Saturday, April 09, 2011

இராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை


எம் இனத்தை அள்ளித்தின்ற டெல்லியின் நிரந்தர விருந்தாளி, தொடர்ந்து தின்று செரிக்கிறது எமது மீனவர்களை! கண்டும் காணாமலும் கண்மூடி தேர்தலில் புதைந்து கொள்கின்றன அரசியல் கட்சிகள்.


இராமநாதபுரம் மாவட்டம்:

1. திருவாடனை 2. பரமக்குடி 3. இராமநாதபுரம் 4. முதுகுளத்தூர்

தொகுதி மறுசீரமைப்பில் கடலாடித் தொகுதி நீக்கப்பட்டுள்ளது.


1. திருவாடனை:


சுப.தங்கவேலன்


முசிபுர் ரகுமான்


திமுக: சுப.தங்கவேலன்
தேமுதிக: முசிபுர் ரகுமான்

கடந்த 5 முறை இங்கு வென்ற சிட்டிங் காங்கிரசு எம்.எல்.ஏ. கே.ஆர். ராமசாமியின் கையிலிருந்து திமுகவிற்கு சென்றிருக்கிறது தொகுதி. (கே.ஆர். இராமசாமி காரைக்குடியில நிக்கிறாரு.) அமைச்சர் வென்ற கடலாடித்தொகுதி சீரமைப்பில் சிதறிவிட, திருவாடனையில் நிற்கிறார் சுப.தங்கவேலன். கடலாடித்தொகுதியின் பெரும்பகுதி முதுகுளத்தூர் தொகுதியுடன்தான் இணைந்துள்ளது. ஆனால் திருவாடனையில் நிற்கிறார் சுப.தங்கவேலன். தன் மகன் (மா.செ) த.சம்பத் இம்முறை இங்கு களமிறக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரசு கே.ஆர். ராமசாமி செய்த பல நல்லவைகள் இடியாய் அமைச்சர் தங்கவேலனின் தலையில் விழுகிறது. கடந்த 5 வருடம் தங்கள் தேவைகளை யாரும் நிறைவேற்றாததால், இத்தொகுதிக்குட்பட்ட பேராவூர் மக்கள் ஓட்டுப்போடபோவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். பிச்சன்குறிச்சி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லையென சாலைமறியல் செய்துவருகின்றனர் (திடிரென அங்கு ரோடு போடப்பட்டதால் ஏற்பட்ட மோதலில், இவரது உறவினர் ரித்திசு எம்.பி கைதுசெய்யப்பட்டு இராமநாதபுரத்திற்குள் வர தடைசெய்யப்பட்டுள்ளது). இப்படிப்பட்ட ரணகளத்தில், முதன்முறை களம் காணும், தேமுதிக சார்பில் இங்கு நிற்கும் முசிபூர் ரகுமானைப் பற்றி என்ன சொல்வது? நூறுக்கும், சோறுக்கும் ஓட்டுப்போடாதீர்கள் என திருமதி விசயகாந்த் திருவாடனையில் பரப்புரை செய்யும்போது கூறியுள்ளார். கோடியில் நலத் திட்டங்களை தேர்தலுக்கு முன்பே இத்தொகுதியை மையப்படுத்தி செய்துள்ளதால் சுப.தங்கவேலனுக்கு கிடைக்கலாம் திருவாடனை.


2. பரமக்குடி:


டாக்டர் எசு. சுந்தர்ராசு


கே.வி.ஆர்.ராம்பிரபு
காங்கிரசு - கே.வி.ஆர்.ராம்பிரபு
அதிமுக - டாக்டர் எசு. சுந்தர்ராசு

அதிமுகவின் கோட்டையாக இருந்த பரமகுடியை 1996 ல் திமுக கைப்பற்றியது. அதன் பிறகு இங்கு தொடர்ந்து வென்று வருகிறார் கே.வி.ஆர். ராம்பிரபு. மூன்றாவது முறையாக மீண்டும் இத்தொகுதியில் நிற்கிறார். ஆதிமக்கள் வாக்குகளே இங்கு வெற்றியை முடிவுசெய்யும். அதிமுகவில் கடந்தமுறை ராம்பிரபுவிடம் தோற்ற டாக்டர் சுந்தராசு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். 1991 ல் இங்கு எம்.எல்.ஏவாக இருந்தவர் சுந்தராசு. மக்கள் எளிதில் சந்திக்ககூடிய அளவில் எளிமையானவர். நெசவாளர் பிரச்சனை எப்போதும் உள்ள தொகுதி. அதிமுக இங்கு நெசவாளர் நலனுக்கு ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கின்றது. ராசாவை கைது செய்யக்கோரி போராட்டம் இப்பகுதியில் நடத்தப்பட்டது. தொடர்ந்து இருமுறை இங்கு எம்.எல்.ஏவாக இருக்கும் ராம்பிரபுக்கு மாற்றை இம்முறை மக்கள் இங்கு விரும்புகிறார்கள். 20 வருடங்களுக்கு பின் டாக்டர் சுந்தராசுக்கு அரசியல் மறுவாழ்வு தரும் பரமகுடி.


3. ராமநாதபுரம்:


பேராசிரியர். சவாகிருல்லா


அசன் அலிகாங்கிரசு - அசன் அலி
மனித நேய மக்கள் கட்சி: பேராசிரியர். சவாகிருல்லா

40 வருடங்களுக்கு பிறகு கடந்தமுறைதான் இங்கு காங்கிரசு போட்டியிட்டது. போர்குற்றவாளி, ரசாபக்சேவின் கையாள் கீழக்கரை அசன் அலி மீண்டும் இங்கு போட்டியிடுகிறார். கமராசருக்கு மாலை போட மறுத்த காங்கிரசுகாரர் இவர். சிலர், மாதிரி அமைச்சரவை (இப்படி உசுப்பேத்திதான் காங்கிரசு இந்தநிலையில் வந்து நிக்கிதா? ஆட்சியில பங்கு! கல்லூரிகளில், தொழில்களில் வரும் வருமானத்தை விட ஆட்சியில் பங்கென்றால் வரும் வருமானம் அதிகம் போல!) அமைத்து ஊருக்கு உழைத்தார் என்கிறார்கள். காங்கிரசு வழக்கப்படி போட்டி வேட்பாளராக அசன் மவுலானா (பெரியகுளம் எம்.பியின் மகன்)வும் நிற்கிறார். அசன் அலி வீட்டுல திருட்டுப்போனபோது ஈழத்தில் தமிழர் தம் உடமை திருடும் இனக்கொலையாளன் இராசபக்சே ஆறுதல் தெரிவித்ததாம்...விழுப்புரம் தண்டவாளத் தகப்பிற்கும் இவருக்கும் தொடர்பிருப்பதாய் வழக்குப்பதிவிருந்தும் காங்கிரசு மீண்டும் உட்காரவைக்கிறதென்றால், மக்கள் உணர்வு அவ்வளவு கிள்ளுக்கீரை காங்கிரசுக்கு. பணபலமுள்ள செல்வந்தர் அசன் அலி, போனமுறை தேர்தலின்போது ஓட்டுக்கு 1000 ரூ கொடுத்ததாக தோழர் மகேசு நம் பதிவில் தெரிவித்திருந்தார். இம்முறையும் மக்களை விலைக்குவாங்க இவர் முயற்சி செய்வார். தொகுதி பக்கம் திரும்பிப் பார்க்காமல் நுங்கபாக்கம், டெல்லி, இலங்கை என்றே இருந்துவிட்டதால் இந்து முன்னனி 'எம்.எல்.ஏ வைக் காணவில்லை' என சுவரொட்டியது. இராமேசுவரத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் 539 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் அதைப்பற்றி இவர் சாட்டமன்றத்தில் எத்தனைமுறை கவலையோடு விவாதித்தார் என்பதை இங்கு ஓட்டுப்போடும் மக்கள் சிந்திக்கவேண்டும். மக்களின் உயிர் போக்கும் பிரச்சனைகளை விட்டுவிட்டு, மாதிரி மந்திரி சபையாம், மாதிரி மந்திரிசபை!!. அசன் அலி சொன்னதை எல்லாம் செஞ்ருந்தா பாவம்... வறட்சி பூமி இராமநாதபுரம் அவர் கூறியது போல் சொர்க்க பூமி சிங்கப்பூரால்ல இருந்திருக்கும்? சிங்கப்பூர்ல இருக்கவன் இராமநாதபுரத்துக்கு ரோடுபோட விசா எடுத்து வந்திருப்பானே?! அசன் அலி கொடுத்த உறுதி எல்லாம் வீணாப்போச்சுன்னு மீண்டும் 5 வருடம் கேட்கிறார்.

இரத்தம் கொடுத்து மத நல்லிணக்கத்தை வளர்க்கும் கட்சி மனிதநேய மக்கள் கட்சி. மக்களிடையே இவர்கள் பணியாற்றுகிறார்கள். இசுலாமிய சகோதரர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு, டாசுமாக் கடைகளுக்கு எதிர்ப்பு போராட்டம், பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரிப் போராட்டம், எளியவருக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, அவசரஆம்புலன்சு உதவி (திமுக இந் நல் உதவியை தங்கள் அரசின் நலத் திட்டமாகவே அறிவித்துவிட்டது! ஆனால் இதற்காகும் செலவை செய்வது மாநில அரசு இல்லை என்கிறார்கள்??!!) என மக்களுடன் கலந்திருக்கிறார்கள் மமகவினர். “முசுலீம் மக்கள்தொகை அங்க பெருகிருச்சு, இங்க பெருகிருச்சு, இது ராமன் பொறந்த இடம், அது சீதை வளர்ந்த இடம்” என்பது மாதிரி பேசி கலவரம் தூண்டாமல் அப்படி பேசியவர்கள் அடிபட்டாலும் இரத்தம் கொடுக்கிறார்கள் மனித நேயத் தோழர்கள். வீட்டை விட்டு வெளிவராத, வீட்டிற்குள்ளும் ஒரு தடுப்பிற்குள் இருக்கும் பெண்களையும் அரசியல்மயப் படுத்தியிருக்கிறார்கள். சாதி ஆணவம் மிக்க கூட்டம் மாவட்ட வாரியாக கட்சி ஆரம்பித்தால் வளர்த்துவிடும் வஞ்சக அரசியல்வாதிகள், இவர்களை வளர்க்கத் துணிவதில்லை. பேராசிரியராக பணியாற்றியவரும், தமுமுகவின் ஆரம்பகால நிர்வாகிகளில் ஒருவருமான சவாகிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர். இவர் இத்தொகுதியில் காங்கிரசை எதிர்த்து போட்டியிடுகிறார். பல்லாண்டுகாலம் தன்னுடன் இருந்துவரும் முசுலீம் லீக்கிற்கு கருணாநிதி கொடுத்தது 3 இடம். அதையும் காங்கிரசிற்கு 1 இடம் விட்டுக்கொடுக்கும் நிலையிருந்தது. இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய ஓட்டுகள் 3 தொகுதிகளை அதிமுக கூட்டணியில் பெற்றுத்தந்திருக்கிறது. இவரது ஓட்டை பிரிக்க எசுடிபிஐயும் அப்துல் அமீது என்பவரை நிறுத்துகிறது. இங்கு முனைவர் சவாகிருல்லா வெல்வார்.


