில்...
வாசலில் நீ!

சன்னலின் வழியே
விரைந்த மனதை...
பிடித்து சொருகினேன்.
படபடப்புடன் பணிய
மறுத்தது அது!

நேரமோ நின்றது!
சலித்து அதனுடன்
சண்டை பிடிக்க,
'காபி கொடுக்க'
அழைத்தது குரல்!

வெளியே வந்தும்
வெட்கத் திரையால்
நிழலாய் உன்முகம்!

மெதுவாய் சற்று
ஒதுங்கி நிற்கையில்...
பேசுகின்ற குரல்களும்
உன் பேசாக்குரலும்
உணர்த்துகின்றன உன்முகத்தை!

தலை நிமிர்த்தி,
உன்னைப் பார்க்கின்றேன்....
தரைபார்த்து நீ...!

Wednesday, May 04, 2005

நகைச்சுவையும் படையுங்கள் பெண்களே!

அந்த நாட்களில் மதுரம், அங்கமுத்து, முத்துலட்சுமி, சரோஜா, மனோரமா (இன்று குணச்சித்திரமாயிட்டாரே!) போன்ற நல்ல நகைச்சுவை விருந்தளிக்கவல்ல பெண்மணிகள் திரையில் இருந்தார்கள். கோவை சரளாவிற்குப் பிறகு, தமிழ் திரையுலகில் பெண் நகைச்சுவை நடிகைகள் குறைந்து விட்டதாகவே படுகிறது. இதைப் பற்றி பிறகு பதிவு செய்கிறேன். மிகுதியாக, பெண்களிடம் இருந்து சீரியஸ் ஆன படைப்புகளே அது கதையாகட்டும், கட்டுரையாகட்டும், கவிதையாகட்டும், பட்டிமன்றமாகட்டும் (காந்திமதி மற்றும் சில இளம் பேச்சளர்கள் தவிர), வலைப்பதிவுகளாகட்டும் கிடைக்கிறது. நான் அறிந்தவரை, அன்றாட வாழ்க்கையில் பெண்களே நகையின் சுவையுடன் நகைச்சுவையும் அனுபவிப்பவர்கள் என்பேன். 50 வயதிற்கு மேற்பட்ட அப்பாக்கள் எல்லாம் சிரிக்கவே மறந்து விடுகிறர்கள் நமது ஊரில். ஆனால், 50 வயது பெண்மணிகளைப் பாருங்கள்! இள வயது ஆர்வம் சிறிதும் குறையாமல், உடல் முழுவதும் நகை அணிந்து, முகம் நிறைய புன்னகையோடு இருப்பார்கள். (சில விதிவிலக்குகள் இருக்கலாம் சாமிகளா!., கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரத்தில நல்லா வேளை பாக்காம, இரத்ததின் இரத்தங்கள் அம்மாக்கிட்ட புன்னகைய எதிர்பார்த்தா கும்மாங்குத்துதான் கிடைக்கும்.! நம்ம என்னமோ நினைக்கிறோம், பாவம்! அமைச்சர், எம்.எல்.ஏக்களோட பிழைப்பு!). எங்கள் வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றால் பெண்கள் அடிக்கும் 'ஜோக்குகளில்' தான் வீடு ரெண்டுபடும் (பின்ன!, ஆண்கள் எல்லாம் பொறுப்பா வேலை செய்து கொண்டிருப்பார்களே!). ஒரு விஷேச தினத்தில், என் அக்கா பெண் (11 வயது) அவர்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்துக் கொண்டிருந்தாள், "எங்க அம்மாவும், அப்பாவும் கத்திப் பேசிட்டு இருக்கும்போது, எங்க பாட்டி(அவளுடைய அப்பாவின் அம்மா), இடையில பேச வந்தாங்களா?, அப்ப, அம்மா பாட்டியப் பிடிச்சுத் தள்ளி விட்டுட்டங்க...!" என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். அப்போது என் அண்ணனின் மகன் (12 வயது), திடுக்கிட்டு, "என்ன?, உங்க அம்மா பாட்டிய தள்ளி விட்டுட்டாங்களா?" என்று கேட்டான். அதற்கு அவள் மிக இயல்பாக, "பின்ன?, கோவத்தில ரெண்டு அடி அடிக்கறதுதான் அப்புறம் சேர்ந்துக்கறதுதான்... ஏன் உங்க அம்மா உங்க பாட்டிய அடிக்கவே மாட்டாங்களா?..." என்றாள், அவன் மறுப்பாகத் தலை அசைக்க, "நீ பாத்திருக்கமாட்ட..!" என்றாளே பார்க்கலாம்...! இது சீரியஸ் ஆன மேட்டரா, சிரிப்பான மேட்டரா என்பது ஆய்வுக்குரியது என்றாலும், அன்று முழுவதும் சிரித்து, சிரித்து வயிறு புண்ணானது. நானும், என் சித்தியும் (அம்மாவின் கடைசி சகோதரி) சேர்ந்தால்... எப்போதும் ஒரே கலாய்ப்புதான். ஒரு நாள் இப்படித்தான், என் அம்மாவின் பாட்டி (அம்மாவை வளர்த்தவர்), இறந்து விட்டார் என செய்தி வந்தது. இந்தப் பாட்டி எங்களுக்கு எல்லாம்.. "சிம்ம சொப்பனம்!", விடுமுறையில் அம்மா வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் வாராவாரம் கால் லிட்டர் நல்லெண்ணையை