4. முதுகுளத்தூர்:


முருகன்


சத்தியமூர்த்திதிமுக: சத்தியமூர்த்தி
அதிமுக : முருகன்

நெருப்பில்லாமலேயே எப்போது வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும் பகுதி முதுகுளத்தூரில் சிட்டிங் (திமுக)முருகவேல் மருக, 2001ல் கடலாடியில் போட்டியிட்டு வென்ற, கடந்த முறை கடலாடியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுத்தோற்ற முன்னால் அதிமுக அமைச்சர் (முன்னால் மா.செவும் கூட) சத்தியமூர்த்தி, தற்போது திமுகவிற்கு மாறிவிட்டதால், அவர் திமுக சார்பில் முதுகுளத்தூரில் இம்முறை நிறுத்தப்பட்டுள்ளார்.
முதுகுளத்தூர் தொகுதியில் தேவேந்திர குல ஓட்டைப் பிரிக்க தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான்பாண்டியனும் இத்தொகுதியில் நிற்கிறார் (இவர் நிலக்கோட்டை தொகுதியிலும் நிற்கிறார்). இது திமுகவை பாதிக்கும். இசுலாமியமக்களின் ஓட்டுக்களை பிரிக்க யாரும் நிற்கவில்லை. அதிமுக சார்பில் முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். மா.செ ஆணிமுத்து முருகனுக்கு பக்கபலமாக இருக்கிறார். எசு.பி.காளிமுத்து எங்கப்பா? முக்குலத்து வாக்குவங்கி இவருக்கு சாதகம். சத்தியமூர்த்தியின் பணபலம் அவரை இங்கு வெல்லவைக்கும்.


கடந்த தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தின் அத்தனை இடங்களையும் திமுக கூட்டணி வென்றிருந்தது. ராமதாநபுரம் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் திருவாடனை, பரமக்குடி மற்றும் இராமநாதபுரம் மூன்றிலும் காங்கிரசு வென்றிருந்தது. இம்முறை இரண்டு இடத்தில் நிற்கிறது. இரண்டிலும் தோற்கும் நிலையுள்ளது.

மொத்த தொகுதிகள் நான்கில் வெல்ல வாய்புள்ளவை

திமுக கூட்டணி - 2 இடங்கள்
அதிமுக கூட்டணி - 2 இடங்கள்

Friday, April 08, 2011

தூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை


இனமானத் தமிழர் முத்துகுமாரின் ஊர் திருச்செந்தூர் உள்ள மாவட்டம் தூத்துகுடி.
நன்றி: படங்கள். இணைய தளங்களில் இருந்து.


தூத்துக்குடி மாவட்டம் :

மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 6

1. விளாத்திகுளம் 2. கோவில்பட்டி 3. ஒட்டப்பிடாரம் 4. தூத்துகுடி 5. திருவைகுண்டம் 6. திருச்செந்தூர்

தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டது.


1. விளாத்திகுளம்:சி.வி. மார்க்கண்டேயன்


பெருமாள்சாமி
காங்கிரசு: பெருமாள்சாமி
அதிமுக : சி.வி. மார்க்கண்டேயன்

அதிமுகவும், திமுகவும் எப்போதும் மோதும் தொகுதி!. ஆனால் கடந்த முறை, காங்கிரசும்/தமிழ் மாநில காங்கிரசும் தொடர்ந்து வென்று வரும் தொகுதியான சாத்தான்குளம் தொகுதியில் காங்கிரசு வென்றது (ராணி வெங்கடேசன்), சீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால், இம்மாவட்டத்தில் ஒரு தொகுதியை இழக்கவிரும்பாத காங்கிரசு விளாத்திகுளத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது. இங்கு இளைஞர் காங்கிரசு பெருமாள்சாமி நிறுத்தப்பட்டுள்ளார். விளாத்திகுளத்தில் நாயக்கர் சமூக வாக்குவங்கியுள்ளது. அச்சமூகத்தை சேர்ந்தவரை மதிமுக ஓட்டையும் அள்ளலாம் என்ற எண்ணத்தில் நிறுத்தியுள்ளனர். (கருமம்!, சாதி பற்றி எழுத மனமில்லைதான் ஆனால் உண்மை நிலை இதுவாகத்தானே இருக்குது?. சாதி பார்க்காமல் ஓட்டும் போடும் மக்களும், சாதி பார்க்காது வேட்பாளரை நிறுத்தும் அரசியல் கட்சியும் இருந்தால் சாதியை தவிர்த்து எழுதலாம். உண்மையை எழுதவேண்டுமெனில் தேர்தலை சாதி தவிர்த்து எழுதமுடியாது). ஓட்டுகேட்கும்போது சொந்த கட்சிக்காரர்களை விட திமுகவினர்தான் பெருமாள்சாமியை சுற்றி இருக்கின்றனராம்.

நான் செத்தாலும் என் பிணம் கூட திமுக பக்கம் போகாது என அறிக்கைவிட்ட சிட்டிங் சின்னப்பனுக்கு மறுக்கப்பட்டு (அனிதாவை தாக்கிப்பேசியது எதுவும் கைகொடுக்கவில்லை சின்னப்பனுக்கு!), மார்க்கண்டேயனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவிலிருந்து அதிமுகவில் அடைக்கலம் ஆனவர் சி.வி. மார்க்கண்டேயன். சின்னப்பன் வைப்பாற்றில் மேம்பாலம் போன்ற சில கோரிக்கைகளை வாக்குறுதி அளித்தபடி செய்திருக்கிறார். 'அனிதா ராதகிருட்ணன் மீண்டும் அதிமுகவில் இணைவார்' என பழைய மாசெ பள்ளத்தூர் முருகேசன் மேடையில் பேச அம்மா, நீ விலகப்பான்னு மாசெ பதவிய திருப்பி வாங்கி எஸ்.பி. சண்முகநாதனுக்கு கொடுத்துட்டாங்க!. இங்கு இக்குழப்பங்களும், மதிமுகவை யாருடனும் சேரமுடியாதபடி பேச்சு வார்த்தையை இழுத்து சதி செய்ததால் மதிமுக (கோபம்) வாக்கிவங்கியும் வெற்றியைத் தீர்மானித்தால், காங்கிரசுக்கே களநிலை சதகமாக இருக்கிறது. கடந்தமுறை தேமுதிக ஓட்டைப் பிரித்தும் அதிமுக வென்ற தொகுதி இது, மதிமுக கூட்டணியில் இருந்ததால்தான் அது நடந்தது. இப்போது தேமுதிகவும் கூட இருக்கிறது, ஆனால் மதிமுகவின் வாக்குவங்கி தேமுதிகவிற்கு இங்கு இருப்பது கடினமே. இதை விட விளாத்திகுளத்தில் தேமுதிகவைச் சேர்ந்த நடராசன் என்பவர் வேறு மார்க்கண்டேயனுக்கு போட்டி வேட்பாளராக நிற்கிறார். எது எப்படியிருப்பினும் இது அதிமுகவின் தொகுதி, எனவே சின்னப்பன் ஆதரவில் மார்க்கண்டேயன் விளாத்திகுளத்தை கைப்பற்றலாம்.


2. கோவில்பட்டி:


கடம்பூர் செ.ராசூகோ.ராமச்சந்திரன்
பாமக: கோ.ராமச்சந்திரன்
அதிமுக: கடம்பூர் செ.ராசூ

இந்திய கம்யூனிசுடு கட்சியின் கோட்டை கோவில்பட்டி. ஆனால் போனமுறை திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிசுடு கட்சி இங்கு போட்டியிட்டு தோற்றது. இம்முறை பாமக கோ.ராமச்சந்திரன் நிற்கிறார். திமுகவும், விடுதலை சிறுத்தைகளும் உடன்வர வாக்கு கேட்கிறார் இராமச்சந்திரன். கூட்டணி கட்சியினர் இவ்வேட்பாளருக்கு நன்கு பரப்புரை செய்கின்றனர். பாமக, திமுகவின் வாக்குகளை மட்டுமே இங்கு நம்பமுடியும். கடந்தமுறை அதிமுக எல்.ராதாகிருட்டிணன் போட்டியிட்டுவென்றார். இவர் திமுகவினரைச் சந்தித்து தொகுதி மக்களுக்காக (??) மனுக்கொடுத்தார் என்பதால் அம்மா இவர் கட்சிப் பதவியை திரும்பபெற்றுகொண்டார். ஆகவே சிட்டிங் எல்.இராதாகிருட்ணனின் அரசியல் எதிர்காலம், அதிமுக வேட்பாளர் வென்றால் ? தான். சிட்டிங்கின் செல்வாக்கு + திமுகவினர், ராமதாசின் பரப்புரை பாமகவிற்கு சாதகம். அதிமுக கூட்டணியில், இம்முறை செ பேரவை இணைச்செயலர் கடம்பூர் செ.ராசூ நிற்கிறார். இவருக்கு கட்சியிலேயே உள்ளடி வேலைகளை சிலர் பார்க்கின்றனர். இருந்தாலும் கம்யூனிசுடு + அதிமுக வாக்குவங்கி இங்கு கடம்பூர் செ.ராசூவை வெல்ல வைக்கும்.

3. ஒட்டப்பிடாரம்:


டாக்டர்.க. கிருட்ணசாமி


சி.ராசா

திமுக: சி.ராசா
புதிய தமிழகம்: டாக்டர்.க. கிருட்ணசாமி

அதிமுக மிகப் பலமாக உள்ள தொகுதி. கடந்தமுறை அதிமுக வென்றது இத்தொகுதியில். கிருட்ணசாமி 3 முறை இங்கு போட்டியிட்டு, ஒருமுறை(1996 ல்) இங்கு வென்று இருக்கிறார். கடந்தமுறை இத்தொகுதியில் போட்டியிட்டு இவர் தோல்வி அடைந்திருந்தாலும், இம்முறை அதிமுக வாக்குவங்கியுடன் புதிய தமிழகம் கட்சியின் வாக்குகளும் சேரும். புதிய தமிழகம் டாக்டர்.கிருட்ணமூர்த்தியை எதிர்த்து புதியமுகம் ராசா திமுக சார்பாக நிறுத்தப்பட்டுள்ளார். நிலத்தடி நீரை தூத்துகுடி தொழிற்சாலைகள் குடித்துவிட, குடிநீரும், விவசாயதிற்கு நீர்பாசனமும் கேள்வியாகி நிற்கிறது ஒட்டப்பிடாரத்தில். புதிய தமிழகம் கட்சியினர் இப்பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளனர் (அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ மோகன் தண்ணீர் வியாபரம் செய்கின்றார் எனக்கூறியும் போராட்டம் நடந்தது!!). எதிர்கட்சி எம்.எல்.ஏ வானதால் தொகுதிக்கு ஒன்றையும் சாதிக்க முடியாத மோகன் மேல் மக்கள் கோபம் இருந்தால், அது புதிய தமிழகத்தை பாதிக்கும். புதியதமிழகம் டாக்டர். கிருட்டிணசாமி இம்முறை வெற்றி பெறவாய்ப்பிருக்கிறது.

4. தூத்துகுடி:


கீதா சீவன்


செல்ல பாண்டியன்திமுக: கீதா சீவன்
அதிமுக: செல்ல பாண்டியன்

பெரியசாமி அவர்களின் மகள் அமைச்சர் கீதா சீவன் மீண்டும் போட்டியிடுகிறார். அனிதாவால் அம்மா, தூத்துகுடி அதிமுகவை நினைத்து அரண்டு கிடக்கிராரோ இல்லையோ அதிகம் கலவரமாகிக் கிடப்பது (திமுக)கழகத்தூண் பெரியசாமிதான். இவரோட மிரட்டலுக்கு ஆளான திமுகவினர் அனைவரும் அனிதாவுடன் தற்போது இணைந்துவிட்டனர். பெரியசாமியின் வலது கை அருணா திமுகவை விட்டே நீக்கப்பட(அருணா, திமுக துணை மாவட்ட செயலாலர்!!), நொந்துதான் இருந்தார் பெரியசாமி. திமுக கீதா சீவனுக்கு மீண்டும் சீட்டை கொடுத்து சமாதானப்படுத்தி இருக்கிறது..

முதலில் செனிபர் சந்திரன், பின்பு பால் தற்போது செல்லப்பாண்டியன் வேட்பாளர் என அறிவித்து இருக்கிறது அதிமுக. திமுகவிலிருந்து அதிமுக சென்ற செனிபருக்கு கட்சிப்பதவியும் இல்ல, தேர்தல் பொறுப்புமில்ல(நாயினாருக்கு மாற்றப்பட்டது!) இப்ப இங்கு சீட்டுமில்ல!. கீதா சீவன் தொகுதியை தக்கவைத்துக்கொள்வார்.


5. திருவைகுண்டம்:


எசு.பி. சண்முகநாதன்சுடலையாண்டிகாங்கிரசு - சுடலையாண்டி
அதிமுக : எசு.பி. சண்முகநாதன்

இடைத்தேர்தலில் வென்று இன்று சிட்டிங் ஆக உள்ள வழக்கறிஞர் சுடலையாண்டி மீண்டும் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாத்தான்குளம் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசனும் இத்தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் இரண்டிலும் வென்றிருக்கிறது இங்கு காங்கிரசு. இடைத்தேர்தல் வெற்றியை வைத்து எதையும் சொல்லமுடியாது. ஏனெனில் இத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடவில்லை. காங்கிரசு சண்டைகள் அதிமுகவிற்கே இங்கு சாதகமாக இருக்கிறது.

முன்னால் அமைச்சர். எசு.பி. சண்முகநாதன், 2001 ல் இத்தொகுதியில் வென்றவர். செயலலிதா கடந்த வருடம் அதிமுக நிர்வாகிகளை மாற்றியதில் மீண்டும் தூத்துகுடி அதிமுக மா.செவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த தேர்தலில் காங்கிரசிடம் தோற்றிருந்தாலும் அதிமுகவில் செல்வாக்குள்ளவர் என்பதால் மீண்டும் நிறுத்தியிருக்கிறது அதிமுக. பள்ளத்தூர். முருகேசனின் ஆட்கள் உள்ளடி வேலைகள் பார்க்காமலிருந்தால் அதிமுக இங்கு வெல்லும்.

6. திருச்செந்தூர்:அனிதா இராதாகிருட்டிணன்


பி.ஆர். மனோகரன்


திமுக: அனிதா இராதாகிருட்டிணன்
அதிமுக: பி.ஆர். மனோகரன்

கடந்தமுறை அதிமுக சார்பாக வென்றுவிட்டு, அதை விட்டுவிட்டு, திமுகவில் இணைந்து, மீண்டும் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக நின்று வென்றார் அனிதா. (இவர் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய, தென்மாவட்டத் திமுகவே திரண்டு கூட வந்தது, இடைத்தேர்தல் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பின் போது செயா 9(9? இதுக்குகூடவா லக்கி நம்பர்?) நிமிடங்கள் சட்டசபைக்கு வந்திருந்தாராம் அந்த ஒன்பது நிமிடம் அனிதாவிற்கு 9 வருடங்களாய் இருந்திருக்கும்). 4 வது முறையாக இங்கு இவருக்கு வாய்ப்பு. அதிமுகவின் பி.ஆர். மனோகரன் நிற்கிறார். முடிவு தெரிந்தும் வீடுவீடாக ஓட்டுக்கேட்கிறார். இடைத்தேர்தல் முடிவையே மீண்டும் அறிவிப்பார்கள் திருச்செந்தூரில் அனிதா இராமச்சந்திரன் வெற்றிபெற்றுள்ளார் என.

மதிமுகவின் செல்வாக்குள்ள மாவட்டம் தூத்துகுடி. அனிதா இராதாகிருட்டிணன் அதிமுகவில் இருந்தபோது 4 இடங்களில் கடந்தமுறை அதிமுக வெற்றி பெற்றது தூத்துகுடி மாவட்டத்தில். துத்துகுடியில் அதிமுகவின் நிலையை மக்களவைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் செயாவிற்கு தெளிவாக உணர்த்திவிட்டது. இருந்தும், இம்முறை ஒரே ஒரு தொகுதியை (வெல்லவாய்ப்புள்ள) புதியதமிழகம் கட்சிக்கு கொடுத்துவிட்டு 5 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. நாயினார் நாகேந்திரன் பொறுப்பாளராக இம்மாவட்டதிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து இரு ராதாகிருட்டிணன்கள் திமுக அனுதாபியாகிவிட்டனர் இம்மாவட்டத்தில். (மதிமுகவில் இருந்தும் ஒரு ராதாகிருட்டிணன் திமுகவிற்கு தாவி இருக்கிறார் அவர் கே.எசு.ராதாகிருட்டிணன்!)

கடந்தமுறை திமுக தூத்துகுடியில் மட்டுமே இம்மாவட்டத்தில் வென்றது. திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அனிதா வென்றதால் கடைசி நேரத்தில் 2 எம்.எல்.ஏக்கள் திமுகவிற்கு. காங்கிரசு 2 இடம் வென்றிருந்தது அதில் 1 மறுசீரமைப்பில் நீக்கப்பட்டுவிட்டது. தூத்துகுடி மாவட்டத்தில் அதிமுகவில் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்கள், மதிமுக கூட்டணியில் இல்லாதது எல்லாம் இம்முறை திமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும். வேட்பாளர்களை கொண்டும், தமிழுணர்வு தோழர்களின் உழைப்பும் கொண்டு, அதிமுகவிற்கு 4 இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் எழுதியுள்ளேன். தூத்துகுடி அதிமுகவின் கோட்டையாக இருந்தது மாறி 2 வருடங்கள் அகிவிட்டது.

தூத்துகுடியில் மொத்தம் 6 இடங்களில்

வெல்ல வாய்ப்புள்ளவை

திமுக கூட்டணி ‍ 2 இடங்கள்
அதிமுக கூட்டணி 4 இடங்கள்

Friday, April 01, 2011

திருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை

நன்றி: படங்கள். இணைய தளங்களில் இருந்து.


வைகோ நேர்மையாளரா?, நம்பி வந்தோரை தூக்கிவிடும் நல்ல அரசியல்வாதியா? என்ற கேள்விகளுக்கெல்லாம் போகாமல், ஒவ்வொரு தேர்தலுக்கும் மேடையில் ஒலித்த அந்தக் குரல் இத்தேர்தலில் திட்டமிட்டு மொளனமாக்கப்பட்டது வருத்தம் தருகிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ மக்கள் பிரச்சனையை உணர்ந்த அரசியல்வாதி வைகோ. கடைசிவரை ஈழ எதிர்ப்பு கூட்டணியுடன் அவர் சேரவில்லை. தேர்தலில் வாக்குவங்கி மட்டும் வெற்றியை ஈட்டிவிடாது. எதிரணியின் குறைகளை எடுத்து வைக்கும் பரப்புரை பெரும்பங்கு வகிக்கும் என்பதை இம்மாவட்ட முடிவுகள் அதிமுகவிற்கு உணர்த்தும். (இக்குறை போக்க சீமான் அவர்களின் பரப்புரையை செ டிவியில் காட்டுகிறார்கள்.)

திருநெல்வேலி மாவட்டம் : மொத்தம் 10 தொகுதிகள்.

1. வாசுதேவநல்லூர் 2. சங்கரன் கோவில் 3. தென்காசி 4. கடையநல்லூர் 5. ஆலங்குளம் 6. திருநெல்வேலி 7. அம்பாசமுத்திரம் 8. பாளையங்கோட்டை 9. நாங்குனேரி 10. ராதாபுரம்.

2006ல் 11 தொகுதிகள் இருந்தது திருநெல்வேலி மாவட்டதிற்கு. தற்போது சீரமைப்பில் சேரன்மாகதேவி தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.

1. வாசுதேவநல்லூர் :


டாக்டர் எஸ். துரையப்பா


எசு கணேசன்


காங்கிரசு: எசு கணேசன்
அதிமுக : டாக்டர் எசு. துரையப்பா

காங்கிரசு ஆர்.ஈசுவரன் 6 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வென்றிருக்கிறார். ஒரு முறை தமகா வென்றிருக்கிறது. காங்கிரசு பலமுள்ள தொகுதி. அதேபோல் கம்யூனிசுட்களுக்கும் ஓரளவு பலமுள்ள தொகுதி இது. ஆனால் கடந்தமுறை இவை எல்லாவற்றையும் மீறி மதிமுக கைப்பற்றி இருந்தது. கையை மக்கள் இவ்வூரில் கடந்த இரு தேர்தல்களில் மறந்திருந்தனர். தற்போது காங்கிரசு எசு கணேசன் நிறுத்தப்பட்டுள்ளார். முன்னால் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் உறவினர் கணேசன். தொகுதிக்கு புதுமுகம்!.

மதிமுகவின் தொகுதி. மக்களிடம் கலந்து பழகும் இயல்புடையவர் சிட்டிங் திருமலைக்குமார். இம்மாவட்டம் வைகோவின் மாவட்டம். செயாவின் மீதான மதிமுகவினரின் கோபம் நிச்சயம் இம்மாவட்டத்தில் எதிரொலிக்கும். அதிமுக, புளியங்குடி நகர் மன்றத் தலைவர் டாக்டர் எசு.துரையப்பாவை களமிறக்கியுள்ளது. கம்யூனிசுடுகளுக்கு கொடுத்திருந்தாலும் ஒருவேளை வெற்றிக்கிட்டலாம். மதிமுகவின் கோபம் கம்யூனிசுடுகளைப்பாதிக்காது. வார இதழ்களில் மதிமுகவால் பதிப்பில்லை என செய்திவரலாம் ஆனால் இம்மாவட்ட தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு ஒரு பாடமாக இருக்குமெனவே தோன்றுகிறது. களநிலை மீண்டும் இங்கு கை வந்துவிடும் சங்கை கணேசனால் எனச்சொல்கிறது.

2. சங்கரன் கோவில்:


சொ. கருப்பசாமி


உமா மகேசுவரி
திமுக: உமா மகேசுவரி
அதிமுக: சொ. கருப்பசாமி

திமுக சார்பில் முன்னால் மேயர் உமா மகேசுவரி போட்டியிடுகிறார். தமிழ்நாடு முழுவதும் சொந்த கட்சியிலிருந்து நிற்பவருக்கு போட்டி வேட்பாளரை நிறுத்தும் காங்கிரசு, திமுக உமா மகேசுவரிக்கு போட்டி வேட்பாளராக மாரிமுத்து என்பவரை நிறுத்தியிருக்கிறது. திமுகவின் செல்வாக்கு குறைவாக உள்ள தொகுதி.

அதிமுக வாக்கு வங்கி பலமான தொகுதி சொ.கருப்பசாமியின் சங்கரன்கோவில். தொடர்ந்து 3 முறை இத்தொகுதியில் வென்று வருகிறார் கருப்பசாமி. போன தேர்தலில் இம்மாவட்டத்தில் அதிமுக வென்ற ஒரே தொகுதி இது. (கூட்டணி மதிமுக ஒரு இடம் ஆக 11 தொகுதியில் 2 இடத்தில் அதிமுக கூட்டணி வென்றிருந்தது) தென் மாவட்டங்களில் சீட்டு வாங்கிய ஒரே அதிமுக அமைப்பு செயலாலர் இவர். இம்முறை இங்கு கருப்பசாமி தோற்றால் வைகோவின் செல்வாக்கு பளிச்சென புரிந்துவிடும் செயலலிதாவிற்கு. கலிங்கப்பட்டியுள்ள இத்தொகுதியில் வாக்குகள் சரியும் அபாயம் அதிமுகவிற்கு இருந்தாலும், புதிய தமிழகம் கட்சி செல்வாக்குள்ள தொகுதி, அது சரிவைச் சரிக்கட்டும். கருப்பசாமிக்கு இந்த முறையும் கெடா (தொகுதி) கிடைக்கலாம்.