தலையில் கொட்டி, நல்ல காரமான (இத எப்பிடி சொல்றது?, நல்லா கண்ணு எரிய வைக்கிற) சீகைக்காயை தலையில் 'அப்பி', முடியெல்லாம் சேர்த்து பிடித்து உச்சந்தலையில் வைத்து பரபரவென்று தேய்த்து, வெந்நீரை பளீர், பளீரென்று முகத்தில் அடித்து குளித்து விடுவார். தலையை அவரிடம் கொடுத்துவிட்டு, கத்தக்கூட சக்தியின்றி குளித்து முடிப்போம். நானும், என் கடைசி சித்தியும் (பெயர் பூங்கோதை, என்னைவிட 2 வயதுதான் பெரியவர் என்பதால், வா, போ என்றுதான் அழைப்பது) நெருங்கிய தோழிகள், திருச்சியிலிருந்து கரூர் பக்கம்தானென்றாலும், வருட விடுமுறை அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில்தான் சந்திப்பது. எங்களுக்குள் ஒரு பழக்கம்! நங்கள் சந்திக்கும்பொழுது, கடந்தமுறை சந்தித்ததில் இருந்து, தற்போதைய சந்திப்பு வரை என்ன புதிதாக வாங்கியிருந்தலும் (நகைகள், புடவைகள், மேக்கப் அய்ட்டங்கள் ஏன் ஒரு சின்னப் பேனா கூட) ஒருவரிடம் ஒருவர் காட்டிக் (அழகாக இருந்தால் மனதில் 'கருவி'யும்)கொள்வோம். சரி, விஷயத்திற்கு வருகிறேன், பாட்டி இற்ந்த செய்தி கேட்டு சென்றபோது, வீடு நிறைய உறவினர்கள். பயணத்தின்போது ஒரளவு அமைதியாக வந்த அம்மா பாட்டியைப் பார்த்ததும் அழுது மயக்கம் போட, அவரை அப்படியே அவரது உறவினர்களிடம் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தபோது, பூங்கோதை ஓடி வந்து, வந்துட்டியா? அம்மாயைப் (இறந்த பாட்டி) பாத்தியா? என அழுது புலம்ப, எனக்கு சிரிப்புதான் வந்தது (பாட்டிக்கு வயது 80க்கும் மேல). சட்டென்று சமாளித்துக்கொண்டு, "சரி, வா... !" எனக்கூறி, விடு,விடு என்று அவளது அறைக்கு அழைத்து சென்று, பாதுகாப்பாக கதவைத் தழிட்டு, 'பீரோ'வை மெதுவாகத் திறந்து, புதிதாக வாங்கிய புடைவைகள் ஒவ்வொன்றாக எடுத்து காட்ட ஆரம்பிக்க, (பட்டு, தசார் சில்க், பேட்ச் ஒர்க் பொட்டிக் சாரீஸ் என mostly dry wash சாரீஸ்தான். (நம்ம வயித்தெரிச்சலை கொட்டிக்க அம்புட்டு அவசரம்). நானும் சகஜ நிலைக்கு திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் யாரோ கதவைத் தட்ட, கட்டில் மேல் இருந்த புடவைகளை அவசர , அவசரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, கதவைத் திறந்தால், என் அத்தை நின்று கொண்டு இருந்தார். எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நிதானமாக உள்ளே வாந்து, அவருக்கு தேவையான ஏதோ ஒன்றை எடுத்து கொண்டு வெளியே செல்லும்போது, "பூங்கோத!, அவ்வளவு சேலையையும் தொட்டிட்டியா?, அத்தினையும் துவைக்கனும்!" என்று சொல்லிவிட்டுப்போக, பிறகும் பூங்கோதை மாஞ்சு, மாஞ்சு அழுதது பாட்டிக்காக அல்ல!. இப்படி நம் வாழ்வில் நாள்தோறும் காண்கிறோம் நகைச்சுவையை. நம் மனதை மகிழ்ச்சியாய் வைக்க மட்டுமல்ல, மிகக் குழப்பமான மனநிலையில் இருக்கும்போழுதும், குழப்பத்தை (கஷ்டப்பட்டு) ஒதுக்கி வைத்துவிட்டு, வடிவேல் அல்லது விவேக் காமெடியப் போட்டு 15 நிமிஷம் சிரிச்சுட்டு, யோசிங்க! எப்பேர்ப்பட்ட குழப்பமும் பாதியாக குறைந்துவிடும் (மீதிய நீங்களாத்தான் சரி செய்யனும்). உங்களை எப்பவும், Heroவாக நினைக்காமல், காமெடியனாக நினையுங்கள்! நிஜ வாழ்வில் Hero ஆகிவிடுவீர்கள் (உங்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டமிருக்கும்). எனவேதான், நமது முன்னோர்கள் 'நகைப்பை' 'சுவை' எனக் கூறி இருக்கிறார்கள். அறுசுவையும் அன்றாடம் படைக்கும் பெண்களுக்கு இயல்பாக வரும் இந்தச் சுவையை, பெண்கள் உங்கள் படைப்பிலும் காட்டுங்கள்!. அதனால் நீங்கள் சொல்ல வரும் செய்தியின் "கனம்" நிச்சயம் குறைந்துவிடாது.