3. தென்காசி:


வீ.கருப்பசாமி பாண்டியன்சரத்குமார்

திமுக : வீ.கருப்பசாமி பாண்டியன்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி : சரத்குமார்

தென்காசி அதிமுக பலமாக உள்ள தொகுதி. அரசியலில் நெடுநாள் அனுபவம் உள்ள (இருபெரும் கட்சிகளிலும்!) திமுக மா.செ. கருப்பசாமி பாண்டியன் சரத்குமாருடன் மோதுகிறார். தூத்துகுடி, நெல்லை ஆகிய‌ தென் மாவட்டங்களில் கட்சி மாறி வந்தவர்கள்தான் திமுகவில் மாவட்டச் செயலாளராக இருக்கின்றனர். வேட்பாளர்களில் முதன்மை இடமும் இவர்களுக்குத்தான். சொல்லி வைத்த மாதிரி இவர்கள் அனைவரும் ச்டாலினின் தீவிர ஆதரவாளர்கள் (கன்னியாகுமரி சுரேசுராசனும்தான்!). தென்காசியில் அதிசயமாக காங்கிரசு கருப்பசாமி பாண்டியனுக்கு ஆதரவாக இருக்கிறது. இவருக்கு ஆதரவாக பாக்கியராசிலிருந்து ச்டாலின் வரை வாக்குகேட்கிறார்கள். எதிர்முகாமில், வீடு வீடாகச் சென்று சரத்குமாரும் வாக்கு கேட்கிறார். அதிமுகவின் வாக்குவங்கியுள்ள தொகுதி. புதியதமிழகம் கட்சி செல்வாக்குள்ள தொகுதி. இசுலாமியர் வாக்குவங்கியும் உள்ள தொகுதி இது. இத்தொகுதியில்சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவிற்கே இதுவரை சாதகமாக இருந்துள்ளது. இம்முறை மனிதநேய மக்கள் கட்சி, அம்மாவுடன் கூட்டணியில் இருப்பதால் வாக்குகள் மாறிவிழலாம். தொகுதி மக்களுடன் தொடர்பில் இருப்பவர் கானா. இரட்டை இலைச் சின்னத்தில் சரத்குமார் நிற்பதும் இவருக்கு சரிவை ஏற்படுத்தும். எப்படியிருப்பினும் கருப்பசாமி பாண்டியனுக்கு வெற்றி இம்முறை சுலபமல்ல. மதிமுக வெல்ல சிறுதும் வாய்ப்பில்லாத இத்தொகுதியை மதிமுகவிற்கு ஒதுக்கினார் செயா கடந்தமுறை. மதிமுக தோற்றது. இப்போது சரத்குமாருக்கு ஒதுக்கி இருக்கிறார். நாடார் வாக்குவங்கியுள்ள ஆலங்குளத்தில் நின்றிருந்தால், சரத்திற்கு வெற்றி கிடைத்திருக்கும். சொற்ப வாக்கு வித்தியாசத்திலாவது கருப்புசாமி பாண்டியனுக்கு கிடைக்கும் தொகுதி.

4. கடையநல்லூர் :


பி. செந்தூர்பாண்டியன்


பீட்டர் அல்போன்சு
காங்கிரசு : பீட்டர் அல்போன்சு
அதிமுக : பி. செந்தூர்பாண்டியன்

கடந்த ஆட்சியில், காங்கிரசு இளங்கோவன் திமுகவிற்கு தலைவலியென்றால் (இப்பத்தான் கால்ல விழுந்தாச்சே??!!), கடயநல்லூர் சிட்டிங் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்சு திமுகவிற்கு அருமருந்து. இவருடைய செயல்பாடுகள் அனைத்தும் திமுககாரர்களுடந்தான். காங்கிரசின் பரப்புரை பீரங்கி, கெடக்கறதெல்லாம் கிடக்கட்டும், நவோதையா பள்ளிகள் தமிழகத்தில் வரவேண்டுமெனவும், சென்னை பொதுமருத்துவமனைக்கு ராசீவ் பெயர் இட வேண்டுமெனவும் குரல் கொடுத்த அல்போன்சு, தனக்கு சொந்தமாக ஒரு கலைக்கல்லூரியும், பொறியியல் கல்லூரியும் வைத்திருக்கிறார். ஆளுங்கட்சியின் அரவணைப்பில் பல நன்மைகளையும் செய்திருக்கிறார் என்றாலும் தொகுதிக்கு நலம் பயக்கும் பாதாள சாக்கடைத்திட்டம் நடைபெறாதது, மிகப்பெரிய பிரச்சனையான குடிநீர் தட்டுப்பாடு, குடிநீர் சாக்கடையோடு கலந்து கடந்த வருடம் பலர் இங்கு மாண்டது என பல பிரச்சனைகளும் உள்ளன. காங்கிரசின் உட்குழப்பங்களும் இவருக்கு அதிகம். தென்காசியில் இருமுறை நின்று வென்றவர். இம்முறையும் (கருப்பசாமி பாண்டியனுக்கு ஆப்பு வைத்து) அங்குதான் நிற்பதாக எதிர்பார்க்கப்பட்டது. தென்காசித் தொகுதியில் இவரது வீடு இருக்கும்போதே அங்கு எம்.எல்.ஏவான இவர் தொகுதிப்பக்கம் வந்ததேயில்லையென குறை கூறப்பட்டது. கடையநல்லூரில் எம்.எல்.ஏவாக இருக்கும்போது தென்காசியை விட்டுவெளியே அரசுவிழாவில் கலந்துகொள்ள மட்டும் வருகிறாராம். பின்ன 2 கல்லூரி, ச்பின்னிங் மில்லு எல்லாத்தையும் பாத்துக்கவேணாமா? இத்தொகுதியில் அதிகம் உள்ள இசுலாமிய மக்களுக்கு அரசு கல்லூரி வர வழிசெய்வேன் என போனமுறை கூறிவிட்டு அதைச் செய்யவில்லை. இந்த முறை இவரது வெற்றிவாய்ப்பு மதில்மேல் பூனை நிலைதான்.

இசுலாமியர்கள் அதிகம் கொண்டதொகுதியில் போனமுறை கமாலூதினை களமிறக்கித்தோற்ற அதிமுக இம்முறை பி.செந்தூர்பாண்டியனை நிறுத்தியிருக்கிறது. இவரும் பல ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு மக்களுக்கு அறிமுகமாகியுள்ளார். சிறுபான்மையினர் ஓட்டுகள் பீட்டர் அல்போன்சுக்கே சாதகமாக இருக்கும். முக்குலத்தோர் வாக்குவங்கியுள்ள தொகுதி இது எனவே அதிமுகவிற்கு இது நலம்பயக்கும். ஆனால் மதிமுக சிறிதளவு செல்வாக்குப்பெற்ற தொகுதியும்கூட. தற்போதைய களநிலையில் பீட்டரின் செயலின்மை அதிமுகவிற்கு சாதகமாக இருந்தாலும், இசுலாமியர்களின் ஓட்டை கொத்தாக அள்ள சோசியல் டெமாக்ரெட்டிக் பார்டி ஆஃப் இந்தியா (எசு.டி.பி.ஐ), நெல்லை முபாரக்கை களம் இறக்குகிறது. மமக (மனிதநேய மக்கள் கட்சி) அதிமுகவுடன் இருந்தாலும், எசு.டி.பி.ஐ தனித்து நிற்பதால் இரு பெரும் கட்சியும் இங்கு வெல்லத் திணறுவது உறுதி. இதுவரை இங்கு நடந்த தேர்தல்களில் இரு பெரும் கட்சி சார்பிலும் போட்டியிட்ட இசுலாமிய வேட்பாளர்கள் தோல்வியையே தழுவியுள்ளனர். எனவே முபாரக் இங்கு வெல்வது கடினம் எனவே தொன்றுகிறது. ஆனால் இவர் தோற்றால் ஓட்டை நன்றாக பிரிப்பார். மக்கள் மாற்றத்தை விரும்பினால் முபாரக் வெல்லவும் வாய்ப்புண்டு.


5. ஆலங்குளம்:


பி.சி. ராசேந்திரன்


பூங்கோதைதிமுக : பூங்கோதை ஆலடி அருணா
அதிமுக: பி.சி. ராசேந்திரன்

அமைச்சர் தொகுதி. பல வருடங்கள் லண்டனில் வசித்த, கடந்தமுறை முதன்முதலாக தேர்தலில் நின்ற மருத்துவர்.பூங்கோதையை அவரது தந்தை ஆலடி அருணாவின் கொலையால் ஏற்பட்ட அனுதாப அலை வெல்ல வைத்து அமைச்சராகவும் ஆக்கியது. அமைச்சராக இருந்த 5 வருடங்களில் பல சோதனைகள் இவரைச் சுற்றிவந்தது. தொலைபேசி இவருக்குதான் உண்மையிலேயே தொல்லைபேசி. மீண்டும் இவருக்கு சீட் கிடைக்காதென்றே பலரும் கூறினார்கள். ஆனால் இவரின் நட்பிடம் (உறவிடம்?) மிகவும் சக்திவாய்ந்தது. மீண்டும் நிற்கிறார் இங்கு. தொகுதிக்கும், மாவட்டத்தில் கட்சிக்கும் இவரால் நன்மையேதுமில்லை என்கிறார்கள் மக்கள். நாடார் வாக்குவங்கி மட்டுமே பூங்கோதைக்கு சாதகமானது.


2001 ல் இங்கு வென்ற பி.சி.ராசேந்திரனை மீண்டும் களமிறக்குகிறது அதிமுக. பி.சி.ராசேந்திரன் பூங்கோதையின் அப்பாவையே இங்கு தோற்கடித்தவர். அதுவுமில்லாமல் தேமுதிக போனமுறை வாக்குகளைப் பிரித்தது அதிமுக தோற்க காரணமாய் இருந்தது. இம்முறை அதிமுக சுறுசுறுப்பாக இருக்கிறது இங்கு. பி.சி.ராசேந்திரன் மீண்டும் பிசியாகலாம்.

6. திருநெல்வேலி:


நயினார் நாகேந்திரன்ஏ.எல்.எசு.லெட்சுமணன்

திமுக: ஏ.எல்.எசு.லெட்சுமணன்
அதிமுக: நயினார் நாகேந்திரன்

நெல்லை இருபெரும் கழகத்தையும் மாறி, மாறி ஆதரிக்கும் ஊர். சிட்டிங் மாலைராசா போட்டியிடவில்லை. மக்களுடன் சேர்ந்து தொகுதிக்காக திமுக அரசை கண்டித்து போராடும் ஆள், அழகிரியின் ஆதரவாளர் மாலைராசா, எப்படி கிடைக்கும் சீட்டு? மேயர் சுப்ரமணியன் நினைத்தபடி தன் மகன் ஏ.எல்.எசு.லெட்சுமணனுக்கு இத்தொகுதியில் சீட் வாங்கிவிட்டார். கட்சிமாறி வந்தவர்களுக்கே வாய்ப்புள்ள தென் மாவட்டங்களில் (மதுரை தவிர), மகனுக்கு கட்சிப்பதவி, தேர்தலில் இடமும் வாங்கிவிட்ட திமுககாரர், மேயர்!. லேட்சுமணனை வெல்லவைக்க திமுக பம்பரமாக சுழலும்!. முதல் முறையிலேயே கடும் போட்டி இவருக்கு.

முக்கால்வாசி அதிமுக அமைப்பு செயலாலர்கள் சீட் இல்லாமல் நொந்துகிடக்க, தென்மாவட்டங்கள் பலவற்றில் செ பேரவைச் செயலாலர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அமைப்பு செயலாலர் பொறுப்புனாலே அமைதியா 5 வருடதிற்கு வீட்டில இருன்னு அர்த்தம்போல!. நாயினாருக்கு சீட்டு கிடைத்த உடனேயே கூட்டமாக அதிமுகவில் மக்கள் இணைகிறார் என்ற படங்காட்டலும் ஆரம்பமாகிவிட்டது (கட்சியில் மீண்டும் மாவட்டச் செயலாலர் ஆக ஆயத்தமோ?). இவர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு போடப்பட்டது. அனிதா, செல்வகணபதி போல் திமுகவை நாடும் மனநிலையில்தான் இருந்தார் நாயினார். மாநிலத்தில் அதிமுக தோற்றால், நாயினார் வென்றாலும், தோற்றாலும் திமுகவிற்கு கட்சிமாறுவார். கட்சியை நெல்லையில் பலப்படுத்த பாப்புலர் முத்தையாவையும் (சீட்டில்ல இவருக்கு??!!) தூத்துகுடியில் நாயினாரையும் நம்பியிருக்கிறார் செ. ஆனால் ஆளுங்கட்சி மற்றும் லெட்சுமணனின் சுறுசுறுப்பு. நெல்லையில் உள்ள பிள்ளைமார் வாக்குவங்கி எல்லாம் லெட்சுமணனுக்கு சாதகமாகவே உள்ளது.

7. அம்பாசமுத்திரம்:


இரா.ஆவுடையப்பன்


இசக்கி சுப்பையா
திமுக : இரா.ஆவுடையப்பன்
அதிமுக: இசக்கி சுப்பையா

சபாநாயகர் தொகுதி. ஆவுடையப்பன் இம்முறை தன் வாரிசை களமிறக்குவார் என்ற எதிர்பார்ப்பிருந்தது. ஆனால், அவரே மீண்டும் 4 வது முறையாக போட்டியிருகிறார். 2முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றவர். ஒருமுறை தோற்றதும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான்.

அதிமுக செ பேரவை இணைச்செயலர் இசக்கி பாண்டியனை நிறுத்தியுள்ளது. முதன்முறை களம் காண்கிறார் இசக்கி. முக்குலத்தோர் வாக்குவங்கியுள்ள தொகுதியில் இரு கழகங்களும் வாக்குகளை அள்ளும் வகையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இங்கு உண்மை போட்டி அமைச்சர் ஆவுடையப்பனின் மகன் பிரபாகரனுக்கும், இசக்கி பாண்டியனுக்கும்தான். ஆவுடையப்பனுக்கே மீண்டும் அம்பாசமுத்திரம் என்கிறது களநிலை.

8. பாளையங்கோட்டை:

டி.பி.எம்.மைதீன்கான்பழனி
திமுக : டி.பி.எம்.மைதீன்கான்
கம்யூனிசுடு (மா) : பழனி

பாளயங்கோட்டை, இசுலாமிய மக்களின் கோட்டை. அமைச்சர் மைதீன்கானின் தொகுதி. மக்களுடன் எளிமையாகப் பழகுபவர் மைதீன்கான். கடந்தமுறை முசுலீம் லீக்கின்(அவர்கள் வேட்பாளரை தேர்வு செய்ய இயலாலததால்) தயவில் இவர் இங்கு எம்.எல்.ஏ ஆகவும், தொகுதியை தனக்கு தக்க வைக்க திமுக இவரை அமைச்சராக்கியது. இம்முறை பாளையில் ச்டாலின் நின்றாலும் நிற்பார். முசுலீம் லீக் விட்டுத்தாரவே தராது என்று மனம் கலங்கி கிடந்தார் அமைச்சர். எல்லாவற்றையும் மீறி திமுக இவரை நிறுத்தியுள்ளது. முதல் முறை இங்கு மார்க்சிய பொதுவுடமை கட்சி களம் காணுகிறது. பொதுவுடமை வாக்குவங்கி குறைவாக உள்ளதொகுதி. அதிமுக போனமுறையும் இத்தொகுதியை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்திருந்தது. இம்முறையும் மைதீன்கான் வெல்லும் வகையில் மார்க்சிய பொதுவுடமை கட்சிக்கு கொடுத்திருக்கிறது. பழனி வெல்வது இங்கு கடினமே. அன் அப்போசுடாக வென்ற மாதிரி வெல்வார் மைதீன். பாளை மீளும் மைதீன்கானுக்கு .

9. நாங்குநேரி :


எர்ணாவூர் நாராயணன்


வசந்தகுமார்காங்கிரசு : வசந்தகுமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி: எர்ணாவூர் நாராயணன்

சிட்டிங் எம்.எல்.ஏ தொழில் அதிபர் வசந்தகுமார் இலவசமாக மாணவர்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகள், போட்டிகள் வைத்து தன் உருவம் பொறித்த பரிசுகள், காலண்டர்கள் வழங்கல், சோனியாவின் பிறந்த நாளுக்கு காங்கிரசுக்காரர்களுக்கே கதர் துண்டு கொடுத்தல் என இலவசத்தால் மதிமயக்கும் காங்கிரசுகாரர் இவர். போன தேர்தலில் இவர் சொன்னது எதையுமே செய்யவில்லை. வாழைக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலையும், தகவல் தொழிற் நுட்ப பூங்காவும் இவர் போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள். தேர்தல் பிரச்சாரதிற்கு மட்டும் தொகுதிப்பக்கம், தப்பித்தவறி வென்றுவிட்டால் டெல்லி, சென்னை என இருக்கும் காங்கிரசுகாரர்களின் வழக்கதிலிருந்து சிறிதும் மாறாத ஆளு வசந்தம். ஓட்டுப்போட்டவன் எக்கேடு கெட்டா என்ன? நாம எம்.பியாகி டெல்லிக்குச் சென்று விடலாம் என பலவகையில் முயற்சித்தார். ஆனால் அது நடக்கவில்லை. எம்.பி ஆயிருந்தா நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கும் (நாடு, நாட்டுப்பற்றுன்னு நடித்து இருப்பவனையெல்லாம் கொடியேற்றி முட்டாயி திங்கவச்சிட்டு, இவர்கள் வியாபரம் பெருக்கிகொள்ள தேர்ந்தெடுத்த மக்களைப் புறக்கணித்து டெல்லி செல்வார்களாம்! நாட்டுப்பற்று புகழ் கதர்சட்டைகள் தொகுதிப்பற்றுடன் கூட இருப்பதில்லை!!) வென்றதிலிருந்து தொலைக்காட்சி வசந்த் அன் கோ விளம்பரங்களில் மட்டும்தான் நாங்குநேரி வீடுகளுக்கு வருகிறார். வசந்த் டிவி (கலைஞர் டிவி மாதிரி!) தனக்கென வைத்துக்கொண்டதுதான் இந்த ஆட்சியில் இவர் செய்த சாதனை. 'என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது' என்ற வசனத்தைப்போல, வசந்தகுமார் சட்டசபையில் எழுப்பிய கோரிக்கை "வியாபாரிகளை விற்பனை வரி அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது" என்பதுதான்.

மாணிக்கராசு, சூர்யகுமாரு போன்ற அதிமுகவினர் கலங்க, இத்தொகுதியை சரத்குமார் கட்சிக்கு கொடுத்திருக்கிறது அதிமுக. அதிமுகவினர் கண்டிப்பாக இவ்வேட்பாளருக்கு ஆதரவாக வேலைசெய்ய மாட்டார்கள். முக்குலத்தோர் வாக்குவங்கியுள்ள ஊர். நாடாளுமன்றத்தொகுதியில்தான் நாடார் வாக்குவங்கியுள்ளது. அதிமுக, தேமுதிக கூட்டணி இருப்பதால் அதிமுகவின் அடிப்படை (முக்குலத்தோர்) ஓட்டுகள் பிரியவாய்பில்லை, அதிமுகவினர் இங்கு நின்றிருந்தால் இம்முறை கண்டிப்பாக வென்றிருக்கலாம். அடுத்த மாவட்டத்திலயே காங்கிரசு வேட்பாளருக்கு குழப்பம் உண்டு செய்யும் பழக்கத்தை உடையவரு நெல்லையைச் சேர்ந்த காங்கிரசு தனுக்கோடி ஆதித்தன். இவருக்கு எம்.பி சீட்டை மறுத்துவிட்டது காங்கிரசு தலைமை! அப்போது எம்.பி.சீட் கேட்டு குழப்பம் விளைவித்த வசந்தகுமாரை சும்மாவிடமாட்டாரு தனுக்கோடி. இது நாராயணனுக்குச் சாதகமாக அமையும். நடிகர் அசீத் "கலைஞர் மேடையில்" பேசிய பிரச்சனையில், நாராயணன் சவுண்டு விட்டதில் அனைவருக்கும் தெரிந்தமுகமாகிவிட்டார். சரத்குமார், விசயகாந்த் இரு நட்சத்திரங்களும் இணைந்து பரப்புரை செய்தால் வசந்தகுமாரின் குறைகள் எர்ணாவூர் நாராயணனனை வெல்லவைக்கலாம்.

10. ராதாபுரம்:


மைக்கேல் எஸ்.ராயப்பன்


வேல்துரை

காங்கிரசு : வேல்துரை
தேமுதிக:மைக்கேல் எஸ்.ராயப்பன்

வேல்துரை தொடர்ந்து இருமுறை சேரன்மாதேவி எம்.எல்.ஏவாக இருந்தவர், அத்தொகுதி மறுசீரமைப்பில் பறிபோனதால் ராதாபுரத்தில் எப்போதும் நிற்கும் அப்பாவுவிற்கு ஆப்படிக்கப்பட்டுவிட்டது. காங்கிரசிலேயே இருந்திருக்கலாமே, கலைஞரின் பெற்றோருக்கு சிலை வச்சும் பயனில்லையே என நொந்து போயிருப்பார் (சிலைவைத்தபோது கண்டிப்புதான் இவருக்கு பரிசாக கிடைத்தது). இந்தத் தொகுதி வேறு ஒரு கட்சிக்குப்போனால் கூட்டணியில் இருந்தாலும் சுயேட்சையாக ஆட்களை நிற்க வைக்கும் காங்ரகிரசு. கடந்தமுறை செல்வராஜ் என்பவர் இப்படி நின்றார். இம்முறை காங்கிரசிடம் தொகுதி இருக்கிறது. தனுக்கோடி ஆதித்தனின் ஆதரவாளர்கள் இங்கு காங்கிரசுக்கு உழைப்பார்கள். ஏன், பழைய காங்கிரசுகாரரான‌ அப்பாவுவின் ஆதரவாளர்கள் உழைத்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. போனமுறை சேரன்மாதேவியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வேல்துறை வென்றார். ஆனால் பல நலத்திட்டங்களை அங்கு செய்திருக்கிறார். எப்படியோ அதிமுக பி.எச். பாண்டியனின் பகையில் இருந்து தப்பி ராதாபுரத்தில் நிற்கும் இவர் இத்தொகுதிக்கு புதுமுகம் மாதிரிதான். மணல் கொள்ளை அதிமுக ஆட்சியில் தொடங்கி திமுக ஆட்சியில் தொடர்ந்த இழிகேடு! இந்த எம்.எல்.ஏவின் கையும் அதிலிருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் ராதாபுரத்தில் இதை பரப்புரை செய்தால் மட்டுமே மக்களுக்குத் தெரியும்.

நடார் வாக்குவங்கியுள்ள தொகுதி இது. சரத்கட்சிக்கு இவ்விடத்தைக் கொடுத்திருக்கலாம். மீனவர் ஓட்டுகள் இம்முறை ஆளுங்கட்சிக்கும், காங்கிரசுக்கும் சாதகமாக இருக்காது. நாம் தமிழர் தோழர்கள் பரப்புரை செய்தபோது இங்குள்ள உவரியைச் சேர்ந்தோர் காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவதில்லையென உறுதிசெய்துள்ளனர். "ராதாபுரம் தொகுதியில் மக்கள் விருப்பமான இடத்தில் காமராஜர், கக்கன் சிலைகளை எனது சொந்த செலவில் அமைப்பேன்" என காங்கிரசு ஓட்டை கவரும்வகையில் பிரச்சாரம் செய்கிறார் மைக்கேல் எஸ்.ராயப்பன். கில்லாடிதான்!. இப்படி இங்கு நிற்கும் காங்கிரசு வேல்துரை கூட சொல்லவில்லை. நெல்லை நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிட்டு 94,000 வாக்குகள் பெற்றவர் மைக்கல். ஆனால் இவரது தொழில், தொடர்புகள் எல்லாம் மும்பையில்!. திரைத்துறை சார்ந்தவர். தாமிரபரணி நதியை பாதுகாக்க நடைபயணம் செய்து மக்கள் பிரச்சனையில் அக்கரை இருப்பதாக இம்மாவட்டதில் தேமுதிக காட்டியுள்ளது. ஆனால் இத்தொகுதி மக்கள் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் ஓட்டுப்போட்டு பழகிவிட்டார்கள். வேறு ஒருவர் இங்கு வந்தால் அது நிச்சயம் சாதனைதான். தொகுதி தற்போது வேல்துறைக்கு சாதகம்.