Tuesday, May 03, 2005

சினிமா விமர்ச(சி)னம்

சந்திரமுகிக்கு விமர்சனம் எழுதாட்டி உங்களுக்குகெல்லாம் PROJECTஅ முடிச்சு அனுப்பிபுடுவோம்னு, காதுக்கிட்ட வந்து வெள்ளைகரான் சொன்ன மாதிரி, அத்தனை அண்ணாச்சிகளும், தங்கச்சிகளும் எழுதி தள்ளிட்டிங்க. லேட்டா வந்துட்டு இனிமே நான் என்னத்த எழுதறது?. ஆனா என் மனசு என்னமோ ஆற மாட்டேங்குது. அதுதான் 2 வரில 3 பேருக்கும் ஒரு கடிதமாவது எழுதிப் போடலாம்னு,

வாசு சித்தப்பு,

2005 ல நீங்க உலகம் முலுவதும் 'டைரக்டர்'ன்னு தெரிய, 1993 லேயே ஒரு ஆளு யோசிச்சு, மெனக்கெட்டு கத பண்ணியிருக்கார் பாருங்க!. நீங்க 'குமுத' த்துல அம்புட்டு ஆவேசமா குடுத்த பேட்டியப் பார்த்திட்டு, நாங்கூட அவரத் தப்பா நெனச்சுட்டேன் போங்க!. அங்க 'அவார்ட'த் தவிர என்னத்த சம்பாரிச்சு இருக்கப் போறாரு? பாவம்!, விட்டுத்தள்ளுங்க!