நெல்லையில் கடந்தமுறை அதிமுக ஒரு இடத்தில் (சங்கரன் கோவில்! சொ.கருப்பசாமியால் என்றாலும், வைகோவின் சொந்த ஊர் கலிங்கப்பட்டியுள்ள தொகுதி இது. மதிமுகவின் வாக்கும் சேர்ந்துதான் இந்த ஒரு இடத்தை அதிமுகவிற்கு பெற்றுத்தந்தது.)மட்டுமே வென்றது. இன்னொரு இடம் வாசுதேவ நல்லூர் அதில் அப்போதைய கூட்டணிகட்சியான மதிமுக வென்றது. 2001 தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்டு 10 இடத்தில் வென்றது அதிமுக. ஆனால் 2006 ல் 2 இடம் மட்டுமே அதிமுக கூட்டணிக்கு. அதேபோல் திமுக 2001ல் இங்கு காணாமல் போயிருந்தது, 2006 ல் 9 இடங்களைப் பெற்றது திமுக கூட்டணி. 2001 ஆ? 2006 ஆ? என‌ இருகழகங்களும் திணறி நிற்கிறது நெல்லைமாவட்டத்தில். 2 (4 இடத்தில் போட்டியிடுகிறது) இடம் காங்கிரசுக்கு இம்மாவட்டத்தில் கிட்டும் என களநிலை கூறுகிறது. காங்கிரசை கடும் பரப்புரை மட்டுமே இங்கு வீழ்த்த இயலும்.

அதிமுக தேர்தலுக்கு சற்றுமுன்னர் நிர்வாகிகளின் பொறுப்புகளை மாற்றியதும், மதிமுக கூட்டணியில் இல்லாததும் நிச்சயம் இங்கு அதிமுகவிற்கு பாதிப்புகளை உண்டாக்கும். நெல்லையில் நாயினார் வென்றால் மகிழ்ச்சியே, ஆனால் அவர் தோற்க வேண்டும் என்பதற்கே திமுக மா.செ களமிறக்கப்பட்டுள்ளார். மைதீன்கான் அவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே பொதுவுடமை வேட்பாளர் (நிச்சயம் தோற்பார் எனத் தெரிந்து) நிறுத்தப்பட்டுள்ளார். ராதாபுரம் பலமான காங்கிரசு தொகுதி இங்கு மாற்றத்தை மக்கள் விரும்பினால் தேமுதிக வெல்லலாம். தற்போதைய நிலையின்படி, இம்மாவட்டம் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறதென்பதே களநிலை.


வெல்லும் வாய்ப்பு

திமுக கூட்டணி - 6 இடங்கள்
அதிமுக கூட்டணி - 3 இடங்கள்
மற்றவை ‍- 1 இடம்

Thursday, March 31, 2011

குமரி மாவட்டம் - 2011 - தேர்தல் களநிலை


மானமுள்ள காங்கிரசுகாரர் குமரி தமிழகத்துடன் இணையப் போராடிய ஐயா. மார்சல் நேசமணி. நன்றி: படம்: http://www.thengapattanam.net

குமரி மாவட்டம்: மொத்தம் 6 தொகுதிகள்.

1.கிள்ளியூர் 2.விளவன் கோடு 3.பத்மனாபபுரம் 4.குளச்சல் 5.நாகர்கோவில்
6.கன்னியாகுமரி.

குமரி மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பில் திருவெட்டாறு (கம்யுனிசுடு கோட்டை, காங்கிரசு வாக்குவங்கியுள்ள இடம்) தொகுதி நீக்கப்பட்டுள்ளது.

1. கிள்ளியூர்:


சான் சேக்கப்


ஆர். சார்ச்

காங்கிரசு : சான் சேக்கப்
அதிமுக : ஆர். சார்ச்

காங்கிரசு சிட்டிங் எம்.எல்.ஏ, 'கூட்டணி ஆட்சி என்பதை முதலில் அறிவித்துவிட்டு தொகுதி பங்கீடு குறித்துப் பேசலாம்' என காங்கிரசுக்கு யோசனை சொன்னவர் சான் சேக்கப். காங்கிரசு மிகப்பலமாக உள்ள தொகுதி இது. இளைஞர் காங்கிரசு தேர்தலின் போது (கன்னியாகுமரி(கி) மாவட்டத்தலைவராக இருந்த) ஜெயபாலின் மருமகனை எதிர்த்து இவர் போட்டி வேட்பாளரை நிறுத்தி ஏற்படுத்திய குழப்பம் இவர் ஆதரிக்கும் வாசன் ஆதரவாளர்களிடமே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போனமுறை சித்தமருத்துவர் குமாரதாசு அதிமுக சார்பில் இல்லாமல், காங்கிரசு சார்பில் நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார். இப்போது காங்கிரசில் அடைக்கலம் ஆகி இருக்கும் குமாரதாசு, சான் சேக்கப்பிற்கு எதிராக போட்டி வேட்பாளராக நிறுத்தப்படுவார். அப்படி நடந்தால் காங்கிரசு ஓட்டுக்கள் நிச்சயம் பிரியும். இவர் மட்டுமல்லாது இளைஞர் காங்கிரசின் கோபமும் சான் சேக்கபிற்கு தலைவலியாகவே இருக்கும்.

கிள்ளியூர் ஒ.செ. சார்ச் இங்கு நிற்கிறார். அதிமுகவிற்கு இங்கு வாக்குவங்கி மிக, மிகக் குறைவு! காங்கிரசின் சண்டைகள் மட்டுமே இவருக்கு சாதகமானது. தற்போதைய நிலவரப்படி களம் சான் சேக்கப்பிற்கு சாதகம்.


2. விளவன் கோடு:


லீமாரோசு


விசய தரணி


காங்கிரசு : விசய தரணி
கம்யூனிசுடு(மா) : லீமாரோசு

இரு பெண்கள் மோதும் தொகுதி விளவங்கோடு. விசயதரணி டெல்லி உயர்நீதி மனறத்தில் வழக்கறிங்கராக பணிபுரிபவர். கம்யூனிசுடு, காங்கிரசு கூட்டணியில் இருந்தபோது கம்யூனிசுடு வென்றது. இந்திய அளவில் பதவி வகித்தாலும், தொகுதிக்கு புதுமுகம் இந்த சட்டத்தரணி, விசய தரணி. மயிலாடி சேந்தன்புதூரில் பிறந்தவர், முதன்முறை களம் காண்கிறார். டெல்லியிடம் இருந்து, மணிசங்கரின் ஆதரவில், நேரடியாக போட்டியிடும் வாய்ப்பை பெற்றுவந்துவிட்டதால், சியாம் கிறிசுதுகுமாரை இங்கு போட்டி வேட்பளாராக களமிறக்குகிறது காங்கிரசு.

மார்க்சிய பொதுவுடமை கட்சி சிட்டிங் சான் சோசப்பிற்கு சீட்டில்ல!. அதனால் இவர் போட்டி வேட்பாளராக விண்ணப்பிக்க, கட்சியவிட்டே நீக்கிபுடிச்சு கட்டுப்பாட்டுக்கு பேர் போன மார்க்சிய கம்யூனிசுட்டு! திருவெட்டாரு தொகுதியில் கடந்தமுறை நின்ற லீமாரோசு விளவன்கோட்டில் நிற்கிறார். அப்போது அவர் புதுமுகம். இப்போது தொகுதி நன்கறிந்த முகமாகிவிட்டார் லீமாரோசு. சான் சோசப் தனித்து நின்றால் இவருக்கு வாக்குகள் பிரியும் நிலையுள்ளது. காங்கிரசு உட்பூசல் லீமாரோசை இங்கு உட்காரவைக்கும்.

3. பத்மனாபபுரம்:


எசு.ஆசுடின்


புஷ்பலீலா ஆல்பன்

திமுக: டாக்டர் புஷ்பலீலா ஆல்பன்
தேமுதிக: எசு.ஆசுடின்

சிட்டிங் தியோடர் ரெசினால்டுக்கு சீட்டில்லை. 1996ல் திருவெட்டாறில் திமுக சார்பாக வென்ற மறைந்த ஆல்பன் அவர்களின் மனைவி புஸ்பலீலா பத்மனாபபுரம் தொகுதியில் நிற்கிறார். இவர் திமுக துணை மாவட்டப் பொதுச்செயலாலருங்கூட.

எசு.ஆசுடின், அதிமுகவில் இருந்து பின்னர் எம்.சி.ஆர்.அதிமுக கட்சிக்கு சென்று, மீண்டும் அதிமுகவில் இணைந்து பின் நாகர்கோவிலில் சுயேட்டையாகவே நின்று ஒருமுறை வென்று, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்று, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் (நாகர்கோவில்) தேமுதிக சார்பாக நின்று 68,472 வாக்குகள் பெற்றார். நாகர்கோவில் தொகுதியை இவருக்காக பெற்றுருக்கலாம் தேமுதிக. பாசக-பொன் ராதாகிருட்டினன் அங்கு நிற்பதைப் பார்த்து பயந்துவிட்டார்களோ?

தேமுதிக கடந்த தேர்தலில் இங்கு பெற்ற வாக்குகள் 3,360. அதிமுக 20,546 இந்த இருகட்சிகளின் வாக்கையும் கூட்டினால் உச்சாணியில் ஏறிவிடும் அதிமுக என்று கணித்தார்களே சிலர், இங்கு வெறும் 23,906 வாக்குகள் வருகிறது. கம்யூனிசுடு வாக்கு இருக்கிறதே அதிமுகவிற்கு என்றால், காங்கிரசு வாக்கு வங்கியுடன் திமுக சேர்ந்து பெற்ற வாக்குகள் 51612. ஆசுடின் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கில் வென்றால்தான் உண்டு. பாசக ஓட்டைப்பிரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் கூடுதல் ஓட்டுகள் பெற்றிருக்கலாம். இந்தமுறையும் ஓட்டைப்பிரிக்க சுசித் என்பவரை நிறுத்துகிறது பாசக. தனிப்பட்ட செல்வாக்கு இங்கு ஆசுடினை அமர வைக்கலாம்.

4. குளச்சல்:

காங்கிரசு: செ.செ.பிரின்சு
அதிமுக: பி. லாரன்ஸ்

ராபர்ட் புரூசு அறிவிக்கப்பட்டு, இளைஞர் காங்கிரசு தங்கபாலுவிற்கு எதிராக நடத்திய கடும் போராட்டத்தால் தற்போது பிரின்சு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். குளச்சலில் ஜெயபாலின் உறவினர்கள் யாரேனும் நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. உட்கட்சி பூசலில் இங்கும் அசோகன் சாலமன் சுயேட்சையாக நிறுத்தப்படலாம். இருப்பினும் இப்போது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதால், இவரை வெல்ல வைக்க காங்கிரசு எல்லா வேலையையும் செய்யும்.

பி. லாரன்ஸ் புதுமுகம் நிற்கிறார். குளச்சலில் மீன்பிடி துறைமுகம் வருது என அடிக்கல் நாட்டினார்கள் இதோ வந்துவிட்டது என போக்குகாட்டிக்கொண்டிருந்தனர் தேர்தல் வந்துவிட்டது! போனமுறை இத்தொகுதியில் போட்டியிட்டு தோற்ற பச்சைமால் இம்முறை கன்னியாகுமரியில் நிற்கிறார். அதிமுக மாசெவே தோற்ற தொகுதி. பிரின்சுக்கு சாதகமாக தற்போதைய களநிலையுள்ளது.

5. நாகர்கோவில்


ஆர்.மகேசு


திமுக : ஆர்.மகேசு
அதிமுக: நாஞ்சில் ஏ. முருகேசன்

சிட்டிங் ஏ.ராசன் இல்லாமல் வழக்கறிஞர் ஆர்.மகேசு நிறுத்தப்பட்டுள்ளார். நாடார் வாக்குவங்கி வெற்றியைத் தீர்மானிக்கும் தொகுதி. கிருத்துவமக்கள் வாக்குவங்கியுள்ள இத்தொகுதியில் பரபரப்பாக தன் பரப்புரையையும் 'ஆயாரிடம் ஆசி' என ஓட்டை அள்ள ஆயத்தமும் செய்துவருகிறார் மகேசு. சிட்டிங் ராசன் தொகுதிக்கு செய்தவை இவருக்கு மிக சாதகம்.

கடந்த முறை மதிமுகவசம் இருந்த இத்தொகுதியில் இம்முறை அதிமுக நாஞ்சில் ஏ. முருகேசன் நிற்கிறார். மிகத்தீவிர வாக்குவேட்டையில் இருக்கிறார் முருகேசன். ஆனால் பாசக பொன் இராதாகிருட்டிணன் அதிமுக ஓட்டைப்பிரிக்க இத்தொகுதியில் நிற்கிறார். அதிமுகவிற்கு இங்கு மூன்றாவது இடம்தான் போட்டி திமுகவிற்கும் இராதாகிருட்டிண்னுக்கும்தான். அதிமுகவினரின் உற்சாக உழைப்பு, முருகேசனுக்கு மக்கள் வரவேற்பு அனைத்தும் வெகுவாக இருந்தாலும் இங்கு திமுகவினருக்கே களநிலை சாதமாக உள்ளது. ஆர்.மகேசு இங்கு வெல்ல வாய்ப்பதிகம்.6.கன்னியாகுமரி:


என்.சுரேசுராசன்


பச்சைமால்திமுக: என்.சுரேசுராசன்
அதிமுக: பச்சைமால்

அமைச்சர் தொகுதி. எப்போதும் தளவாய் சுந்தரமும் சுரேசுராசனும் மோதுவார்கள். ஆனால் கடந்தமுறை குளச்சலில் போட்டியிட்டுத் தோற்ற பச்சைமால் அதிமுகவில் நிற்கிறார். இரு முறை இங்கு வென்ற‌ சுரேசுராசன், இம்முறை வென்றால் மீண்டும் அமைச்சராகலாம். அழகிரியின் மகள் கயலால் பிரச்சனை, வருமானதிற்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததால் பிரச்சனை, தொகுதி மாறி நிற்பார் என என்னன்னமோ பத்திரிக்கைகள் எழுதின. அனைத்தையும் மீறி நிற்கிறார் இங்கு சுரேசுராசன்.

பாசக சார்பில் ஆர்.காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் அதிமுக ஓட்டை நன்றாக பிரிப்பார். பச்சைமால் தொகுதிமாறி நிற்பதால் வெற்றிவாய்ப்பு குறைவுதான். தளவாயின் ஆதரவாளர்களின் வாட்டமும் இவருக்கு மைனசு. தொகுதி மறுசீரமைப்பில் அதிமுகவிற்கே இத்தொகுதி வெல்ல வய்ப்புள்ள தொகுதி. தளவாய்சுந்தரம் நின்றிருந்தால் இத்தொகுதியின் வெற்றி உறுதி அதிமுகவிற்கு. 1 இடம் மாவட்டத்தில் கிடைத்திருக்கும். தற்போது காற்று சுரேசுராசன் பக்கம் அடிக்கிறது.

திமுக குமரியில் வழுவாக காலூன்றிவிட்டது. இத்தேர்தலில் அது எதிரொலிக்கும். இலவசத்திட்டங்கள்(மதி மயக்கும் விடம்!) பல முழுமையாக இம்மாவட்டதிற்கு போய் சேர்ந்திருக்கிறது. ஆறு தொகுதியின் எம்.எல்.ஏக்கள் திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ளோர். வரலாறுகாணத வகையில் எம்.பியும் திமுக எம்.பி. மாநாடெல்லாம் நடத்தி குமரியை குளிர‌வைத்தது திமுக.

தூத்துகுடியில் அதிமுகவில் பரவிய கட்சித்தாவல் என்ற மர்மக்காய்ச்சல், கன்னியாகுமரியில் மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது ஆதரவாய் அதிமுகவை ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தது. உலக அதிசயமாய் தொடர்ந்து 2 வாரத்திற்குள் இருமுறை இங்கு வந்தார் செயலலிதா. ஆனால் என்ன பயன்? தளவாய் சுந்தரதிற்கு சீட் இல்ல. மா.செ பச்சைமால் இருக்கும்போது அமைப்பு செயலாலர், கடந்த தேர்தலில் தோற்ற தளவாய்க்கு கொடுக்கமுடியாதுதான். ஆனால் பச்சைமாலும் தோற்றவர்தானே?. பிற அதிமுக வேட்பாளர்களும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

குமரிமாவட்டம் பொதுவாக காங்கிரசு, கம்யூனிசுடுகளின் கோட்டை! ஆனால் காங்கிரசின்
கோச்டி அரசியல் இம்மாவட்டத்தில் அதிகம். தங்கபாலுவை தலைவராக இம்மாவட்ட காங்கிரசு நிர்வாகிகள் நினைத்ததேயில்லை. அதேபோல தங்கபாலுவும் அதிகமுறை இம்மாவட்ட நிர்வாகிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
குமரி மாவட்டக் காங்கிரசுகாரர்களுக்கு வாசன்தான் தலைவர், எவர் தமிழ்நாடு காங்கிரசு தலைவராக இருந்தாலும். இளைஞர் காங்கிரசு தேர்தலின் போது மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரித்தொகுதி பறிபோனதால் இங்கு காங்கிரசார் ஏற்படுத்திய குழப்பங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நினைத்துப்பார்த்தால் கரைவேட்டிகளை மிஞ்சிவிட்டது காங்கிரசு!. கடந்த 5 வருடங்களில், காங்கிரசுகாரர்கள் மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் செய்ததைவிட, சத்தியமூர்த்திபவன் முன்னால்தான் அதிக ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள்.. இப்போதும் வேட்பாளர் தேர்வைக் கண்டித்து மாணவர் காங்கிரசு, இளைஞர் காங்கிரசில் உள்ளோர் தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் நாகர்கோவிலில். கைராட்டையைக் காட்டி நூல் திரிக்கும் காங்கிரசுக்கு நல்ல வழித்தோன்றல்கள்!! இம்முறை மார்க்சிய பொதுவுடமை அதிமுக கூட்டணியில் இருப்பதும், காங்கிரசு 5 ஆண்டுகள் கோச்டி அரசியலால் செய்த ஆர்ப்பாட்டங்களும், தொடர்ந்த பரப்புரைகளும் மாற்றத்தை தரலாம். காங்கிரசு வெல்லும் தொகுதி என இங்கு எழுதியிருப்பது களநிலைகொண்டே. ஆனால் காங்கிரசு தோற்கவேண்டும்!. பக்கத்து ஊர்ல பொதுவுடமை ஆட்சி இம்மாவட்டதில் கம்யுனிச கட்சி வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் எதிரொலிக்கும். காங்கிரசு வெல்லும் வாய்ப்புள்ள தொகுதி என‌ மக்கள்மேல் அக்கரையுள்ளோர் அதிக பரப்புரைசெய்யவே இங்கு சொல்லப்பட்டுள்ளது.

போட்டியிடும் இடங்கள்:
திமுக கூட்டணி
காங்கிரசு 3 இடம்
திமுக 3 இடம்

அதிமுக கூட்டணி
அதிமுக 4 இடம்
பொதுவுடமை (மா) 1 இடம்
தேமுதிக 1 இடம்

திமுக கூட்டணி 4 இடமும், அதிமுக கூட்டணி 2 இடமும் வெல்லவே இம்மாவட்டத்தில் வாய்ப்பிருக்கிறது. காங்கிரசை மக்கள் ஒருகை பார்த்தால். அதிமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லலாம்.

Sunday, March 27, 2011

தமிழக தேர்தல் அலசல் 2011தமிழ்மக்கள் மனம் ஆறா வேதனையில் இருந்தபோது நடந்தது நாடாளுமன்றத்தேர்தல். மக்களைப் பற்றி கவலைகொள்ளாத, ஆனால் அக்கரையிருப்பதுபோல் கட்டிக்கொள்ளும் பெரியகட்சிகளில், திமுக நாடாளுமன்றத் தேர்தலை தன் இயலாமையையும், இன அழிப்பிற்கு துணைபோன துரோகத்தை மக்கள் மறக்க ஒரு சாக்கு என்ற நினைப்பில் சந்தித்தது. அதிமுக அத்தேர்தலில் அதிக இடம் பெற்றால் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற கணக்கில் இருந்தது. மக்களுக்காக கதறிகொண்டிருந்த சிறிய கட்சிகளோ திடிரென காட்சியை மாற்றி, தங்களது கட்சியின் அரசியல் வாழ்விற்கென பெரிய கட்சிகளை நோக்கி ஓடின. எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்தது தொகுதிப் பங்கீடுகள், பேரங்கள், தேர்தல் நாடகம், குடும்பத்தினர் பதவிபெற பவர் புரோக்கர்களுடன் தொலைபேசி கலந்துரையாடல்கள், பதிவியேற்புகள்!. எவ்வளவு கேடு கெட்டதாய் தமிழக அரசியல் மாறி இருக்கிறதென, நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கிரது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் எவனுக்கும் பங்குவைக்காமல், தமிழனுக்குரிய இரண்டு இடங்களாய் சிறையும், அரசியலுமே உள்ளது. தேர்தல் அரசியல் என்பது இந்தியா என்ற அமைப்புக்குள் இருக்குவரை நம்மை தொடரப்போவது. தேர்தலால் மக்களுக்கு விளையும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். உலகம் முழுவதிலும் அரசியல் கட்டமைப்புகள் மீது மக்கள் தங்கள் ஆவேசத்தைக் காட்டிவரும் நேரமிது. மக்களாட்சி என ஓதப்படும் ஒரு அமைப்பில் எவ்வளவு ஊழல் நடந்தாலும், ஒடுக்குமுறைகள் நடந்தாலும் என்ன மாற்றம் வருகிறது? மன்னராட்சி முறையைவிட, சர்வாதிகாரத்தைவிட, கொடியது இந்தத் தேர்தல் அரசியல். அதிலாவது மக்கள் போராடினால் சட்டென்று ஒரு மாற்றம் வந்து விடுகிறது. ஆனால் இதில் ஆட்சி மட்டுமே மாறுகிறது. மாற்று இல்லாதபோது இருப்பதைப்பற்றி விவாதித்து நம்மை மெல்லக் கொல்லும் விடத்தை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழினம் மனதிற்குள் அழத் தேர்தலைக் கொண்டாடிய கட்சிகளில் ஒன்று இன்று வெறுப்பணி, அரசியலுக்காக கூட்டணியாகி சிபிஐ விசாரணையை மனதில் கொண்டு சந்திக்கிறது. திமுக வென்றால் ஆட்சியில் பங்கு கேட்க கனிமொழி கைது நடக்கும். தோற்றால் மற்ற மாநிலத் தேர்தல்களை மனதில் கொண்டு காங்கிரசு புனித பிம்பம் காட்ட கைது நடக்கும், எப்படியும் திமுகவிற்கு மனவேதனைதான். மற்றொரு கட்சி எதைசெய்தும் இம்முறை ஆட்சியில் அமர்ந்தே ஆகவேண்டும். மிச்சமிருக்கும் நிர்வாகிகள் கட்சிமாறி அதிமுக காணாமல் போவதை தடுத்தே ஆக வேண்டும் என்பதால் தன் பக்கம் திரும்பாத காங்கிரசை வெட்கம்விட்டு அழைத்துப்பார்த்தது. சுற்றியிருக்கும் சு, சோக்கள் ஓத மதிமுகவை கழட்டி விட்டது, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு, வாக்கு சதவிகிதத்தைக்கொண்டு (அடப்பாவமே!) அமைக்கிறது ஒரு பொருந்தாக்கூட்டணி!.