உலக நாயக அங்கிள்,

என்னாது இது?, சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?. ஆனா 'டெக்னாலஜி'ல புதுமை பண்ணிருக்கிங்க! நல்லது!.

ஜான் தம்பி,

உங்க 'பேர்' அளவுக்கு 'பிபஷா' வுக்கு 'காஸ்ட்யூம்' மாட்டிவிட்டு படத்த ஓட்டிப்புட்டீங்க! என்னமோ போங்க!

Monday, May 02, 2005

வந்திட்டா மகராசி

வணக்கங்க! என் பெயர் ஒரு மரத்தோட பெயருங்க! நான் இருக்கறது காட்டில இல்லைங்க... USA, DELAWARE லங்க...சரி! ஊர், பெயரா முக்கியம்? என்னத்த எழுதப் போறங்கிறீங்களா?, நம்ம ஊர்ல கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு அரசியல்வாதி இருந்தாரு, ' தாமரைக்கனி'ன்னு, ( இப்பவும் இருக்கிறார், அரசியலில் அல்ல, வீட்டில்.). Interesting ஆன ஆளு, சட்டசபையில், அவருக்கு முன்னாடி உக்கார்ந்து, 'கோக்குமாக்கா' பேசரவங்கள, செல்லமா மோதிரக் கையால கொட்டுறது, (அவரோட மோதிர சைஸ் ச்சும்ம்மா... அவர் உள்ளங்கை அளவு சின்னததான் இருக்கும்). அவர் மகன், பத்தாவது பரீட்சை கேள்வித்தாளை திருடினதுக்கு காரணம் கருனாநிதி மற்றும் எதிர்கட்சியின் சதிதான் என்று சிரிக்காமல் பேட்டி கொடுப்பது என்று கலக்கிட்டு இருந்தாரு ஒரு காலத்துல. (சன் டிவி ரபிபெர்னாட் (நேருக்குநேர்) கஷ்ட்டப்பட்டு சிரிப்பை அடக்கிகொண்டு பேட்டி எடுக்கும் ஒரே தலைவர் இவர்தான்) ஆனா, தாமரைக்கனி எப்படிபட்டவர் என்று 'தெக்க' யராவது நண்பர்கள் இருந்தா கேட்டுப்பாருங்க. நம்ம எழுத்தும் கிட்டத்தட்ட அவர மாதிரித்தாங்க!. பயந்திறாதிங்க! அட!, நான் சில விஷயங்கள 'நகைச்சுவையாகவும்' சில விஷயங்கள 'சீரியஸ் ஆகவும்' சொல்லப்போறேன், அம்புட்டுத்தான்!. அதெல்லாம் கிடக்கட்டும், இதென்ன எழுத்து நடை இப்படி கொச்சைத் தமிழில் இருக்குதேன்னு கேக்குறிங்களா?

"இளங்கதிர் ஞாயிரு எள்ளும் தோற்றத்து....." - இது உங்களுக்கு 'சட்டுன்னு' புரியுதா?

'காலைச் சூரியன விட அழகான உருவம்..." - இது புரியுது தான?

என் சிற்றறிவுக்கு எட்டியதை, உணர்ந்ததை, பார்த்ததை, பழகியவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். "தட்டிப்' பாராட்ட, 'கொட்டி' நேர்படுத்த, இணைய உறவுகள்... நீங்கள் இருக்கிறீர்கள்.... உங்கள் ஆதரவோடு... எடுத்து வைக்கிறேன் என் முதல் அடியை!.

எங்க அப்பாவோட அப்பா எப்பவும் சொல்லுவாரு, "எங்க போனாலும் மொத அடி நம்ம அடியா இருக்கணும்டான்னு.... ( முதன் முதலில் நாங்கள் பள்ளிக்கு செல்லும் போது இதை தவறாமல் சொல்லுவார். வாத்தியாரோட அவருக்கு என்ன முன்பகைன்னு எனக்கு தெரியாது.). தமிழ் டைப்பிங் என்னை பயப்படுத்தியதால்... லேட்டு...... நாங்க லேட்டா வந்தாலும்.......அது! (Superkku Thanks).