சின்ன கட்சிகளில் ஒன்று நம் இனம் செத்துவிழுந்தபோது, தேர்தலை புறக்கணிக்கிறேன் என அறிவித்து இருந்தால், அக்கட்சியின் அரசியல் இடம் தமிழகத்தில் இன்று வேறாக இருந்திருக்கும். அப்போதுதான் தன்னிடம் வந்துசேர்ந்த ராமதாசுடன் பேச்சுவார்த்தை முடித்துவிட்டு, எப்போதும் உடனிருந்த தன்னை செயலலிதா தொகுதி பங்கீட்டிற்கு அழைத்தபோதேனும் வெளியே வந்திருக்கலாம் வைகோ. அப்படிசெய்யாமல் தன் பலத்தை நிருபிக்க தானே தேர்தலில் நின்று தோற்றதால் இன்னும் குறைந்து போனது அவரது செல்வாக்கு அம்மாவின் கூடாரத்தில். அப்போதேனும் பொதுவுடமை கட்சிகள், மனக்குறையில் இருக்கும் சங்கங்கள்(கள் இறக்குவோர், சாயபட்டறை, பால் உற்பத்தியாளர்கள், நகைதொழில் புரிவோர்..) மனிதநேய மக்கள் கட்சி, லட்சிய திமுக, சரத், கார்த்திக் கட்சிகள் மற்றும் தேமுதிகவுடன் கூட்டணியமைத்து பார்த்திருக்கலாம். கடைசிவரை வைகோவை காக்க வைத்து கழுத்தறுத்துவிட்டது அதிமுக. மனவேதனையில் மதிமுக ஒதுங்கி நிற்கிறது இத்தேர்தலில்!

சட்டமன்றத்தேர்தலுக்கு ஒரு கூட்டணி, நாடாளுமன்றத்தேர்தலுக்கு பிரிதொரு கூட்டணி என மாறும் மருத்துவர் இத்தேர்தலில் வெல்லும் வாய்ப்பு அதிமுகவிடம் இருக்கிறன என பத்திரிக்கைகள் இத்தனை அலறல் அலறியும் அணி மாறியது ஏன்? அன்புமணியின் மந்திரி பதவி ஒன்றுக்காகத்தான் என மக்கள் நம்புவார்கள். ஆனால் ஏன் என்பது மருத்துவர் கட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!. அவர் கடந்தமுறை போல் முழுமனதுடன் இம்முறை இக்கூட்டணியில் இல்லை.

அன்று மட்டும் வைகோவும், ராமதாசும், திருமாவும் தேர்தலை புறக்கணித்து மக்களுடன் நின்றிருப்பார்களேயனால் வைகோ-ஒன்று ராமதாசு-சைபர் என்ற பரிதாபம் நிகழ்ந்திருக்காது. 2001 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் தொகுதி பங்கீடுகள் நிகழ்ந்திருக்கும். இம்முறை காங்கிரசால் பாமக தப்பித்தது, வைகோவை செயா இப்படித்தான் நடத்தியிருப்பார் என்றாலும் மக்கள் மனதில் வைகோ நின்றிருக்கலாம்.

தமிழக மக்கள் ஒரு ஆட்சியினால் பாதிக்கப்பட்டு அடுத்த தேர்தலில் வேறு கட்சிக்கு வாக்களிப்பார்கள் இது எதிர்ப்பரசியல் என்றெல்லாம் அரசியல் ஆய்வு செய்வோர் தொடர்ந்து எம்.சி.யார் முதல்வராக இங்கு இருக்கமுடிந்ததெப்படி? என்பதை சிந்திக்கவேண்டும். ஒவ்வொரு கட்சியும் உளவுத்துறை தரும் தகவல்களை கொண்டும், தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் டிக் அடித்து கொடுக்கும் வேட்பாளர்களையும், இல்லையெனில் மக்களுடன் கலந்து பழகாமல், அரசியல் தெரியாமல் மொட்டைத் தலையை தடவிக்கொண்டு, பத்திரிக்கைகளில் வரும் புள்ளிவிவரங்களைக் கொண்டு மட்டும் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் மேதாவிகளின் வாய்வார்த்தைகளில் இருந்தும் (இவர்களுக்கு கூட ஒரு காலம், ஒரு கட்சி வந்திருச்சு தமிழ்நாட்டுல! அதிகாரம் செய்ய!. தமிழந்தான் யாரோ தலைவனாக இருக்க செத்த தமிழர்களாகவே கும்பிடு போட்டுட்டு இருக்கிறோம்!, கூட்டணிக்கு அவுங்க காலில விழுந்துகிட்டு!!), பணம் எவ்வளவு செலவு செய்வார்கள் வேட்பாளர்கள் என்பதை கொண்டும், சாதி ஓட்டு அவருக்கு எவ்வளவு இருக்கிறதெனப் பார்த்தும் ஆட்களை நிறுத்துகிறது. மக்கள் பணி செய்ய தகுதியானவர் யார் என்பதை எந்தக்கட்சியும் பார்ப்பதில்லை. நமக்கான அரசியலை மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.

காங்கிரசு??? சுதந்திர இந்தியாவை நெடுங்காலம் ஆண்ட காங்கிரசு. மக்களுக்குச் செய்த நன்மைகளை விட துன்பங்களே அதிகம். சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் காங்கிரசு கதர் இந்திய பாகிசுதான் பிரிவினையால் இரத்தத்தில் நனைந்தது. பிறகு காசுமீர் இரத்தம், வடகிழக்கு இரத்தம், பஞ்சாபியர் இரத்தம், தெலங்கானா இரத்தம் எனத் தொடர்ந்தது... தமிழ் இனத்தின் மீதோ குரூரமாய் தாண்டவம் ஆடிக்களித்தது. பிறரில் இருந்து இரத்தம் பாய்ச்ச காங்கிரசிற்கு அரசியல் ஆதாயமும், பஞ்சாப்பிற்கு சிறிய பழிவாங்கலும் இருந்தது. ஆனால் நம் மீது கொடிய வன்மமும், இனப்பகையும் கொண்டியங்குகிறது காங்கிரசு. ஒரே ஒரு மரணதிற்காய் நிலத்திலும், நீரிலும் நம்மை வாழவிடாமல் துரத்திக் கொல்லும் காங்கிரசை நம்மால் தேர்தலில் மட்டுமே வீழ்த்த இயலும். அனைவரையும் இந்தியாவில் வஞ்சித்த காங்கிரசு நம்மை மட்டுமே எல்லை தாண்டியும் வஞ்சிக்கிறது. அரபுநாடுகளில் மக்களின் தன்னெழுச்சிகண்டு தலையிட்டு அமெரிக்கா போராடும் மக்களுக்கு ஆதரவாக படைகளை அனுப்பி தாக்குகிறது. பிரான்சு உள்ளிட்ட நாடுகளும் தலையிட ஆரம்பித்துவிட்டன.. ஆனால் நாம் கத்திய கத்துகளை எட்டவிடாமல் செய்துவிட்டார்கள் கொடும்பாவிகள். காலம் நெடுகிலும் தன் கையை இரத்தத்தில் நனைத்திருக்கிறது காங்கிரசு. காந்திக்கும் எளிமையை போதுத்தது எம் மண். ஊருக்கு தேசியமும், உலகிற்கு அகிம்சையும் படங்காட்டும் கொலைக்கரம் காங்கிரசு சின்னம். எவரை வேண்டுமானாலும் ஓட்டுப்போட்டு வெல்ல வைப்போம். உங்கள் ஊரில் உங்களுக்குத் தெரிந்தவர் சுயேட்சையாக நிற்கும் தோழரானாலும் சரிதான் ஆனால் காங்கிரசைத் தோற்கடித்து தமிழ் எல்லைக்கு அப்பால் நிறுத்துவோம்!.

80 களில் வந்த பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் கிடைத்தால் பாருங்கள், அதில் செய்தி எழுதும்போது "நம்முதல்வர்(?)" என எழுதியிருப்பார் அய்யா. கோபம், ஆற்றாமை, எள்ளல், பரிதாபம் என எல்லாம் தெரிகிறது ? ல். இந்த ? தான் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது தமிழனின் அரசியல்.

நமக்கான காலம் வர காத்திருப்போம் இன்னும் 5 ஆண்டுகள். அதுவரை? கணிப்பெழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான் வேறவழி?

மொத்தத் தொகுதிகள் : 234

திமுக கூட்டணி தொகுதிகள் :


திமுக : 119 இடங்கள்
காங்கிரசு : 63 இடங்கள்
பா.ம.க : 30 இடங்கள்
விசி : 10 இடங்கள்
கொங்கு நாடு முன்னேற்ற கழகம் : 7 இடங்கள்
இந்திய யூனியன் முசுலிம் லீக் : 3 இடங்கள்
மூவேந்தர் முன்னேற்ற கழகம் : 1 இடங்கள்
பெருந்தலைவர் மக்கள் கட்சி : 1 இடம்


அதிமுக கூட்டணி தொகுதிகள் :


அ.தி.மு.க. 160 இடங்கள்
தே.மு.தி.க. 41 இடங்கள்
பொதுவுடமை (மா) 12 இடங்கள்
பொதுவுடமை (இ) 10 இடங்கள்
மனிதநேய மக்கள் கட்சி 3 இடங்கள்
புதிய தமிழகம் கட்சி 2 இடங்கள்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 2 இடங்கள்
அகில இந்திய மூவேந்தர் முன்னணிகழகம் 1 இடம்
இந்திய குடியரசு கட்சி 1 இடம்
அகில இந்திய பார்வர்டு பிளாக் 1 இடம்
கொங்கு இளைஞர் பேரவை 1 இடம்


திமுக பெரியவர்கள் பலரை ஓய்வில் இருக்க சொல்லிவிட்டது. சிலரது வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வென்றால் முதல்வர் சுடாலிந்தான் என்பதை இது சொல்லுகிறது. அம்மா கட்சி அடிச்சு பிடிச்சு பழையவர்கள் சிலரை இழுத்துவந்திருக்கிறது, இவர்களுடன் போனமுறை வென்றவர்களும், கட்சி மாறியவர்கள் புண்ணியத்தால் போனமுறை தோற்றவர்கள் சிலரும், சில புதியவர்களும் உண்டு. காங்கிரசோ பழையவர்களுடன் இளைஞர் காங்கிரசையும் இணைத்திருக்கிறது. பமகவும், விசிக்களும் எப்போதும் போல் வய்ப்பளித்திருக்கிறது. தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலில் நின்ற பலரையும் மற்றும் புதியவர்களையும் நிறுத்தியுள்ளது. பொதுவுடமை கட்சிகளில் பலர் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் வென்ற முகங்கள்.

அலசலை குமரியில் இருந்து துவங்குவோம். தேர்தலுக்குள் முழுமையாக முடிக்க முடியுமா எனத் தெரியவில்லை... பார்க்கலாம்.